இலவச பயிற்சி அளிக்கும் அரசு ஆசிரியை!

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவிகளின் படிப்புக்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது. நவீன வாய்ப்புகளைப் பயன்படுத்தி மாணவிகள் கைசெலவுக்கு தாங்களே பணம் சம்பாதித்துக் கொள்ள வேண்டும்
இலவச பயிற்சி அளிக்கும் அரசு ஆசிரியை!

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவிகளின் படிப்புக்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது. நவீன வாய்ப்புகளைப் பயன்படுத்தி மாணவிகள் கைசெலவுக்கு தாங்களே பணம் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மொபைல் செயலிகள் குறித்து இலவச பயிற்சி அளித்து வருகிறார் மதுரை மாவட்டம் கருங்காலக்குடி அரசுப்பள்ளி ஆசிரியர் ஆர்.ரேணுகா. தன் பள்ளி மட்டுமல்லாது, பல்வேறு அரசுப் பள்ளிகளுக்குச் சென்று இந்த இலவசப் பயிற்சி அளித்து வருகிறார்.
 வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த ரேணுகாவைச் சந்தித்தோம்:
 "பெண்களின் கல்வித்தரம் உயர்ந்து கொண்ட வருகிறது. ஆனால் தர உயர்வுக்கு பின்னால் உள்ள வலிகளையும் தடைகளையும் நாம் பார்க்கத் தவறிவிடுகிறோம். கிராமப்புற மாணவிகள் வாழ்க்கை இன்னும் வலி மிகுந்ததாகவே இருக்கிறது. எழுதுபொருள்கள், நோட்டு, புத்தகங்கள் என வாங்குவதற்கு என கூடுதல் செலவுக்கு அவர்களுக்கு பணம் தேவைப்படுகிறது. வறுமை, தந்தையின் குடிப்பழக்கம் போன்ற காரணங்களினால் பல மாணவிகள் பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ வகுப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள்.
 அவர்களுக்குத் தேவையான பொருளாதார தேவைகளை அவர்களே தீர்த்துக் கொள்வதன் மூலம் அவர்களின் படிப்பைத் தொடர வைக்கலாம் என்ற யோசனையில் தோன்றியது தான் இந்த மொபைல் செயலி பயிற்சி.
 மாணவிகளுக்கு மூன்று விதமான பயிற்சிகளை அளிக்கிறேன். மொபைல் செயலிகள் மூலம் செல்லிடப்பேசிகளுக்கு ரீசார்ஜ் செய்வது, வீடுகளுக்கு மின்சாரக் கட்டணம் செலுத்தும் பயிற்சி, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான பயிற்சி ஆகியவற்றை அளிக்கிறேன். மாணவிகள் எதிர்கொள்ளும் தடைகளைத் தாண்டி லட்சியத்தை அடைய வைக்கவே இந்த முயற்சியும் பயிற்சியும். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பயிற்சி அளித்துள்ளேன். ஒரு லட்சம் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்பதே இலக்கு'' என்கிறார் ஆசிரியர் ஆர்.ரேணுகா.
 -அருணா பூரணி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com