பிரதமர் பாராட்டிய அதிகாரி!

கர்நாடக மாநில தலைமைச் செயலர் ரத்ன பிரபா. 1992-ஆம் ஆண்டு ராய்ச்சூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது,
பிரதமர் பாராட்டிய அதிகாரி!

கர்நாடக மாநில தலைமைச் செயலர் ரத்ன பிரபா. 1992-ஆம் ஆண்டு ராய்ச்சூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, இந்தன்பூர் கிராமத்தின் வழியே காரில் சென்றார். அப்போது அங்கிருந்த பள்ளியின் அருகே ஒரு சிறுவன் ஆடு மேய்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.
உடனே காரை நிறுத்தி, அந்தச் சிறுவனை அழைத்து, "நீ ஏன் பள்ளிக்குச் செல்லாமல் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கிறாய்?'' என்று அவனிடம் ரத்னபிரபா கேட்டபோது, படிக்க ஆர்வமிருந்தாலும் தன்னுடைய குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பதால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை என்று தெரிவித்துள்ளான் சிறுவன். உடனே ரத்ன பிரபா அந்தச் சிறுவன் பள்ளியில் சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்தார்.
இந்தச் சம்பவம் நடந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது மாநிலத்தின் தலைமைச் செயலராக இருக்கும் ரத்ன பிரபாவை அண்மையில் அவரது அலுவலகத்தில் ஒருவர் வந்து சந்தித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். தன் பெயர் நரசப்பா என்றும், தற்சமயம் காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றுவதாகவும், 27 ஆண்டுகளுக்கு முன்பு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தன்னைப் பள்ளியில் சேர்த்துவிட்டதையும் நினைவுபடுத்தியிருக்கிறார்.
ரத்ன பிரபாவால் பள்ளியில் சேர்க்கப்பட்ட நரசப்பா, பின்னர் அரசு பி.யூ.கல்லூரியில் படித்து முடித்து, ராய்ச்சூர் தாகூர் கல்லூரியில் பி.ஏ.பட்டம் பெற்று பிறகு, போலீஸôக வேண்டும் என்ற ஆர்வத்தில் அதற்கான பயிற்சி பெற்றார்.
"2006-ஆம் ஆண்டு கர்நாடக மாநில ஆயுதப்படையில் பணியமர்த்தப்பட்டேன். படிக்க முடியாமல் போயிருந்தால் தினக்கூலியாக வாழ்க்கையைக் கழித்திருப்பேன். என்னை இந்த உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்த தங்களை பார்த்து நன்றி சொல்லவே வந்தேன்'' என்றும் கூறியிருக்கிறார்.
அண்மையில் தில்லியில் நடைபெற்ற அகில இந்திய ஆட்சியர்கள் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள், கடமைகள் குறித்து பேசுகையில், "கடந்த இரு தினங்களுக்கு முன்பு டிவிட்டரில் பதிவான தகவல் ஒன்றைப் படித்தேன். அதில் கர்நாடக மாநில தலைமைச் செயலராக உள்ள ஒருவர், மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, ஆடு மேய்த்த சிறுவன் ஒருவனைப் படிக்க வைத்ததாகவும், தற்போது அவர் போலீஸ் பணியில் இருப்பதாகவும், அவர் தன்னைச் சந்தித்து நன்றி தெரிவித்ததாகவும் பதிவிட்டிருந்தார்.
மாவட்ட ஆட்சியராக இருந்த அவர் தற்போது தலைமைச் செயலராக உள்ளார். அவரது பெயர் என் நினைவுக்கு வரவில்லை. ஆனால் அவரது நற்செயல் நினைவில் நிற்கிறது. அரசு அதிகாரிகள் நாட்டுக்குச் சேவை செய்வதோடு, இதுபோன்ற சமூக விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்'' என்று ரத்ன பிரபாவின் பெயரைக் குறிப்பிடாமல் புகழ்ந்து பேசியிருக்கிறார்.
இதுகுறித்து ரத்ன பிரபா கூறுகையில்," 27 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தை நினைவுபடுத்தி இன்று நல்ல நிலைக்கு வந்தது குறித்து, என்னைச் சந்தித்து நன்றி தெரிவித்த நரசப்பாவைப் பற்றி டிவிட்டரில் பதிவு செய்தேன். இது குறித்து பிரதமர் என்னைப் பாராட்டுவார் என்று எதிர்பார்க்கவில்லை. அவரது பாராட்டு என்னை மேலும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியுள்ளது'' என்றார்.
-அ.குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com