இலங்கைத் தமிழர்களுக்கு மேலும் 47,000 வீடுகள்: நரேந்திர மோடி

இலங்கையில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக இந்தியா சார்பில் அடுத்த கட்டமாக 47,000 வீடுகள் கட்டித் தரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இலங்கையில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக இந்தியா சார்பில் அடுத்த கட்டமாக 47,000 வீடுகள் கட்டித் தரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இலங்கையில் அனைத்து குடிமக்களும் சமவளர்ச்சி அடையவும், சமமரியாதை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கையில் தனது 2ஆவது நாள் சுற்றுப்பயணமாக தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் யாழ்ப்பாணத்துக்கு பிரதமர் மோடி சனிக்கிழமை சென்றார். யாழ்ப்பாணத்தின் இளவாழை என்னுமிடத்தில் இந்தியாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள 27,000 புதிய வீடுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டார். அப்போது மோடிக்கு அங்கிருந்த பெண்கள், நாகசுர இசையுடன் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது: இங்கிருக்கும் வீடுகளிலுள்ள சுவர்கள், வெறும் செங்கற்களாலும், கற்களாலும் கட்டப்பட்டவை அல்ல. பாதிக்கப்பட்டோரின் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையே இந்த வீடுகள் ஆகும். பாதிக்கப்பட்டோரின் கண்களில் இருந்து வரும் கண்ணீரை துடைக்கும் நபர் என்ற வகையில், இலங்கை சுற்றுப்பயணத்தின் கடைசி நிகழ்ச்சியாக இதில் பங்குபெறுவதை மகிழ்ச்சியாகக் கருதுகிறேன்.

புலம்பெயர்ந்த மக்களுக்காக (தமிழர்களுக்காக) அடுத்த கட்டமாக 47,000 புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்பதை அறிவிக்கிறேன். (மோடியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அங்கிருந்த தமிழர்கள் பெரும் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்). இந்தத் திட்டம், ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த திட்டமாகும். குஜராத்தில் 2001ஆம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்டபிறகு இதுபோன்ற வீடுகள் கட்டும் திட்டம் உதயமானது என்றார் மோடி.

கலாசார மையத்துக்கு அடிக்கல்: இந்தியாவின் நிதியுதவியுடன் ரூ.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள யாழ்ப்பாணம் கலாசார மையத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:

யாழ்ப்பாணத்தில் தனித்தன்மை வாய்ந்த, உலகத் தரத்திலான கலாசார மையத்தை அமைத்து தருவதில் இந்தியா பெருமகிழ்ச்சியடைகிறது. இந்த மையத்தில் நூலகம் ஏற்படுத்தப்பட்டதும், தலைமுறைகளை இணைக்கும் இடமாக இது திகழும். யாழ்ப்பாணம் பகுதி, தனக்கென்று தனிச்சிறப்பு கொண்ட இடமாகும்.

யாழ்ப்பாண மக்கள், பல்வேறு ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்து வருகின்றனர். பல்வேறு பிரச்னைகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். யாழ்ப்பாண மக்களுக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும். யாழ்ப்பாணத்தில் இருந்து அமைதி என்னும் செய்தியை உலகம் தற்போது உணர்ந்து வருகிறது. இந்தியாவும், இலங்கையும் வெறும் அண்டை நாடுகள் மட்டும் அல்ல. இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்று ரீதியிலான தொடர்புகள் உள்ளன என்றார் மோடி.

நிகழ்ச்சியில் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரனும் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், அதிகாரப்பகிர்வுக்கு 13ஆவது அரசியல் சட்டத்திருத்தம் மட்டுமே, இறுதித் தீர்வாகாது என்றார்.

மோடியுடன் விக்னேஷ்வரன் ஆலோசனை: யாழ்ப்பாணத்தில் உள்ள பொது நூலக அறையில், பிரதமர் நரேந்திர மோடியுடன் விக்னேஷ்வரன் தனியே ஆலோசனை நடத்தினார். இதனிடையே, யாழ்ப்பாணத்தில் உள்ள நகுலேஸ்வரம் கோயிலிலும் மோடி வழிபாடு நடத்தினார்.

முன்னதாக, இலங்கையின் புராதன தலைநகரான அனுராதபுரத்தில், பேரரசர் அசோகரின் மகள் சங்கமித்திரையால் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்டு நடப்பட்ட மகாபோதி புனித மரத்தை பிரதமர் நரேந்திர மோடி வழிபட்டார்.

அவருடன் இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் சமரவீரா ஆகியோரும் உடன் சென்றனர். அதைத் தொடர்ந்து, ருவன்வெலிசெயாவில், கி.மு. 140ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஸ்தூபிக்கும் பிரதமர் நரேந்திர மோடி சென்றார்.

நாடு திரும்பினார்: தனது இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, கொழும்பில் இருந்து பிரதமர் மோடி சனிக்கிழமை இரவு இந்தியா திரும்பினார். அவரை கொழும்பு விமான நிலையத்துக்கு வந்து இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேரில் வழியனுப்பி வைத்தார்.

ரயில் சேவையை தொடக்கி வைத்தார்

தலைமன்னார் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய அரசு நிறுவனமான ஐ.ஆர்.சி.என். நிறுவனத்தின் உதவியுடன் மதுசாலை - தலைமன்னார் இடையே அமைக்கப்பட்டுள்ள 63 கிலோ மீட்டர் தொலைவுள்ள பாதையில் ரயில் சேவையை மோடி தொடங்கி வைத்தார்.

இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்குப் பிராந்திய ரயில் பாதை முழுவதும் பலத்த சேதமடைந்தது. அதைத் தொடர்ந்து, அப்பகுதியில் இந்தியாவின் நிதியுதவியுடன் 250 கிலோ மீட்டர் தொலைவுக்குப் புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டது. அதன் கடைசிப் பகுதியான மதுசாலை - தலைமன்னார் இடையே ரயில் சேவை தொடக்கி வைக்கப்பட்டிருப்பதன் மூலம், பல ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கையின் வடபகுதி முழுவதும் ரயில் சேவை மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

2ஆவது தலைவர்

இலங்கையில் உள்நாட்டுப் போருக்குப் பிறகு, யாழ்ப்பாணத்துக்குச் சென்ற 2ஆவது உலகத் தலைவர் மோடியாவார். இதற்கு முன்பு, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com