

இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம், வரும் 11-ஆம் தேதி கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு நாடுகளுக்கும் இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு கடந்த ஆண்டு இறுதி வடிவம் பெற்றது. ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு வந்தார். பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அணுசக்தித் துறையில் ஒத்துழைத்துச் செயல்படுவது என்று இரு பிரதமர்களும் உடன்பாடு கண்டனர். எனினும், சட்டரீதியான சிக்கல்களைத் தீர்க்க வேண்டிய அவசியம் இருந்ததால் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.
இந்நிலையில், ஜப்பானுக்கு பிரதமர் மோடி வரும் 11, 12 ஆகிய தேதிகளில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அப்போது, இந்திய-ஜப்பான் அணுசக்தி ஒப்பந்தம் 11-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக ஜப்பான் நாட்டுப் பத்திரிகையில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
அணுசக்தித் துறையில் ஒத்துழைப்பு நல்குவது என்று கடந்த ஆண்டு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.
அந்த ஒப்பந்தம் பிரதமர் மோடியின் டோக்கியோ பயணத்தின்போது கையெழுத்தாகும். இதன்படி, இந்தியாவுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை ஜப்பான் வழங்கும். அதேவேளையில், இந்தியா அணு குண்டு சோதனை நடத்தினால் இரு தரப்பு ஒத்துழைப்பு நிறுத்திக் கொள்ளப்படும் என்று இந்தியாவும், ஜப்பானும் ஒப்புக் கொள்ளும் என்று தெரிகிறது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம், பாதுகாப்பு ஆகிய துறைகளிலும் நல்லுறவு ஏற்படும். அத்துடன், அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் அணு மின் நிலையங்களைத் தொடங்குவதும் சுலபமாகும். ஏனெனில், அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் ஜப்பானில் இருந்து முதலீடுகளைப் பெறுகின்றன என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானால், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலேயே ஜப்பானுடன் இந்த ஒப்பந்தத்தைச் செய்து கொண்ட முதல் நாடாக இந்தியா விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.