பயங்கரவாதிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை: பாகிஸ்தானுக்கு இந்தியா - பிரிட்டன் கூட்டாக வலியுறுத்தல்

மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்கு கடுமையான தண்டனையை பாகிஸ்தான் வழங்க வேண்டும் என்று இந்தியாவும், பிரிட்டனும்
இந்திய-பிரிட்டன் தொழில்நுட்ப மாநாட்டின் தொடக்க விழாவில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வுடன் கைகுலுக்கும் பிரதமர் நரேந்திர மோடி.
இந்திய-பிரிட்டன் தொழில்நுட்ப மாநாட்டின் தொடக்க விழாவில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வுடன் கைகுலுக்கும் பிரதமர் நரேந்திர மோடி.
Published on
Updated on
2 min read

மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்கு கடுமையான தண்டனையை பாகிஸ்தான் வழங்க வேண்டும் என்று இந்தியாவும், பிரிட்டனும் கூட்டறிக்கையில் வலியுறுத்தியுள்ளன.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் தெரசா மே, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்துவது, பொருளாதார நடவடிக்கைகளில் பரஸ்பரம் ஒத்துழைப்பு அளிப்பது, பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்வது என பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
அப்போது, பதான்கோட் மற்றும் உரி பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்கு தெரசா மே கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார். இந்தச் சம்பவங்களில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபங்களையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.
பிறகு, பயங்கரவாதத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது தொடர்பாக மோடியும், தெரசா மேவும் ஆலோசித்தனர்.
இதைத்தொடர்ந்து இந்தியா - பிரிட்டன் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
சர்வதேச அளவில் மிகப் பெரிய அச்சுறுத்தலாக பயங்கரவாதம் விளங்கி வருகிறது. அதனால் இந்தியாவும், பிரிட்டனும் தனித்தனியே பாதிக்கப்பட்டுள்ளன. பொதுவாக பயங்கரவாதத்தை நல்ல நோக்கமுடைய செயல்பாடுகளாகவோ, தீய நோக்கங்கொண்ட செயல்பாடுகளாகவோ வகைப்படுத்த முடியாது. அப்பாவி மக்களுக்கு எதிராக நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அனைத்துமே கொடுமையான செயல்களே.
பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு உதவுபவர்களையும் தியாகிகளாகச் சித்திரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது (ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் புகழாரம் சூட்டியதைக் கண்டிக்கும் வகையில் இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது).
தெற்காசியப் பிராந்தியம் உறுதியாகவும், வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதாகவும், பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத அமைதிப் பூங்காவாகவும் இருக்க வேண்டும். இந்த நோக்கங்கள் ஈடேற அனைத்து நாடுகளும் அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மும்பையில் அப்பாவி மக்கள் மீதும், பதான்கோட் மற்றும் உரியில் ராணுவ வீரர்கள் மீதும் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவி வந்த பயங்கரவாதிகள் கடுமையான தாக்குதலை அரங்கேற்றினர். மனிதத்தன்மையற்ற இந்தத் தாக்குதல்களில் தொடர்புடைய பயங்கரவாதிகளை பாகிஸ்தான் அரசு, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.
பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை என்பது பயங்கரவாதிகளை வேரறுப்பதோடு நின்றுவிடக்கூடாது. அதற்கும் மேலாக அவர்களுக்கு புகலிடம் அளிப்பவர்களையும், நிதியுதவி அளிப்பவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது அவசியம். இந்த விவகாரத்தில் இந்தியாவும் - பிரிட்டனும் பரஸ்பரம் ஒருங்கிணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளது.
அதேபோல், விசா நடைமுறைகள், திட்டமிட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள், வர்த்தக மேம்பாடு உள்ளிட்டவற்றில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தச் சந்திப்பு குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட உடன்பாடுகள் குறித்தும் செய்தியாளர்களிடம் மோடியும், தெரசா மேவும் கூட்டாக விளக்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com