எல்லையில் "அத்துமீறல்': இந்தியத் துணைத் தூதருக்கு பாகிஸ்தான் அழைப்பாணை

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக, பாகிஸ்தானில் உள்ள இந்தியத் துணைத் தூதர் ஜெ.பி. சிங்குக்கு அந்நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை
Published on
Updated on
2 min read

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக, பாகிஸ்தானில் உள்ள இந்தியத் துணைத் தூதர் ஜெ.பி. சிங்குக்கு அந்நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை அழைப்பாணை அனுப்பியது.
இந்தியத் துணைத் தூதருக்கு பாகிஸ்தான் அழைப்பாணை அனுப்புவது, கடந்த இரண்டு வாரங்களில் இது ஐந்தாவது முறையாகும்.
இதுதொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
எல்லைப் பகுதியில் அமைந்துள்ள நிகியால், ஜான்ரோட் ஆகிய பகுதிகளில் இந்திய ராணுவம் திங்கள்கிழமை அத்துமீறி நடத்திய தாக்குதலில் 1 பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 5 வயது குழந்தை உள்பட 4 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, இந்தியத் துணைத் தூதர் ஜே.பி.சிங்குக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் ஆசிய மற்றும் சார்க் அமைப்பு நாடுகள் பிரிவின் தலைமை இயக்குநர் முகமது ஃபைசல் செவ்வாய்க்கிழமை அழைப்பாணை அனுப்பினார்.
அவரிடம், இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 2003-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்திய ராணுவம் மீறக் கூடாது என்று முகமது ஃபைசல் வலியுறுத்தினார்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் அமைந்துள்ள கிராமங்கள் மீதும், அப்பாவி பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்துவதை இந்திய ராணுவம் உடனடியாக நிறுத்தி, அந்தப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும்
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நிகழ்த்தியதாக கடந்த மாதம் 25, 26, 28 ஆகிய தேதிகளிலும், இந்த மாதம் 1-ஆம் தேதியும் ஜே.பி. சிங்குக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அழைப்பாணை அனுப்பியது
மேலும், இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் உளவு வேலையில் ஈடுபட்டதால், அவர் பாகிஸ்தானில் இருக்க அனுமதிக்க முடியாது என அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் ஜே.பி. சிங்கை கடந்த மாதம் 27-ம் தேதி நேரில் அழைத்துத் தெரிவித்தது.
இந்தியா புறப்பட்டனர் 3 தூதரக அதிகாரிகள்: இதற்கிடையே, உளவு வேலையில் ஈடுபட்டதாக பாகிஸ்தானால் குற்றம் சாட்டப்பட்ட 8 இந்தியத் தூதரக அதிகாரிகளில் 3 பேர், பாகிஸ்தானை விட்டு இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய ராணுவத் தகவல்களை உளவு பார்த்ததாக பாகிஸ்தான் தூதரக அதிகாரி மெஹமூத் அக்தரை இந்திய அரசு நாட்டை விட்டு வெளியேற்றியது. இதற்குப் பதில் நடவடிக்கையாக பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றி வந்த அதிகாரி சுர்ஜித் சிங்கை அங்கிருந்து வெளியேறுமாறு அந்நாட்டு அரசு தெரிவித்தது.
இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றி வரும் ராஜேஷ் குமார் அனுராக், அமர்தீப் சிங், பல்பீர் சிங், அனுராக் சிங், தர்மேந்திரா, விஜய்குமார் வர்மா, மாதவன் நந்தகுமார், ஜெயபாலன் செந்தில் ஆகியோர் இந்தியாவுக்காக உளவு வேலை பார்த்து வந்ததாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.
இவர்களில் அனுராக் சிங், விஜய்குமார் வர்மா, மாதவன் நந்தகுமார் ஆகிய மூவரும் பாகிஸ்தானை விட்டு விமானம் மூலம் இந்தியா புறப்பட்டனர்.
மீதி 5 பேரும் விரைவில் சாலைப் போக்குவரத்து மூலம் வாகா எல்லை வழியே இந்தியா புறப்படவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
இதனிடையே, எட்டு அதிகாரிகளின் பெயர்களையும் படங்களுடன் பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளதையடுத்து அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், அனுராக் சிங் உள்ளிட்டோரை திரும்ப அழைக்க முடிவு எடுக்கப்பட்டதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com