ஈரான் புதிய ஏவுகணை சோதனை: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர ஆலோசனை

அணுஆயுதத்தை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்ட புதிய ஏவுகணையை ஈரான் நாடு சோதித்துள்ளது.

அணுஆயுதத்தை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்ட புதிய ஏவுகணையை ஈரான் நாடு சோதித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் குழு அவசரமாக செவ்வாய்க்கிழமை கூடி ஆலோசனை நடத்தியது.
ஈரான் நாடு அணுகுண்டு தயாரிப்பில் ரகசியமாக ஈடுபட்டிருப்பதாக எழுந்த சந்தேகத்தின்பேரில், அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை மேலை நாடுகள் விதித்தன. இந்நிலையில், ஈரானுக்கும், மேலை நாடுகளுக்கும் இடையே அணுசக்தி விவகாரம் தொடர்பாக கடந்த 2015-ஆம் ஆண்டு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து, ஈரான் அணுகுண்டுகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் "பேலிஸ்டிக்' ரக ஏவுகணைகளை சோதித்து பார்ப்பதற்கு ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் குழு தடை விதித்தது. அதை ஈரான் ஏற்றுக் கொண்டதால், சில தடைகளை மேலை நாடுகள் நீக்கின.
இந்நிலையில், ஈரான் நாடு புதிய பேலிஸ்டிக் ரக ஏவுகணையை தற்போது சோதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த ஏவுகணை சுமார் 600 மைல் தூரம் பறந்து சென்று வெடித்துச் சிதறிவிட்டதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவலை வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க பாதுகாப்புத் துறை ஒருவரும் உறுதிப்படுத்தினார்.
ஈரான் ஏவுகணை சோதனை நடத்தியிருப்பதாக கூறப்படுவது குறித்து, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் குழுவின் கவனத்துக்கு இஸ்ரேல் எடுத்துச் சென்றது. இதையடுத்து, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் குழு செவ்வாய்க்கிழமை அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது.
அமெரிக்கா கருத்து: அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி மார்க் டோனர் கூறுகையில், "இந்த ஏவுகணை சோதனை, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் கட்டுப்பாடுகளுக்கு எதிரானதா? என்பதை அமெரிக்கா ஆய்வு செய்யும்' என்றார்.
அமெரிக்க செனட் சபையிலுள்ள வெளியுறவு விவகாரக் குழுவின் தலைவர் சென். பாப் கார்கர், ஈரான் புதிய ஏவுகணையை சோதித்து பார்த்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரஷியா ஆதரவு: அதேநேரத்தில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடான ரஷியா கூறுகையில், "ஏவுகணை சோதனை நடந்திருக்கும்பட்சத்தில், அது, ஐ.நா. தீர்மானத்தை மீறும் செயல் கிடையாது' என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷிய வெளியுறவுத் துறை இணையமைச்சர் செர்ஜி ரியாப்கோவ், ஈரான் ஏவுகணை சோதனை நடத்தியதை தங்கள் நாடு உறுதி செய்யவில்லை என்றார்.
ஈரான் உறுதிப்படுத்த மறுப்பு: எனினும், புதிதாக ஏவுகணை சோதனை நடத்தியதாக கூறப்படும் தகவலை உறுதிப்படுத்த முடியாது என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவீத் ஜரீப் தெரிவித்துள்ளார். அணுசக்தி விவகாரம் தொடர்பான ஒப்பந்தத்துக்கும், ஈரானின் ஏவுகணை திட்டத்துக்கும் தொடர்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com