

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் ஃபிளின் தனது பதவியிலிருந்து விலகுவதாக திங்கள்கிழமை இரவு திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.
அந்நாட்டின் அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதும், முன்னாள் மூத்த ராணுவ அதிகாரியான மைக்கேல் ஃபிளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். புதிய அரசின் முதல் நியமனங்களில் ஒன்றாக அது அமைந்தது.
இந்த நிலையில், அவர் அந்தப் பதவியை ஏற்கும் முன்பே, அமெரிக்காவுக்கான ரஷிய தூதரை சந்தித்துப் பேசினார் என்ற செய்தி வெளியானது.
பல்வேறு நாடுகளின் அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், தூதர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் பேசினார். பதவியேற்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக, அதிபர், துணை அதிபருடன் நடைபெற்ற நேர்காணலின்போது அவர்களிடம் அது குறித்து அவர் தெரிவித்தார். ஆயினும், ரஷிய தூதருடன் நடைபெற்ற உரையாடலைக் குறிப்பிடத் தவறிவிட்டார் என்று கூறப்பட்டது. இதனை சட்ட அமைச்சகம் சுட்டிக் காட்டியது. இந்த சம்பவம் காரணமாக, ஃபிளின்னை ரஷியா பிற்பாடு மிரட்டும் வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க சட்ட அமைச்சகம் தெரிவித்தது.
இதையடுத்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பிலிருந்து விலகுவதாக மைக்கேல் ஃபிளின் அறிவித்தார்.
அதிபருக்கு எழுதிய ராஜிநாமா கடிதத்தை அவர் செய்தியாளர்களிடம் வெளியிட்டார். அதில் குறிப்பிட்டிருப்பதாவது:
பதவி ஏற்பதற்கு முன்னர், ரஷிய தூதருடன் நடந்த சந்திப்பு குறித்த முழு விவரங்களை வெளியிடாதது குறித்து மன்னிப்பு கோருகிறேன். தேசிய பாதுகாப்பு செயலர் பொறுப்பு ஏற்கவுள்ள நிலையில், பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர்கள், பாதுகாப்பு அமைச்சர்கள், தூதர்கள் ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். ஆட்சி மாற்றத்தை முன்னிட்டு, சுமுகமான உறவை மேற்கொள்ள அதனைச் செய்தேன். ரஷிய தூதருடனான உரையாடல் விவரம் அதில் தவறுதலாக விடுபட்டது. இதனை நேரில் அதிபரிடமும் துணை அதிபரிடமும் ஏற்கெனவே விளக்கியுள்ளேன். அவர்கள் அதனை ஏற்றனர். இந்த விவகாரம் சர்ச்சைக்கு உள்ளானதைத் தொடர்ந்து எனது பதவியிலிருந்து விலகுகிறேன் என்று தனது ராஜிநாமா கடிதத்தில் மைக்கேல் ஃபிளின் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் வேட்பாளர் தேர்வின்போது டிரம்ப்புக்கு பல தரப்புகளிலிருந்தும் எதிர்ப்பு வந்தபோதிலும், அவரைத் தொடர்ந்து ஆதரித்து வந்தார் மைக்கேல் ஃபிளின்.
கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, அவரைத் துணை அதிபர் வேட்பாளராக டிரம்ப் அறிவிப்பார் என்று கூட எதிர்பார்க்கப்பட்டது.
இறுதியில் முக்கியத்துவம் வாய்ந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஆயினும், பதவி ஏற்பதற்கு முன்னர், ரஷிய தூதர் செர்கேய் கிஸல்யாக்குடன் அதிகாரபூர்வமற்ற முறையில் பேசிய விவரத்தை வெளியிடாதது ஃபிளின் பதவியைப் பறித்துவிட்டது. அவரது பதவிக் காலம் வெறும் 3 வாரங்கள் மட்டுமே நீடித்தது.
இடைக்கால தேசிய பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் ராணுவ தளபதி கீத் கெல்லாக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் 1967-ஆம் ஆண்டு முதல் 2003-ஆம் ஆண்டு வரை ராணுவத்தில் பணியாற்றி மூத்த தளபதியாக ஓய்வு பெற்றவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.