பூமியை போன்ற 7 கிரகங்கள் நாசா கண்டுபிடிப்பு

பூமியைப் போன்று 7 கிரகங்கள் இருப்பதை அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான "நாசா'வின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியை போன்ற 7 கிரகங்கள் நாசா கண்டுபிடிப்பு
Published on
Updated on
2 min read

பூமியைப் போன்று 7 கிரகங்கள் இருப்பதை அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான "நாசா'வின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நமது பூமியில் இருந்து சுமார் 39 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த கிரகங்கள் உள்ளன. இவற்றில் 3 கிரகங்களில் தண்ணீர் உறையாமல் நீர்மத்தன்மையுடன் இருப்பதால், உயிரினங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நாசா விஞ்ஞானிகளும், பெல்ஜியத்தைச் சேர்ந்த ஆய்வுக் குழுவினரும் இணைந்து புதிய கோள்கள், அவற்றில் உயிரினங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் குறித்து தீவிரமாக ஆய்வு நடத்தி வந்தனர். இந்நிலையில், பூமியைப் போன்ற அளவும், சில தன்மைகளும் உடைய 7 கிரகங்களை அவர்கள் கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்துள்ளனர்.

டிராபிஸ்ட்-1: இந்த 7 கிரகங்களும் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி அமைந்துள்ளன. இதற்கு "டிராபிஸ்ட்-1' எனப் பெயரிடப்பட்டுள்ளது. அந்த நட்சத்திரம் ஒளிரும் தன்மை சூரியனைவிட 2,000 மடங்கு குறைவு. எனவே, இந்தக் கிரகங்களில் அதிக குளிர் நிலவி வருகிறது. மையமாக அமைந்துள்ள நட்சத்திரத்துக்கு அருகில் உள்ள கிரகத்தில் குளிர் அதிகமாகவும், அடுத்தடுத்து அமைந்துள்ள கிரகங்களில் குளிர் குறைவாகவும் உள்ளது.

இரவு, பகல் மாற்றம் இல்லை: பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவதால் நமக்கு இரவு, பகல் மாறி மாறி வருகிறது. ஆனால், இந்த 7 கோள்களும் ஒரே கோணத்தில்தான் நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. எனவே, இவற்றில் பகல் இருக்கும் பகுதி எப்போதும் பகலாகவும், இரவு இருக்கும் பகுதி எப்போதும் இரவாகவும்தான் இருக்கும். பகல் பகுதியில் இருந்து இரவுப் பகுதிக்கு அதிவேகமாக காற்று வீசி வருகிறது. இதனால், மாறுபட்ட கால நிலை நீடிக்கும்.

அருகருகே அமைவு: இந்த 7 கிரகங்களும் ஒரு நாளில் கண்டுபிடிக்கப்படவில்லை. முதலில் ஒரு கிரகம் மட்டுமே பூமியை ஒத்து இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். ஆனால், அடுத்தடுத்து அமைந்திருந்த கிரகங்களை ஆய்வு செய்தபோது மொத்தம் 7 கிரகங்களும் பூமியைப் போன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய குடும்பத்தின் கிரகங்கள் அமைந்திருக்கும் தொலைவை ஒப்பிட்டால், இந்த 7 கிரகங்களும் ஒன்றுக்கு மற்றொன்றுக்கு சற்று அருகில்தான் அமைந்துள்ளன. அந்த கிரகங்களின் ஒன்றில் மனிதர் ஒருவர் நின்றால், மற்றொரு கிரகத்தின் தரை அமைப்பையும், அங்குள்ள மேகங்களையும் எளிதாகப் பார்க்க முடியும். அதாவது, நாம் பூமியில் இருந்து நிலவைப் பார்ப்பதைவிட மிக அருகில் அடுத்த கிரகங்களைப் பார்க்க முடியும்.

குறிப்பிட்ட 3 கிரகங்களில் தண்ணீர் அதிகம் இருப்பதால் உயிரினங்கள் ஏற்கெனவே உருவாகியிருப்பதற்கும், இனி மேல் புதிதாக உருவாவதற்கும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. அங்கு உயிரினங்கள் வசிக்க வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து விஞ்ஞானிகள் இப்போது தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
நமது பூமி சூரியனை மையமாகக் கொண்டு அமைந்துள்ளதுபோல இந்த 7 கிரகங்களும் ஒரு நட்சத்திரத்தை மையமாகக் கொண்டு செயல்படுகின்றன. நாசாவின் "ஸ்பிட்சர் ஸ்பேஸ்' தொலைநோக்கி மூலம் விஞ்ஞானிகள் இந்த கிரகங்களைக் கண்டறிந்துள்ளனர். விண்வெளி ஆய்வுத் துறையில் இது முக்கிய மைல் கல்லாகக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com