

தான் பதவியேற்றதற்குப் பிறகு கொண்டுவரப்பட்டுள்ள குடியேற்ற விதிமுறைகளில் கடுமையைக் குறைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.
தனது முதல் நாடாளுமன்ற உரையில் இந்த அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப், தகுதி அடிப்படையில் பணியாளர்களை அமெரிக்காவுக்குள் அனுமதிக்கும் முறையைக் கடைப்பிடிக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.
இது, இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் அறிவிப்பு என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து, தேர்தல் பிரசாரத்தின்போது தான் அளித்திருந்த வாக்குறுதியின்படி, முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இராக், ஈரான், யேமன், லிபியா, சிரியா, சூடான், சோமாலியா ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்குத் தடை விதிக்கும் உத்தரவை அவர் பிறப்பித்தார்.
இது அமெரிக்காவிலும், உலக நாடுகளிலிலும் பெரும் சர்ச்சையை எழுப்பியது. இந்த நிலையில், வெளிநாட்டுப் பணியாளர்களை அமெரிக்காவில் அனுமதிப்பதற்கான ஹெ1பி நுழைவு இசைவு (விசா) வழங்குவதற்கான விதிமுறைகளையும் கடுமையாக்கி அவர் உத்தரவிட்டார்.
இது, தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களை பெருமளவில் அமெரிக்காவுக்கு அனுப்பி வரும் இந்தியாவை பெரிதும் கவலையடையச் செய்தது.
இந்தச் சூழலில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் முதல்முறையாக டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
கனடா, ஆஸ்திரேலியா போன்ற உலகின் பல்வேறு நாடுகளும் தகுதி அடிப்படையில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை தங்கள் நாடுகளுக்குள் குடியேற அனுமதிக்கின்றன.
அந்த முறையை இனி அமெரிக்காவும் கடைப்பிடிக்கும்.
அமெரிக்காவில் தற்போது பயிற்சித் திறன் குறைவான வெளிநாட்டுப் பணியாளர்கள், மிக மலிவான சம்பளத்தில் பணியமர்த்தப்படுகிறார்கள். இதனால் உள்ளூர் பணியாளர்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
அதற்குப் பதில் தகுதியின் அடிப்படியில் மட்டுமே வெளிநாட்டுப் பணியாளர்களை அமர்த்தினால் ஏராளமான பணம் சேமிக்கப்படுவதோடு, உள்நாட்டுப் பணியாளர்களுக்கும் நல்ல சம்பளம் கிடைக்க வழி ஏற்படும்.
அமெரிக்கப் பணியாளர்களின் நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல், குடியேற்ற விதிகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
தற்போது இந்தியாவில் தேர்ச்சி பெற்ற பல தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் அமெரிக்காவில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
தகுதி அடிப்படையிலான அனுமதி வழங்கப்பட்டால், ஹெச்1பி விசாவுக்கான புதிய கட்டுப்பாடுகள் இந்தியர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என நம்பப்படுகிறது.
இந்தியப் பொறியாளர் படுகொலைக்குக் கண்டனம்
கான்சாஸ் நகரில் இந்தியப் பொறியாளர் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தனது நாடாளுமன்ற உரையில் டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ’’அண்மைக்காலமாக யூதர்களின் மையங்களிலும், அவர்களது கல்லறைக் கூடங்களிலும் அவமானப்படுத்தும் வகையிலான தாக்குதல்கள், கான்சாஸ் நகரில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு ஆகியவற்றை, பல்வேறு சமூகத்தினராக இருந்தாலும் மற்றவர்கள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்களை ஒருங்கிணைந்து எதிர்க்கும் அமெரிக்காவின் வழக்கப்படி வன்மையாகக் கண்டிப்போம்'' என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.