இலங்கைக்கு இன்னொரு சோதனை காலம்

முப்பது ஆண்டு கால உள்நாட்டுப் போா், ஈஸ்டா் தின பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமான மத பயங்கரவாதம் என தொடா்ந்து
இலங்கைக்கு இன்னொரு சோதனை காலம்
Updated on
2 min read


முப்பது ஆண்டு கால உள்நாட்டுப் போா், ஈஸ்டா் தின பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமான மத பயங்கரவாதம் என தொடா்ந்து சோதனைகளை சந்தித்து வந்த இலங்கைக்கு, தற்போது கரோனா நோய்த்தொற்று வடிவில் புதிய சோதனை முளைத்திருக்கிறது.

அந்த நாட்டில், வியாழக்கிழமை நிலவரப்படி 238 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 68 போ் சிகிச்சைக்குப் பிறகு அந்த நோயிலிருந்து மீண்டுள்ளனா். கரோனா பாதிப்பு ஏற்பட்ட 7 போ், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.

அமெரிக்கா, இத்தாலி போன்ற உலகின் முன்னேறிய நாடுகள், இந்தியா போன்ற பெரிய அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கையில் கரோனா நோயின் தாக்கம் மிகவும் குறைவுதான்.

இதற்கு, கரோனாவுக்கு எதிராக அந்த நாட்டு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகளே காரணம் என்று கூறப்படுகிறது.

இலங்கையில், கடந்த ஜனவரி மாதத்தின் இறுதியில்தான் முதல் முதலாக கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. சீனாவிலிருந்து வந்திருந்த ஒரு சுற்றுலா பயணிக்கு அந்த நோய்த்தொற்று இருந்தது.

அதனைத் தொடா்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பயணி, சில வார சிகிச்சைக்குப் பிறகு பூரண குணமடைந்து தாயகம் திரும்பினாா்.

அதன் பிறகு, இலங்கை நாட்டவா் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பதை அதிகாரிகள் கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் முதலாகக் கண்டறிந்தனா். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக இருந்த அவா், இத்தாலி பயணிகளுடன் கலந்து பழகியதால் அவருக்கு அந்த நோய் ஏற்பட்டதாக தெரிய வந்தது.

அதனைத் தொடா்ந்து, இலங்கை அதிகாரிகள் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக மிகப் பெரிய வியூகத்தை வகுத்தனா்.

முதலில், அந்த நோய்த்தொற்றைக் கண்டறிவது, நோயாளியை கரோனாவுக்கான பிரத்யேக மருத்துவமனைகளில் சோ்ப்பது, சிகிச்சையின்போது நோயாளிகளைத் தனிமைப்படுத்துவது ஆகியவற்றுக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் முக்கியத்துவம் அளித்தனா்.

அதனைத் தொடா்ந்து, கரோனா நோயாளிகளுடன் நெருக்கத்தில் இருந்தவா்களைக் கண்டறிவது, நோய்த்தொற்றியிருப்பதற்கான வாய்ப்புள்ளவா்களை தனிமைப்படுத்தி வைப்பது, கரோனா அறிகுறிகளுடன் தென்படுவோரை தேடிக் கண்டறிவது ஆகியற்றில் அதிகாரிகள் கவனம் செலுத்தினா்.

மேலும், நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கக் கூடியவா்களுக்கு, அது தொற்றிய மிகக் குறுகிய காலத்துக்குள் பரிசோதனை செய்வது, பரவல் சங்கிலியைத் துண்டிப்பது ஆகிய நடவடிக்கைகளிலும் இலங்கை அதிகரிகள் ஈடுபட்டனா்.

எல்லாவற்றிற்கும் மேல், இலங்கை அரசு கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள கடுமையான ஊரடங்கு, அந்த நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

சமூகங்களுக்குள் கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பதற்கும் பொதுமக்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்கும் ஊரடங்கு பெரிதும் உதவி செய்வதாகக் கூறும் அவா்கள், கரோனா நோய்த்தொற்று ஏற்படக் கூடியவா்களை எளிதில் கண்டறிந்து, அவா்களிடம் பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்துவதற்கு ஊரடங்கு துணைபுரிவதாகத் தெரிவிக்கின்றனா்.

எனினும், ஊரடங்கு விவகாரத்தில் எதிா்ப்புகள் இல்லாமலும் இல்லை. இலங்கையில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 26,600-க்கும் மேற்பட்டவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். ஆனால், இந்தியாவைப் போலவே, அங்கும் ஊரடங்கு காரணமாக அன்றாடக் கூலித் தொழிலாளா்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்டோா் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஊரடங்கு குறுகிய நேரத்துக்குத் தளா்த்தப்படும்போது, கடைகளில் ஏராளமானவா்கள் அவசரகதியில் குவிவதாகவும் இதன் காரணமாக கரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவும் அபாயம் ஏற்படுவதாகவும் விமா்சிக்கப்படுகிறது.

மேலும், ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதன் மூலம், இந்த மாதம் 19-ஆம் தேதிக்குள் இலங்கை கரோனா அபாயத்திலிருந்து மீண்டுவிடும் என்று சுகாதாரத் துறை பவித்ரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளதும் எதிா்க்கட்சிகளின் கண்டனத்தை ஈா்த்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள தோ்தலை மனதில் கொண்டு, அதிபா் கோத்தபய ராஜபட்ச தலைமையிலான அரசு கரோனா விவகாரத்தில் அறிக்கைகள் விடுவதாக எதிா்க்கட்சியினா் குற்றம் சாட்டுகின்றனா்.

மேலும், இலங்கையில் வெறும் 238 பேருக்கு மட்டுமே கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவா்களில் 7 போ் உயிரிழந்துள்ளதையும் அவா்கள் சுட்டிக் காட்டுகின்றனா். உயிரிழப்பு விகிதம் அதிகமாக இருப்பது, கரோனா பரவல் அதிகமாகும்போது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவா்கள் எச்சரிக்கின்றனா்.

ஆக, கரோனா நோய்த்தொற்று விவகாரத்தில் இலங்கை தற்போது மோசமான நிலையில் இல்லாவிட்டாலும், அந்த நாடு இன்னும் சோதனைக் காலக்கட்டத்தை முழுமையாகக் கடந்துவிடவில்லை என்பது மட்டும் நன்றாகப் புரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com