திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

50. தூண்டு சுடர்மேனி - பாடல் 10

பெரிய குன்றாகிய கோவர்த்தன மலையை

Updated On :28 பிப்ரவரி 2017, 12:07 pm

மாக்குன்று எடுத்தோன் தன் மைந்தனாகி மாவேழம் வில்லா
                மதித்தான் தன்னை
நோக்கும் துணைத் தேவர் எல்லாம் நிற்க நொடி வரையில்
            நோவ விழித்தான் தன்னைக்
காக்கும் கடல் இலங்கைக் கோமான் தன்னைக் கதிர் முடியும்
                கண்ணும் பிதுங்க ஊன்றி
வீக்கம் தவிர்த்த விரலார் போலும் வெண்காடு மேவிய
                    விகிர்தனாரே
 

விளக்கம்

தாட்சாயணியின் பிரிவால் வருந்திய சிவபிரான் யோகத்தில் ஆழ்ந்தார். பார்வதி தேவி, இமவானின் மகளாக வளர்ந்துவந்தார். சூரபத்மனை அழிப்பதற்காக சிவபிரானின் அம்சம் பொருந்திய மகன் தோன்ற வேண்டும் என்பதால் தேவர்கள், சிவபிரான் பார்வதி தேவியின் திருமணம் விரைவில் நடக்க வேண்டும் என்று விரும்பினார்கள். எனவே தவநிலையில் ஆழ்ந்து இருந்த சிவபிரானின் மோனநிலையை மாற்ற, மன்மதனின் உதவியை நாடினார்கள். முதலில் மன்மதன், சிவபிரானின் தவத்தைக் கலைப்பதற்கு உடன்படவில்லை. தாங்கள் உடன் வந்து மன்மதனுக்கு பக்கபலமாக நிற்பதாக தேவர்கள் கூறினார்கள். அதனால் திருமால், பிரமன், இந்திரன் மற்றுமுள்ள தேவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி மன்மதன், சிவபிரானின் தவத்தைக் கலைக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டிய நிலை ஏற்பட்டது. இதே கருத்துதான், தேவர்கள் முன்னிலையில், மன்மதன் எரிக்கப்பட்டான் என்று சில தேவாரப் பதிகங்களில் கூறப்பட்டுள்ளது. மன்மதனின் முயற்சிக்கு உதவியாக, தென்றல் வீசியதையும், குயில் கூவிய சூழ்நிலையும் குறிப்பிடும் அப்பர் பெருமானின் பாடல் (4.14.9) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. மதனன் = மன்மதன். கழை = கரும்பு. மழைவடி வண்ணன் = திருமால். மகவோன் = இந்திரன். துணையாக இருப்போம் என்று தேவர்கள், மன்மதனுடன் வந்த போதும், அவர்களால் ஏதும் உதவி செய்ய முடியாமல், மன்மதன் எரிந்ததை வேடிக்கை தான் பார்க்க முடிந்தது என்ற செய்தியை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

கழைபடு காடு தென்றல் குயில் கூவ அஞ்சு கணையோன்
                            அணைந்து புகலும்
மழை வடிவண்ணன் எண்ணி மகவோனை விட்ட மலரான
தொட்ட மதனன்
எழில் பொடி வெந்து வீழ இமையோர் கணங்கள் எரி என்று                                         இறைஞ்சி அகலத்
தழல் படு நெற்றி ஒற்றை நயனம்சிவந்த தழல் வண்ணன் எந்தை                                     சரணே

மாக்குன்று = பெரிய குன்று, இங்கே கோவர்த்தன மலை. வேழம் = கரும்பு. கோவர்த்தன மலையை எடுத்து, ஆய்ப்பாடியின் மக்களையும் பசுக்களையும் காப்பாற்றிய கண்ணனின் செயல் இங்கே குறிப்பிடப்படுகின்றது. கண்ணனுக்கும் ருக்மணிதேவிக்கும் பிறந்த பிரத்யும்னன் மன்மதனின் அவதாரமாக கருதப்படுகின்றான். அதனால் தான் மன்மதனை இங்கே அப்பர் பிரான், கண்ணனின் மகன் என்று குறிப்பிடுகின்றார். துணையாக வந்த தேவர்கள், உதவி ஏதும் செய்யமுடியாமல் நின்ற நிலை இங்கே கூறப்படுகின்றது. வீக்கம் = மிகுதி, செருக்கு மிகுந்து இருந்த அரக்கன் ராவணன்.

பொழிப்புரை

பெரிய குன்றாகிய கோவர்த்தன மலையை எடுத்து, கோகுலத்து மக்களையும் ஆநிரைகளையும் காத்த கண்ணனின் மகனாகிய மன்மதன், கரும்பினை வில்லாக ஏந்தி மலர்க் கணைகளைத் தொடுத்து தவக்கோலத்தில் இருந்த சிவபெருமான் மீது எய்த போது, உனக்குத் துணையாக நாங்கள் வருவோம் என்று உறுதியாக கூறி மன்மதனை சிவபெருமானின் தவத்தைக் கலைக்க முயற்சி செய்யுமாறு தூண்டிய தேவர்கள் அனைவரும் உதவி ஏதும் செய்ய முடியாமல், வேடிக்கை பார்க்கும் வண்ணம், அவர்களின் கண்ணெதிரே, ஒரு நொடியில் மன்மதன் எரிந்து விழுமாறு தனது நெற்றிக்கண்ணால் விழித்தவன் சிவபெருமான். நான்கு புறங்களிலும் கடலால் சூழப்பட்ட இலங்கைத் தீவுக்கு அரசனாகிய அரக்கன் ராவணின் ஒளிவீசும் மகுடம் தாங்கிய தலைகளும் கண்களும் நசுங்கி வெளியே பிதுங்கி விழுமாறு, தனது கால் விரலால் கயிலை மலையினை அழுத்தி மலையின் கீழே நசுங்குமாறு செய்தவன் சிவபெருமான். இவ்வாறு அரக்கனது செருக்கினை அடக்கிய சிவபெருமான், வெண்காடு தலத்தில் பொருந்தி உறைகின்றார்.


முடிவுரை

விகிர்தன் என்று அழைத்தற்கு பொருத்தமாக ஒவ்வொரு பாடலிலும் பெருமானின் மாறுபட்ட செயல்கள் சுவையாக குறிப்பிடப்பட்டுள்ள பதிகம். இந்த பதிகத்தின் முதல், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம், மற்றும் ஏழாம் பாடல்கள் அகத்துறை அமைப்பில் அமைந்த பாடல்கள் ஆகும். இந்த ஆறு பாடல்களிலும், பெருமானின் மேல் தீராத காதல் கொண்ட அப்பர் நாயகியின் கற்பனையில் விளைந்த காட்சிகள் மிகவும் சுவையாக கொடுக்கப்பட்டு, இறைவனைச் சென்று அடைய விரும்பும் தனது ஏக்கத்தை அப்பர் பிரான் வெளிப்படுத்துகின்றார். அனைத்து உயிர்களும் இவ்வாறு தன்னை அடைய ஆசை கொண்டு, அந்த ஆசை நிறைவேறும் வண்ணம், தன்னை மாற்றிக் கொள்ளவேண்டும் என்பதே இந்த பதிகத்தின் கருத்து. அப்பர் பெருமானை பின்பற்றி, நாமும் இறைவன்பால் தீராத காதல் கொண்டு, அவனது திருவடிகளைச் சென்றடைய முயற்சி செய்வோமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.