/

ரூ.104 கோடியில் வேலூர்-குடியாத்தம் புறவழிச் சாலைக்கு நில எடுப்புப் பணி தொடக்கம்: ஆட்சியர் தகவல்

வேலூர்-குடியாத்தம் புறவழிச் சாலை ரூ. 104 கோடியில் அமைப்பதற்கான நில எடுப்புப்

Updated On :7 டிசம்பர் 2018, 7:47 pm

வேலூர்-குடியாத்தம் புறவழிச் சாலை ரூ. 104 கோடியில் அமைப்பதற்கான நில எடுப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலூர் மாவட்டத்தில் வேலூர் தேசிய நெடுஞ்சாலை 2016-17-ஆம் திட்டப் பணிகளில் மங்களூர் - விழுப்புரம் சாலையை அகலப்படுத்தவும், வேலூர் மற்றும் குடியாத்தம் நகர்ப்புறங்களில் மக்கள் நடமாட்டம் மற்றும் குடியிருப்புகள் அதிகமுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், விரிவான திட்ட அறிக்கை மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகத்தால் பரிசீலிக்கப்பட்டு, ரூ.104 கோடி மதிப்பீட்டில் தற்போது வேலூர் மற்றும் குடியாத்தம் புறவழிச் சாலைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அதற்கான நில எடுப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
குடியாத்தம் புறவழிச் சாலை தேசிய நெடுஞ்சாலை அலகின் மூலம் சுமார் 7 கி.மீ. நீளத்துக்கு செயல்படுத்தப்பட உள்ளது. இப்புறவழிச் சாலை மங்களூர் - விழுப்புரம் சாலையில் (தே.நெ.234) குடியாத்தம் நகருக்கு முன்பாக இடதுபுறம் பிரிந்து நெல்லூர்பேட்டை, சீவூர், பாக்கம், பிச்சனூர், கொண்டசமுத்திரம் மற்றும் சேத்துவாண்டை கிராமங்கள் வழியாகச் சென்று, காட்பாடி சாலையில் இடதுபுறம் இணைகிறது. 
அதேபோல வேலூர் புறவழிச் சாலை தேசிய நெடுஞ்சாலை அலகின் மூலம் சுமார் 20.700 கி.மீ. நீளத்துக்கு அமைக்கப்பட உள்ளது. இப்புறவழிச் சாலை காட்பாடி சாலையில் லத்தேரிக்கு முன்பாக வலதுபுறம் பிரிந்து லத்தேரி, அன்னங்குடி, திருமணி, சோழமூர், கொத்தமங்கலம், பொய்கை, புத்தூர், தெள்ளூர், சேக்கனூர், அரியூர், பென்னாத்தூர், சாத்துமதுரை, நெல்வாய் கிராமங்கள் வழியாக, மங்களூர் - விழுப்புரம் சாலையில் நெல்வாய் பகுதியில் இணைகிறது. 
 வேலூர் புறவழிச் சாலையில் பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம், சென்னை-சேலம் இருப்புப் பாதை (லத்தேரி அருகில்) மீது ஒரு ரயில்வே மேம்பாலம், காட்பாடி - விழுப்புரம் இருப்புப் பாதை (சாத்துமதுரை அருகில்) மீது ஒரு ரயில்வே மேம்பாலம், ராணிப்பேட்டை - கிருஷ்ணகிரி (தே.நெ.48) ஆறுவழிச் சாலையின் (பொய்கை அருகில்) மீது ஒரு மேம்பாலம் மற்றும் நான்கு சிறிய வாகன மேம்பாலங்களும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 இப்புறவழிச் சாலை பொதுமக்களுக்கு நில எடுப்பின்போது, அதிக பாதிப்பு வராமல் மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
 இப்புறவழிச் சாலை அமைப்பதற்கான நில எடுப்புப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இவ்விரு புறவழிச் சாலைகள் மூலம் வேலூர், காட்பாடி, குடியாத்தம் ஆகிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும், பயண நேரமும் குறையும். எரிபொருள் விரயம், சாலை விபத்துகள் குறைய வாய்ப்புள்ளது. வேலூர் மாவட்டத்தில் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் சாலைப் போக்குவரத்து மேம்பாட்டின் முக்கிய அங்கமாக வேலூர் மற்றும் குடியாத்தம் புறவழிச் சாலைகள் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.