நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி திமுக வியாழக்கிழமை நடத்தும் மனித சங்கிலிப் போராட்டத்துக்கு நமது கொங்கு முன்னேற்றக் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, நமது கொங்கு முன்னேற்றக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலர் எம்.தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. தேவையான காலக்கெடு வழங்காமல் நீட் தேர்வு முறையை மத்திய அரசு அறிவித்ததால், தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், நீட் தேர்வு வினாக்கள் அனைத்தும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்பட்டதாலும், ஒரே மாதிரியான கேள்வித்தாள் முறை இல்லாமல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு விதமான கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டதாலும் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு சிரமத்தை ஏற்படுத்தியது.
மேலும், கிராமப்புறங்களில் படித்த மாணவர்கள் தங்களின் திறமையை வெளிக்கொணர்வதற்கு நீட் தேர்வு முறை மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால், அந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக மாணவர்களுக்கு கிடைக்கப்பெறும் வாய்ப்புகள் பறிபோவதுடன், அண்டை மாநில மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்க வழி செய்கிறது. எனவே, மத்திய அரசு தேவையான காலக்கெடு வழங்கி பாடத் திட்டத்தை முன்னரே அறிவித்து, வரும் காலங்களில் இதை அமல்படுத்தலாம்.
எனவே, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தியும், மாநில அரசு அதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டியும் திமுக சார்பில் வியாழக்கிழமை நடைபெறும் மனித சங்கிலிப் போராட்டத்துக்கு நமது கொங்கு முன்னேற்றக் கழகம் ஆதரவு தெரிவிப்பதுடன், அவர்களோடு போராட்டத்திலும் பங்கேற்க உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.