விவசாய மின் இணைப்புக்கு 4.50 லட்சம் பேர் காத்திருப்பு: மாற்றுக் கொள்கை அவசியம்

விவசாய மின் இணைப்பு கோரி சுமார் 4.50 லட்சம் பேர் காத்திருக்கும் நிலையில், வேளாண் உற்பத்தியும், விவசாயிகள் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாமல் இருக்க புதிய கொள்கையினை உருவாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
விவசாய மின் இணைப்புக்கு 4.50 லட்சம் பேர் காத்திருப்பு: மாற்றுக் கொள்கை அவசியம்

விவசாய மின் இணைப்பு கோரி சுமார் 4.50 லட்சம் பேர் காத்திருக்கும் நிலையில், வேளாண் உற்பத்தியும், விவசாயிகள் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாமல் இருக்க புதிய கொள்கையினை உருவாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 ஏரி மற்றும் ஆற்றுப் பாசனப் பரப்பளவு குறைந்து, தமிழகத்தின் மொத்த விவசாயப் பரப்பளவில் 55 சதவீதம் நிலத்தடி நீரைப் பயன்படுத்தித்தான் விவசாயம் என்று நிலைமை மாறியிருக்கிறது. சுயநிதித் திட்டத்தில் பணம் கட்டினால் உடனே மின் இணைப்பு கிடைத்து விடும் என நம்பி பணம் கட்டிய விவசாயிகளும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
 விவசாய சங்கங்களுக்கு மின் வாரியம் அளித்துள்ள புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் விவசாயத்துக்கு மின் இணைப்பு கோரி காத்திருப்பவர்கள் மட்டும் 31.3.2016 வரை 4 லட்சத்து 28 ஆயிரத்து 767 பேர். இதில் தயார் நிலையில் உள்ளவர்கள் மட்டும் 40 ஆயிரத்து 998 பேர்.
 இவர்களில் சுயநிதித் திட்டத்தின் கீழ் 2009ஆம் ஆண்டுக்கு முன்பு 50 ஆயிரம் ரூபாய் பணம் கட்டிவிட்டு காத்திருப்பவர்கள் மட்டும் 1,05,082 பேர். 2007 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை 25 ஆயிரம் ரூபாய் கட்டிவிட்டு காத்திருப்பவர்கள் 80 ஆயிரத்து 481 பேர். 4 லட்சத்து 28 ஆயிரத்து 767 பேரில் 31.03.2000-க்கு முன்பு விண்ணப்பித்து காத்திருப்பவர்கள் மட்டும் 2 லட்சத்து 3 ஆயிரத்து 357 பேர்.
 விவசாயத்துக்கு மின் இணைப்புக் கோரி காத்திருக்கிற அனைத்து விவசாயிகளுக்கும் வரிசை முன்னுரிமை அடிப்படையில் காலவரையறை தீர்மானித்து குறிப்பிட்ட காலத்துக்குள் மின் இணைப்பு வழங்க அரசு முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க பிரதிநிதி பழனிச்சாமி கூறியது:
 விவசாய மின் இணைப்பு, சுய நிதித் திட்டத்தில் 50 ஆயிரம் ரூபாய் முன்னுரிமை பிரிவில் மின் வழித்தடம் அமைக்க தற்போது 1 லட்சம் ரூபாய் கூட வழங்கத் தயாராக உள்ளோம். ஆனால், மின் வாரிய அதிகாரிகள் மின் இணைப்பு வழங்கத் தயாராக இல்லை.
 தற்போது 50 ஆயிரம் ரூபாய் முன்னுரிமை பிரிவில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இதனால், மின் வாரியத்துக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மின் இணைப்பு கிடைக்காததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், வேளாண் உற்பத்தியும் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
 கடும் வறட்சி காரணமாக நிலத்தடி நீரை நம்பி விவசாயம் செய்பவர்களில் 90 சதவீதம் பேர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேல் விவசாயத்தை முழுமையாக கைவிட்டு விட்டனர். வாய்க்கால்களில் உள்ள தென்னை மரங்கள் கூட காய்ந்து போய் விட்டன.
 தற்போது உள்ள 21 லட்சம் விவசாய மின் இணைப்புகளில் 10 லட்சம் மின் இணைப்புகள் கடந்த 5 ஆண்டுகளாக முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. 5 லட்சம் மின் இணைப்புகள் தினமும் 3 மணி நேரத்துக்கும் குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன. 5 லட்சம் மின் இணைப்புகள்தான் முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றன.
 50 சதவீத மின் இணைப்புகள் முழுமையாகப் பயன்பாடு இல்லாத நிலையில், விவசாயத்துக்கு இலவசமாக மின்சாரம் வழங்குவதால் ஆண்டுக்கு ரூ.3,500 கோடி செலவாகிறது என்பதை ஏற்க இயலாது. இதனால் விவசாயப் பணிக்கு கட்டாயத் தேவை உள்ள இடங்களில் உடனடியாக மின் இணைப்பு வழங்க புதிய கொள்கையை மின் வாரியம் உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்றார்.
 இதுகுறித்து, மின்வாரியத் துறை உயரதிகாரிகளிடம் கேட்டபோது, சுயநிதித் திட்டத்தில் ஒவ்வொரு பிரிவிலும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. ஓராண்டுக்கு வழங்க வேண்டிய விவசாய மின் இணைப்பின் எண்ணிக்கையை தமிழக அரசு, மின் வாரியத்துக்குத் தெரிவிக்கும்.
 அதன் அடிப்படையில் மாவட்டந்தோறும், இலவச மின் இணைப்பு ஒதுக்கீடு செய்யப்படும்.
 தற்போது 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டுச் செலவு பிரிவில் 2001ஆம் ஆண்டு, 25 ஆயிரம் ரூபாய் 2008ஆம் ஆண்டு, 50 ஆயிரம் ரூபாய் 2010ஆம் ஆண்டுக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
 தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவுவதால், விவசாயத்துக்கு விண்ணப்பித்த உடனேயே மின் இணைப்பு வழங்கப்படுவதில்லை. இருப்பினும், அரசு கூடுதலாக அனுமதி வழங்கினால் அதற்கேற்ப, அதிக எண்ணிக்கையில் விவசாய மின் இணைப்பு வழங்கப்படும்.
 விவசாய இணைப்புக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவதால், மின் வாரியத்துக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.3,500 கோடி வரை செலவாகிறது. இதை தமிழக அரசு மின் வாரியத்துக்கு மானியமாக வழங்குகிறது என்றனர்.
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com