மதுரை வடபழஞ்சி சிறப்புப் பொருளாதார வளாகம் விரைவில் செயல்பட நடவடிக்கை: எல்காட் தலைவர் தகவல்
மதுரை வடபழஞ்சியில் அமைக்கப்பட்டு வரும் சிறப்புப் பொருளாதார மண்டல வளாகம் விரைவில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என எல்காட்


மதுரை வடபழஞ்சியில் அமைக்கப்பட்டு வரும் சிறப்புப் பொருளாதார மண்டல வளாகம் விரைவில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என எல்காட் தலைவர் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் பி.சந்திரமோகன் தெரிவித்தார்.
மதுரையில் இந்திய தொழில் வர்த்தக சம்மேளனம் மதுரைக் கிளை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புப் பொருளாதார மண்டலம் குறித்த கருத்தரங்கில் அவர் சிறப்புரையாற்றி பேசியதாவது: தமிழகத்தில் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி மேம்பட்டுள்ளது. தேசிய அளவில் தமிழக பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வி நிலையங்கள் தரவரிசைப் பட்டியலில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. தரமான கல்வி மூலம் தகவல் தொழில்நுட்பத்துக்கான பணியாளர்கள் தமிழகத்தில் ஏராளமாக உள்ளனர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஏற்ப பணித்திறன் பயிற்சி அளிப்பதும் அவசியம். எதிர்காலத்தில் ஏற்படும் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கல்வித் திறன், பயிற்சியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரையில் எல்காட்டுக்கு சொந்தமான இரு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உள்ளன. அவற்றில் வடபழஞ்சியில் உள்ள பொருளாதார மண்டல வளாகப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அலுவலக தலைவர் வினாய்ஷர்மா பேசியதாவது: பொருளாதார மண்டலத்தில் தொழில் தொடங்குவோருக்கு எவ்வித பிரச்னையும் ஏற்படாது. தொழில் சார்ந்த உதவிகள் எளிதில் கிடைக்கும். சாலை வசதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என அனைத்து அம்சங்களும் தொழில் புரிவோருக்கு சாதகமானதாக இருக்கும். நம்நாட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தால் ஏற்றுமதி தொழில் வளர்ச்சி பெற்று அதன் மூலம் 2 மில்லியன் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.
சிறப்புப் பொருளாதார மண்டல மேம்பாட்டு ஆணையர் எம்.கே.சண்முகசுந்தரம் பேசும் போது, நம் நாட்டில் 222 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள 53 சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் 38 மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் எல்காட்டிற்கு 5, சிப்காட்டிற்கு 5, மாநில அரசு நேரடி கட்டுப்பாட்டில் 10, மத்திய அரசுக்கு 1 மற்றும் தனியார் மண்டலங்களும் உள்ளன.
கடந்த 2016-17 ஆம் ஆண்டில் தமிழக சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மூலம் ரூ.82 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி நடந்த நிலையில் 2017-18 ஆம் ஆண்டில் ரூ.92 ஆயிரம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாங்குனேரி சிறப்புப் பொருளாதார மண்டலமே தமிழகத்தில் பெரியதாகும். மதுரையில் இலந்தைக்குளம், வடபழஞ்சி ஆகிய இடங்களில் எல்காட்டுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உள்ளன.
அதில் வடபழஞ்சி சிறப்புப் பொருளாதார மண்டலம் நடப்பு நிதியாண்டில் செயல்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க செயலர் இளங்கோவன் வரவேற்றார். இதில் மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், சிறப்பு பொருளாதார மண்டல மேம்பாடு இணை ஆணையர் ஆனந்தன், தொழில் வழிகாட்டல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு செயல் துணை அதிகாரி ஷில்பாபிரபாகர்சதீஷ் மற்றும் வ.உ.சிதம்பரனார் துறைமுக தலைவர் ஐ.ஜெயகுமார் ஆகியோர் பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...