ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் 5 தீர்த்தங்கள் மாற்றி அமைப்பு

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் 5 தீர்த்தங்களை கோயில் நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை நடத்தி மாற்றியமைத்தது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் 5 தீர்த்தங்களை கோயில் நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை நடத்தி மாற்றியமைத்தது.
இக்கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து சிவவழிபாடு நடத்தினால் காசிக்கு சென்று வந்த பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். இந்த 22 தீர்த்தங்களில் கூட்ட நெரிசலின் போது பக்தர்கள் நீராட முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து இங்குள்ள மகாலட்சுமி, சரஸ்வதி, சாவுத்திரி, காயத்திரி மற்றும் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள சங்கு, சக்கர தீர்த்தம் ஆகிய 6 தீர்த்தங்களை மாற்றி அமைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து ரூ.30 லட்சம் செலவில் அதற்கான பணிகள் தொடங்கி முடிவடைந்தன. இதனையடுத்து இந்த 6 தீர்த்தங்களை மாற்றியமைக்க முடிவு செய்து பிள்ளையார்பட்டி சிவாச்சாரியர் பிச்சை குருக்கள் தலைமையில் சனிக்கிழமை கணபதி ஹோமத்துடன் பூஜை தொடங்கியது. 
இந்நிலையில், தீர்த்தங்களை மாற்றக் கூடாது என அனைத்துக்கட்சிகள் சார்பில் கோயில் இணை ஆணையர் கோ.செ.மங்கையர்கரசியிடம் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  
இதனிடையே ஞாயிற்றுக்கிழமை காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை முடிந்தவுடன் 6 கலசங்களில் உள்ள புனித நீரை எடுத்துச் சென்று புதிதாக அமைக்கப்பட்டுள்ள தீர்த்தக் கிணறுகளில் ஊற்றி பக்தர்களுக்கு தீர்த்த கிணறுகளை திறந்து வைக்க வேண்டும். ஆனால் 5 கலசங்களில் மட்டும் புனித நீர் எடுத்து சென்று மஹாலட்சுமி தீர்த்தத்தை தவிர்த்து சரஸ்வதி, சாவுத்திரி, காயத்திரி மற்றும் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள சங்கு, சக்கர தீர்த்தங்களில் ஊற்றி திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் கோ.செ.மங்கையர்கரசி,  தக்கார் குமரன்சேதுபதி மற்றும் கோட்ட உதவிப் பொறியாளர் மயில்வாகனன், பேஸ்கார்கள் அண்ணாத்துரை, கலைச்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மகாலட்சுமி தீர்த்தம் திறக்காதது குறித்து இணை ஆணையர் கோ.செ.மங்கையர்கரசியிடம் கேட்ட போது அவர் கூறியது: 6 தீர்த்தக் கிணறுகளை திறக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணிகளை தொடங்கி விட்டோம். 
ஆனால் 6 தீர்த்தங்களையும் திறந்தால் எனக்கும் மற்ற ஊழியர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்படும் என்பதாலும், அச்சுறுத்தல் இருப்பதாலும் முதல் கட்டமாக 5 தீர்த்தங்கள் மட்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. உரிய பாதுகாப்புடன் மீதமுள்ள ஒரு தீர்த்தம் விரைவில் மாற்றப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com