ஜிஎம் கடுகு வணிக பயன்பாட்டுக்கு எதிர்ப்பு: அமைச்சகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மரபணு மாற்றம் (ஜிஎம்) செய்யப்பட்ட கடுகு வர்த்தக பயன்பாட்டுக்கு மத்திய அரசின் மரபணு பொறியியல், மதிப்பீட்டுக் குழு (ஜிஇஏசி) அளித்த

மரபணு மாற்றம் (ஜிஎம்) செய்யப்பட்ட கடுகு வர்த்தக பயன்பாட்டுக்கு மத்திய அரசின் மரபணு பொறியியல், மதிப்பீட்டுக் குழு (ஜிஇஏசி) அளித்த பரிந்துரையைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அமைந்துள்ள "இந்திரா பர்யாவரன்' பவனை முற்றுகையிட்டு விவசாயிகள், மாணவர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஜிஇஏசி, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை மதிப்பீடு செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்த குழு மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை வர்த்தக ரீதியில் பயன்டுத்துவதற்கு கடந்த மே 11-ஆம் தேதி பரிந்துரை செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த குழு அளித்த பரிந்துரையைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் விவசாயிகள் சங்கத்தினர், மாணவர்கள், சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் ஆகியோர் தில்லியில் உள்ள சுற்றுச்சூழல் அமைச்சகம் முன் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நகர்ப்புற வேளாண் நிறுவனத்தைச் சேர்ந்தவரும், தில்லியில் கடந்த ஏழு ஆண்டுகளாக வசித்து வரும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவருமான  பெண் கூறியதாவது:
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர் சாகுபடிக்குத் தேவையான விதைகளை பெற குறிப்பிட்ட நிறுவனங்களைச் சார்ந்திருக்கும் நிலை உள்ளது. இந்த விதைகளை விவசாயிகள் உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் மரபணு மாற்று பயிர் சாகுபடி, விவசாயிகளை வெகுவாக பாதிக்கிறது. இத்தகைய பயிர்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த தொடங்கிவிட்டால் பிந்தைய காலத்தில் கடுகு விதைகளுக்கு உரிமம் வைத்திருக்கும் நிறுவனங்களை மட்டும் சார்ந்திருக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவர் என்றார்.
"சர்சோங் சத்யாகிரஹா' அமைப்பைச் சேர்ந்த கவிதா குருகந்தி கூறுகையில், "ஜிஇஏசியின் செயல்பாடுகள் ஒழுங்குமுறையற்றதாகவும், அறிவியல்பூர்வமற்றதாகவும் உள்ளது. இந்த அமைப்பின் செயல்பாடுகள் அதிருப்தி அளிக்கும் வகையிலும், ரகசியமாகவும் இருந்து வருகிறது' என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், "கடுகு சாகுபடியில் ஈடுபடும் பல மாநிலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மரபணு மாற்ற கடுகுப் பயிருக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் சூழலில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த விஷயத்தில் அவசரம் காட்டுவது ஏன்?' என கேள்வி எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். "மரபணு மாற்று கடுகு பயிரை வணிக ரீதியாகப் பயன்படுத்தும் பரிந்துரை திரும்பப் பெறப்படாவிட்டால் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும்' என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறினர்.
அமைச்சருடன் சந்திப்பு: இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற குழுவைச் சேர்ந்த ஆறு பிரதிநிதிகள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் தவேவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அப்போது, ஆர்ப்பாட்டக்காரர்களின் குறைகளைக் கேட்ட அனில் மாதவ் தவே, "இந்த விவகாரத்தில் அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய வழிமுறைகள் மூலம் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்' என்று உறுதியளித்தார்.
 இந்நிலையில், மரபணு மாற்று கடுகுப் பயிரின் வணிக ரீதியிலான பயன்பாட்டுக்கு ஜிஇஏசி அளித்த பரிந்துரையை காங்கிரஸ் தலைவர் ரேணுகா சௌத்ரி தலைமையிலான
மத்திய அறிவியல் - தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், வனத் துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு உள்படுத்தும் என்று தகவலறிந்த அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com