நகராட்சி ஆணையர் மாறுதல் விவகாரம்: ஆளுநர் கிரண் பேடி கண்டனம்
புதுச்சேரி நகராட்சி ஆணையர் மாறுதல் விவகாரம் தொடர்பாக, துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கண்டனம் தெரிவித்தார்.


புதுச்சேரி நகராட்சி ஆணையர் மாறுதல் விவகாரம் தொடர்பாக, துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கண்டனம் தெரிவித்தார்.
உரிமை மீறல் பிரச்னை எதிரொலியாக, சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் உத்தரவின்படி, நகராட்சி ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:
நகராட்சி ஆணையர் சந்திரசேகரன் மீது பணி விதிகளை மீறி அவசரமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், காவல் துறையில் அவர் அளித்துள்ள புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக நான் வந்தவுடன் விவாதித்து நடவடிக்கை எடுக்கலாம் என தலைமைச் செயலாளரிடம் கூறி இருந்தேன். சிறப்பாக செயல்படும் அதிகாரியை ஏன் தண்டிக்க வேண்டும்? பின்னர் எவ்வாறு புதுவை மாநிலம் வளர்ச்சி பெறும்?
இந்த நடவடிக்கை பிற அதிகாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தும். இனி அதிகாரிகள் சுயமாக செயல்பட மாட்டார்கள். ஒவ்வொரு முறையும் அரசின் ஆணைக்காக காத்திருப்பார்கள். இது பொது சேவையில் மிகப்பெரும் தடையை ஏற்படுத்தும். ஏற்கெனவே அவர் மீதான உரிமை மீறல் விசாரணையில்தான் உள்ளது.
அந்த அதிகாரி பதில் தர வாய்ப்பு தரப்படவில்லை. தன் தரப்பு வாதத்தையும், விளக்கத்தையும் கொடுக்க வாய்ப்பு தரப்படவில்லை. இந்த நடவடிக்கை நேர்மையானதாக தெரியவில்லை.
பணி விதிகள் மீறல்: அதிகாரிகள் தொடர்பான பணிவிதிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. நிதி மற்றும் பணிவிதிகள் தொடர்பாக துணைநிலை ஆளுநருக்கான அதிகாரம் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
யூனியன் பிரதேச நிர்வாகியான துணை நிலை ஆளுநருக்கு உள்ள பொறுப்புகளை மத்திய உள்துறை தெளிவாகவும், ஆணித்தரமாகவும் வலியுறுத்தி உள்ளது. இவை அனைத்து மீறப்பட்டுள்ளன. ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க என்னிடம் ஒப்புதல் பெறவில்லை. அரசு நிர்வாகம் இணைந்து செயல்பட வேண்டிய தனது பொறுப்பை ஏற்கவில்லை.
தலைமைச் செயலர் மீது புகார்: தலைமைச் செயலாளர் பொறுப்பை உணர்ந்து செயல்படவில்லை. விதிகள் தொடர்பாக அவர் அரசுக்கு விளக்க வேண்டும். ஆனால் ஆட்சியாளர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப அவர் செயல்படுகிறார்.
துணைநிலை ஆளுநர் என்பவர் வெறுமனே அமர்ந்து ஆட்சியாளர்கள் அனுப்பும் கோப்புகளுக்கு ஒப்புதல் தர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அவர்களுடைய செயல்களுக்கு துணைபோக வேண்டும் என விரும்புகின்றனர். இதுதான் தற்போதைய நிலை. எடுத்துக்காட்டாக புதுச்சேரி கடற்கரை சீரமைப்புத் திட்டம் 2001-இல் தொடங்கப்பட்டது. ஆனால், பின்னர் என்ன நடந்தது என்பதை அனைவரும் அறிவர்.
பேரவைத் தலைவருக்கு கடிதம்: நகராட்சி ஆணையரின் விளக்கத்தையும் கேட்க வேண்டும். விசாரணை முடிந்த பின் தான் முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காத்திருப்போர் பட்டியலில் வைக்கக்கூடாது. அதிகாரிகளை இட மாற்றம் செய்வதற்கான அதிகாரம் துணைநிலை ஆளுநரிடம் தான் உள்ளது. நான் தற்போது அதிகாரப்பூர்வ சுற்றுப் பயணத்தில் உள்ளேன். எனினும், பல கோப்புகள் எனது பார்வைக்கு வந்துள்ளன. அந்த வகையில் இதுவும் வந்திருக்க வேண்டும். ஆனால் செயல் விதிகள் மீறப்பட்டுள்ளன. பேரவைத் தலைவருக்கும் இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளேன்.
மேலும், தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான நிகழ்ச்சிகளில் தொடக்கம் முதலே அரசியல்வாதிகள், தலைமைச் செயலாளர் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு உரிய தகவல் தெரிவித்தும் வரவில்லை.
வார இறுதி நாள்களில் நான் செல்லும் தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் வருவதில்லை. நான் எந்த ஆதாயமும் அடைய முயற்சிக்கவில்லை. நான் எனது கடமையை தான் செய்துள்ளேன் என்றார் கிரண்பேடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...