வான்கடே டெஸ்ட்: ஜென்னிங்ஸ் சதம்: முதல் நாளில் இங்கிலாந்து 288/5

இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து வீரர் ஜென்னிங்ஸ் சதமடித்து அசத்த, முதல் நாளில் அந்த அணி 94 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்துள்ளது.
வான்கடே டெஸ்ட்: ஜென்னிங்ஸ் சதம்: முதல் நாளில் இங்கிலாந்து 288/5
Published on
Updated on
2 min read

இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து வீரர் ஜென்னிங்ஸ் சதமடித்து அசத்த, முதல் நாளில் அந்த அணி 94 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது.
தொடக்க வீரர்களாக, கேப்டன் அலாஸ்டர் குக், கீட்டன் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். ஜென்னிங்ஸ் களம் காணும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முதல் இரண்டு விக்கெட்டுகளும் 91 பந்துகளுக்கு 50 ரன்கள் எடுத்தது. இருவரும் சிறப்பாக ஆடிவந்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய குக் 60 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர் ஜடேஜாவின் பந்துவீச்சில் பார்த்திவ் படேலால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து ஜோ ரூட் ஆடுகளத்துக்கு வர, மறுமுனையில் ஜென்னிங்ஸ் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவர் 89 பந்துகளில் அரைசதம் கடந்தார். இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.
பின்னர் தொடங்கிய ஆட்டத்தில் ஜோ ரூட் 41 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பந்துவீசிய பந்தை கோலியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
தொடர்ந்து வந்த மொயீன் அலி, ஜென்னிங்ஸுடன் இணைந்தார். அறிமுக வீரரான ஜென்னிங்ஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 186 பந்துகளில் சதம் கடந்தார். தேநீர் இடைவேளையைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில், மொயீன் அலி 102 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவரை அந்த வேகத்திலேயே ஆட்டமிழக்கச் செய்து பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார் அஸ்வின்.
இந்நிலையில், அடுத்த 2 பந்துகளிலேயே ஜென்னிங்ஸும் வீழ்ந்தார். மொத்தம் 219 பந்துகளைச் சந்தித்திருந்த அவர், 13 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த ஜானி பேர்ஸ்டோ 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து அணி 94 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்திருந்தபோது, முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பென் ஸ்டோக்ஸ் 25, ஜோஸ் பட்லர் 18 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியத் தரப்பில் அஸ்வின் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
அம்பயருக்கு காயம்

முதல் நாள் ஆட்டத்தின்போது, ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருந்த புவனேஸ்வர் குமார் எறிந்த பந்து தலையில் பட்டதில் களத்தில் இருந்த நடுவர் காயமடைந்தார்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடர்ந்தபோது, நடுவர் பால் ரீஃபெல் களத்தில் இருந்தார். அப்போது, இங்கிலாந்து வீரர் லெக் சைடில் அடித்த பந்தை பிடித்த புவனேஸ்வர் குமார், அதை ஸ்டம்பை நோக்கி எறிந்தார்.
அந்தப் பந்து நடுவர் பால் ரீஃபெல் தலையின் பின்புறத்தில் பட்டது. இதில் நிலைகுலைந்து அவர் கீழே விழுந்தார். இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டு, மருத்துவக் குழுவினர் களத்துக்கு வந்து ரீஃபெலை சிகிச்சை மற்றும் ஓய்வுக்காக அழைத்துச் சென்றனர்.
பின்னர், 3-ஆவது நடுவராகச் செயல்பட்டு வந்த மரியாஸ் எர்ஸ்மஸ் கள நடுவராகச் செயல்படத் தொடங்கினார். மூன்றாவது நடுவர் பணி வேறொரு நடுவருக்கு மாற்றப்பட்டது.
ஸ்கேன் பரிசோதனை முடிவில் ரீஃபெலுக்கு காயம் ஏதும் இல்லை எனத் தெரியவந்ததாக தெரிவித்த மருத்துவக் குழுவினர், சிறிது ஓய்வுக்குப் பிறகு அவர் பணியைத் தொடரலாம் என்று கூறினர்.

துளிகள்...
முதல் முறை: இந்த டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவனில் மும்பை வீரர் எவரும் இல்லை. கடந்த 1933-ஆம் ஆண்டு முதலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மண்ணின் மைந்தர்கள் இல்லாமல் மும்பையில் டெஸ்ட் கிரிக்கெட் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.


*  2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக களமிறங்கி சதம் அடிக்கும் 5-ஆவது வீரர் ஜென்னிங்ஸ் ஆவார்.


* இங்கிலாந்து வீரர் ஜென்னிங்ஸ் அடித்துள்ள ரன்களே (112) வான்கடே மைதானத்தில் அறிமுக வீரர் ஒருவர் அடித்துள்ள அதிகபட்ச ரன்களாகும்.


*  இந்தியாவில் கடந்த 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு 50 ரன்களுக்கு மேல் அடித்த இங்கிலாந்தின் 5-ஆவது அறிமுக வீரர் ஜென்னிங்ஸ் ஆவார். அவருக்கு முன்பாக, குக், ஷா, ரூட், ஹமீது ஆகியோர் பட்டியலில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com