ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்ஸிடஸ் டிரைவர் நிகோ ரோஸ்பெர்க் சாம்பியன் பட்டம் வென்றார். இது அவர் வென்ற முதல் சாம்பியன் பட்டமாகும்.
2016 சீசன் ஃபார்முலா 1 கார் பந்தயம் 21 சுற்றுகளைக் கொண்டது. இதன் கடைசிச் சுற்று அபுதாபி கிராண்ட்ப்ரீ என்ற பெயரில் அபுதாபியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் நிகோ ரோஸ்பெர்க் 1 மணி, 38 நிமிடம், 4.452 விநாடிகளில் இலக்கை எட்டி 2-ஆவது இடத்தைப் பிடித்ததன் மூலம் 385 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
ரோஸ்பெர்க்கின் தந்தை 34 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இப்போது ரோஸ்பெர்க் வென்றதன் மூலம் ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற தந்தை, மகன் வரிசையில் அவர் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
மெர்ஸிடஸின் மற்றொரு டிரைவான லீவிஸ் ஹாமில்டன் இந்தப் போட்டியில் முதலிடத்தைப் (1:38:04.013) பிடித்தபோதும் அவரால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை. சாம்பியன் பட்டம் வெல்வதில் ரோஸ்பெர்க், ஹாமில்டன் இடையே கடும் போட்டி நிலவியது. புள்ளிகள் பட்டியலில் ஹாமில்டனைவிட 12 புள்ளிகள் முன்னிலையில் இருந்தார் ரோஸ்பெர்க். அதனால் ஹாமில்டன் இந்தப் போட்டியில் முதலிடம் பிடிக்க வேண்டும். அதநேரத்தில் ரோஸ்பெர்க் முதல் 3 இடங்களுக்குள் வராமல் இருக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே ஹாமில்டன் சாம்பியனாக முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் ரோஸ்பெர்க் 2-ஆவது இடத்தைப் பிடித்ததால் ஹாமில்டனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.