
சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, செக்.குடியரசின் பெட்ரா விட்டோவா, அமெரிக்காவின் மேடிசன் கீஸ் உள்ளிட்டோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் முர்ரே 6-2, 6-1 என்ற நேர் செட்களில் ரஷியாவின் ஆன்ட்ரே குஸ்நெட்சோவை தோற்கடித்தார்.
முர்ரே தனது காலிறுதியில் சகநாட்டவரும், தகுதி நிலை வீரருமான கைல் எட்மான்டை எதிர்கொள்கிறார். முன்னதாக எட்மான்ட் தனது 2-ஆவது சுற்றில் 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பெளதிஸ்டா அகட்டுக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார்.
ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஜேக் சாக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அடுத்ததாக ஸ்பெயினின் டேவிட் ஃபெரரை சந்திக்கவுள்ளார் அலெக்சாண்டர். ஃபெரர் தனது முந்தைய சுற்றில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியை தோற்கடித்தார்.
மகளிர் ஒற்றையர் 3-ஆவது சுற்றில் செக்.குடியரசின் பெட்ரா விட்டோவா 6-1, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸாவை வீழ்த்தினார். பெட்ரா தனது காலிறுதியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸை எதிர்கொள்கிறார். கீஸ் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 7-6 (2), 6-2 என்ற நேர் செட்களில் ரஷியாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவாவைத் தோற்கடித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.