கோலி இரட்டைச் சதம்; ரஹானே 188: இந்தியா 557 ரன்களில் டிக்ளேர்

நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 169 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 557 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
கோலி இரட்டைச் சதம்; ரஹானே 188: இந்தியா 557 ரன்களில் டிக்ளேர்
Published on
Updated on
3 min read

நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 169 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 557 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இந்திய கேப்டன் விராட் கோலி (211), அஜிங்க்ய ரஹானே (188) ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 365 ரன்கள் குவித்தது.
இந்தூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்திருந்தது.
2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் ரஹானே 210 பந்துகளில் சதமடித்தார். இது அவருடைய 8-ஆவது சதமாகும். கோலி-ரஹானே ஜோடி தொடர்ந்து சிறப்பாக ஆட, நியூஸிலாந்து பெளலர்கள் எரிச்சலடைந்தனர்.
கோலி 211: மதிய உணவு இடைவேளையின்போது 117 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விராட் கோலி 273 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். அவரைத் தொடர்ந்து "டிரிங்க்ஸ்' இடைவேளைக்கு முன்னதாக ரஹானே 300 பந்துகளில் 150 ரன்களை எட்டினார்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய விராட் கோலி 347 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்தார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 2-ஆவது இரட்டைச் சதம் இதுவாகும்.
தொடர்ந்து அசத்தலாக ஆடிய கோலி, இந்தியா 465 ரன்களை எட்டியபோது ஜீதன் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 366 பந்துகளில் 20 பவுண்டரிகளுடன் 211 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து ரோஹித் சர்மா களமிறங்க, மறுமுனையில் இரட்டைச் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 188 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் வாட்லிங்கிடம் கேட்ச் ஆனார். அவர் 381 பந்துகளில் 4 சிக்ஸர், 18 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார்.
ரோஹித் அரை சதம்: இதையடுத்து ரவீந்திர ஜடேஜா களமிறங்க, மறுமுனையில் வேகமாக ஆடிய ரோஹித் சர்மா, ஹென்றி பந்துவீச்சில் சிக்ஸர் அடித்து 62 பந்துகளில் அரை சதத்தை எட்டினார்.
ரோஹித் மேலும் ஒரு ரன் சேர்க்க, டிக்ளேர் செய்வதாக அறிவித்தார் கேப்டன் கோலி. அப்போது இந்தியா 169 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 557 ரன்கள் குவித்திருந்தது.
ரோஹித் சர்மா 63 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 51, ஜடேஜா 27 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 17 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட், ஜீதன் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
நியூஸிலாந்து-28: பின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய நியூஸிலாந்து அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது. மார்ட்டின் கப்டில் 17, டாம் லதாம் 6 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு நியூஸிலாந்து இன்னும் 529 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. பாலோ-ஆனை தவிர்க்க 330 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.

துளிகள்...

இந்தூர் போட்டியில் 557 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக 3-ஆவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது இந்தியா. 1999-இல் ஆமதாபாதில் நடைபெற்ற டெஸ்டில் இந்தியா 583 ரன்கள் குவித்ததே இன்றளவும் சாதனையாக உள்ளது.


கோலி-ரஹானே ஜோடி மொத்தம் 672 பந்துகளை எதிர் கொண்டதன் மூலம் நியூஸிலாந்துக்கு எதிராக அதிக பந்துகளை எதிர்கொண்ட இந்திய ஜோடிகளின் வரிசையில் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

ரஹானே 188 ரன்கள் குவித்ததன் மூலம் 5-ஆவது பேட்ஸ்மேனாக அல்லது அதற்கு கீழ்நிலையில் களமிறங்கி அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

டெஸ்ட் போட்டியில் இரு இரட்டைச் சதங்களை விளாசிய முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். அவர் (கேப்டனாக) தனது முதல் இரட்டை சதத்தை கடந்த ஜூலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அடித்தார். இதற்கு முன்னர் 84 ஆண்டுகளில் இந்திய கேப்டன்களால் 4 இரட்டை சதங்கள் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளன.

கோலி-ரஹானே ஜோடி 365 ரன்கள் குவித்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் 4-ஆவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த இந்திய ஜோடி என்ற பெருமையைப் பெற்றது. முன்னதாக சச்சின்-வி.வி.எஸ்.லட்சுமண் ஜோடி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 353 ரன்கள் குவித்திருந்ததே சாதனையாக இருந்தது.

ஜடேஜாவால் நியூஸி.க்கு கிடைத்த 5 ரன்கள்

ரோஹித் சர்மாவும், ஜடேஜாவும் பேட் செய்தபோது
168-ஆவது ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். அப்போது இரண்டாவது முறையாக ஆடுகளத்தின் நடுப் பகுதியில் ஜடேஜா ஓடியதைத் தொடர்ந்து அவரை எச்சரித்த நடுவர், அதற்கு பெனால்டியாக நியூஸிலாந்து அணிக்கு 5 ரன்களையும் வழங்கினார். இதனால் பேட் செய்வதற்கு முன்னதாகவே நியூஸிலாந்து அணி 5 ரன்களை பெற்றது.

ஸ்கோர் போர்டு

இந்தியா

முரளி விஜய் (சி) லதாம் (பி) படேல் 10 18
கெளதம் கம்பீர் எல்பிடபிள்யூ (பி) போல்ட் 29 53
புஜாரா (பி) சேன்ட்னர் 41 108
விராட் கோலி எல்பிடபிள்யூ (பி) படேல் 211 366
ரஹானே (சி) வாட்லிங் (பி) போல்ட் 188 381
ரோஹித் சர்மா நாட் அவுட் 51 63
ரவீந்திர ஜடேஜா நாட் அவுட் 17 27
உதிரிகள் 10

விக்கெட் வீழ்ச்சி: 1-26 (விஜய்), 2-60 (கம்பீர்),
3-100 (புஜாரா), 4-465 (கோலி), 5-504 (ரஹானே).

பந்துவீச்சு: டிரென்ட் போல்ட் 32-2-113-2,
மட் ஹென்றி 35-3-127-0, ஜீதன் படேல் 40-5-120-2,
மிட்செல் சேன்ட்னர் 44-4-137-1, ஜேம்ஸ் நீஷம் 18-1-53-0.

நியூஸிலாந்து

மார்ட்டின் கப்டில் நாட் அவுட் 17 30
டாம் லதாம் நாட் அவுட் 6 24
உதிரிகள் 5

பந்துவீச்சு: 2-0-5-0, உமேஷ் யாதவ் 2-0-7-0,
அஸ்வின் 3-1-9-0, ரவீந்திர ஜடேஜா 2-1-2-0.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com