

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற 2-ஆவது சுற்றில் நடால் 3-6, 6-7 (3) என்ற நேர் செட்களில் செர்பியாவின் விக்டர் டிராய்க்கியிடம் தோல்வி கண்டார். நடால், டிராய்க்கியிடம் தோற்றது இதுவே முதல்முறையாகும்.
தோல்விக்குப் பிறகு பேசிய நடால், "அடுத்த சீசனுக்குள் மீண்டும் ஃபார்முக்கு திரும்புவேன். அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். நான் பழைய ஃபார்முக்கு திரும்புவேன் என்ற நம்பிக்கையுள்ளது' என்றார்.
மற்றொரு 2-ஆவது சுற்றிஸ் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் 3-6, 1-6 என்ற நேர் செட்களில் ஜெர்மனியைச் சேர்ந்த தகுதி நிலை வீரரான மிஸ்கா ஸ்வேரேவிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார். இந்த ஆட்டத்தின்போது கிர்ஜியோஸை ரசிகர்கள் கிண்டல் செய்தனர். இதனால் கோபமடைந்த அவர், ரசிகர்களை சாடினார். மேலும் ஸ்வேரேவுக்கு எதிராக குழந்தைத் தனமாக சர்வீஸ் அடித்ததற்காக நடுவரால் எச்சரிக்கப்பட்டார் கிர்ஜியோஸ்.
ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா தனது 2-ஆவது சுற்றில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் பிரிட்டனின் கைல் எட்மான்டையும், கனடாவின் மிலோஸ் ரயோனிச் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் இத்தாலியின் பாலோ லோரென்ஸியையும், பெல்ஜியத்தின் டேவிட் கோஃபின் 6-1, 7-6 (0) என்ற நேர் செட்களில் பிரான்ஸின் பெனாய்ட் பேரையும் தோற்கடித்தனர். பிரிட்டனின் ஆன்டி முர்ரே 6-3, 6-2 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஸ்டீவன் ஜான்சனை தோற்கடித்தார்.
ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ் 7-6 (4), 7-6 (1) என்ற நேர் செட்களில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சுக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.