
பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு இணையாக கருதப்படுவார்கள். அவர்களுக்கும் அடுத்த ஆண்டு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்தார்.
ஹைதராபாதில் உள்ள கோபிசந்த் பாட்மிண்டன் அகாதெமிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவர் மேலும் கூறியதாவது: ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது என்பது கேல் ரத்னா விருதைவிட உயரிய சாதனையாகும். அதை சிந்துவிடம் கேளுங்கள்.
ஒலிம்பிக் பதக்கத்துக்கே அதிக முன்னுரிமை அளிப்பதாக சிந்து தெரிவித்தார். பாரா ஒலிம்பிக் வீரர்கள் நாட்டுக்கு மிகப்பெரிய பெருமையை சேர்த்துள்ளார்கள். அவர்களை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். சிந்து, சாக்ஷிக்கு வழங்கப்பட்டதைப் போன்றே பாரா ஒலிம்பிக் சாம்பியன்களுக்கும் பரிசு வழங்கப்படும் என்றார்.
சாய்னா நெவால், யோகேஷ்வர் தத் ஆகியோர் காயத்துடன் ஒலிம்பிக்கில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறதே என கோயலிடம் கேட்டபோது, "அது குறித்து இப்போது பொது இடத்தில் எதுவும் பேச முடியாது.
ஆனால் அது தொடர்பாக நாங்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். அந்த விவகாரத்தில் இன்னும் நிறைய விஷயங்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. விரைவில் அது தொடர்பான அறிக்கையோடு உங்களை சந்திக்கிறோம்' என்றார்.
இதேபோல் நாட்டில் உள்ள திறமையான இளம் வீரர்களை கண்டறிவதற்காக இணையதளம் ஒன்று தொடங்கப்படவுள்ளதாக விஜய் கோயல் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.