500-ஆவது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. 500-ஆவது டெஸ்டில் வெற்றி கண்டதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என முன்னிலை பெற
500-ஆவது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி
Published on
Updated on
3 min read

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா.
500-ஆவது டெஸ்டில் வெற்றி கண்டதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்தியா.
கான்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 97 ஓவர்களில் 318 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக முரளி விஜய் 65, புஜாரா 62, ஜடேஜா 42 ரன்கள் எடுத்தனர். நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட், மிட்செல் சேன்ட்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்து அணி 95.5 ஓவர்களில் 262 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 75, டாம் லதாம் 58 ரன்கள் எடுத்தனர். இந்தியத் தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 56 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய இந்திய அணி 107.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா 78, விஜய் 76, ரோஹித் சர்மா 68, ஜடேஜா 50 ரன்கள் சேர்த்தனர். நியூஸிலாந்து தரப்பில் மிட்செல் சேன்ட்னர், இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
434 ரன்கள் இலக்கு: இதையடுத்து 434 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய நியூஸிலாந்து அணி 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 37 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்திருந்தது. லுக் ரோஞ்சி 38, சேன்ட்னர் 8 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
கடைசி நாளான திங்கள்கிழமை தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணியில் லுக் ரோஞ்சி-சேன்ட்னர் ஜோடி மேலும் 20 ஓவர்கள் சிறப்பாக ஆடி இந்திய பெளலர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
இந்த ஜோடியைப் பிரிக்க தொடர்ந்து போராடிய இந்திய அணிக்கு 58-ஆவது ஓவரில் பலன் கிடைத்தது. ஜடேஜா பந்துவீச்சில் அஸ்வினிடம் கேட்ச் ஆனார் ரோஞ்சி. அவர் 120 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து சேன்ட்னருடன் இணைந்தார் வாட்லிங். இந்த ஜோடி 36 ரன்கள் சேர்த்தது. வாட்லிங் 18 ரன்களில் வெளியேற, மார்க் கிரேக் களம்புகுந்தார். மறுமுனையில் ஆமை வேகத்தில் ஆடிய சேன்ட்னர் 149 பந்துகளில் அரை சதம் கண்டார்.
இதன்பிறகு மார்க் கிரேக் 1 ரன்னில் வெளியேற, சேன்ட்னர் 179 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் சேர்த்து அஸ்வின் பந்துவீச்சில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் ஆனார். பின்னர் வந்த இஷ் சோதி (17), நீல் வாக்னர் (0) ஆகியோர் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, 87.3 ஓவர்களில் 236 ரன்களுக்கு சுருண்டது நியூஸிலாந்து.
இந்தியத் தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை சாய்த்தார். ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணிகள் இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை கொல்கத்தாவில் தொடங்குகிறது.

விலை மதிக்கமுடியாத வீரர் அஸ்வின்: விராட் கோலி பாராட்டு


சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், விலை மதிக்கமுடியாத வீரர் என்று இந்திய கேப்டன் விராட் கோலி பாராட்டியுள்ளார்.
கான்பூர் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வீழ்த்தி இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்தார் அஸ்வின். வெற்றிக்குப் பிறகு விராட் கோலி மேலும் கூறியதாவது:
இந்திய அணியின் தலைசிறந்த வீரர் அஸ்வின். சர்வதேச அளவில் கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்கள் பட்டியலைப் பார்த்தால் அதில் முதல் மூன்று அல்லது நான்கு பேரில் ஒருவராக அஸ்வின் இருப்பார்.
சில வீரர்கள் அமைதியாக இருந்து மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். குறிப்பாக பெளலர்கள் அதுபோன்று செயல்படுகிறார்கள். பெளலர்களால் மட்டுமே டெஸ்ட் போட்டியில் வெற்றியை தேடித்தர முடியும். அவர்களில் அஸ்வினும் ஒருவர். கடந்த சில ஆண்டுகளாகவே அஸ்வின் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதற்காக அவர் கடுமையாக உழைக்கிறார். கிரிக்கெட்டை பற்றி அதிக அளவில் சிந்திக்கக் கூடியவரான அஸ்வின், அதைப் பற்றி மிக நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்.
அஸ்வின் சாதுர்யமான மற்றும் புத்திசாலித்தனமான கிரிக்கெட் வீரர். அதை அவருடைய பேட்டிங்கில் பார்க்கலாம். அவர் சூழலை புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு விளையாடக்கூடியவர். அவர், எங்கள் அணியில் இடம்பெற்றுள்ள விலை மதிக்கமுடியாத வீரர் என்றார்.
வெற்றி குறித்துப் பேசிய கோலி, "டெஸ்ட் போட்டியில் பின்வரிசை பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். அதற்காக நாங்கள் எங்கள் பெளலர்களுடன் இணைந்து கடுமையாக உழைத்து வருகிறோம். அஸ்வினில் தொடங்கி அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும் என விரும்புகிறோம். இந்த போட்டியைப் பொறுத்தவரையில் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டது நியூஸிலாந்து வீரர்களுக்கு மனரீதியாக பின்னடைவை ஏற்படுத்தியது'என்றார்.
உரி தாக்குதலுக்கு இரங்கல்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்த கோலி, "இது போன்ற சம்பவங்கள் ஒவ்வொரு இந்திய குடிமகனையும் வேதனையடையச் செய்கிறது' என்றார்.

மம்தா பானர்ஜி வாழ்த்து!
கொல்கத்தா, செப்.26: 500-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி கண்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் கூறியிருப்பதாவது: 500-ஆவது டெஸ்டில் வெற்றி கண்டுள்ள இந்திய அணிக்கு வாழ்த்துகள். உலகில் உள்ள அனைத்து விளையாட்டுகளிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் நாள் விரைவில் வரும் என குறிப்பிட்டுள்ளார்.

ஸ்கோர் போர்டு முதல் இன்னிங்ஸ்
இந்தியா-318 (முரளி விஜய் 65, புஜாரா 62, ஜடேஜா 42*, டிரென்ட் போல்ட் 3வி/67,
மிட்செல் சேன்ட்னர் 3வி/94)
நியூஸிலாந்து-262 (கேன் வில்லியம்சன் 75,
டாம் லதாம் 58, ஜடேஜா 5வி/73, அஸ்வின் 4வி/93).
2-ஆவது இன்னிங்ஸ்
இந்தியா-377/5 டிக்ளேர் (புஜாரா 78, விஜய் 76, ரோஹித் 68*, ஜடேஜா 50*, இஷ் சோதி 2வி/99, மிட்செல் சேன்ட்னர் 2வி/79)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com