

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சிந்து தனது முதல் சுற்றில் கடும் போராட்டத்துக்குப் பிறகு 10-21, 21-15, 22-20 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை தோற்கடித்தார். போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் சிந்து தனது 2-ஆவது சுற்றில் இந்தோனேசியாவின் ஃபிட்ரியானியை எதிர்கொள்கிறார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான ரிதுபர்னா 18-21, 13-21 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் ஷூ யா சிங்கிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரணீத் 17-21, 21-7, 21-19 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் எமில் ஹோல்ஸ்டை தோற்கடித்தார். 2-ஆவது சுற்றில் சீனாவின் கியாவ் பின்னை சந்திக்கிறார் சாய் பிரணீத்.
அதேநேரத்தில் இந்தியாவின் செளரவ் வர்மா 15-21, 14-21 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் அந்தோணி சினிசுகாவிடமும், சமீர் வர்மா 26-28, 21-23 என்ற நேர் செட்களில் ஹாங்காங்கின் ஹூ யூனிடமும் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி 21-19, 21-19 என்ற நேர் செட்களில் மலேசியாவின் இயின் லூ லிம்-யாப் செங் வென் ஜோடியைத் தோற்கடித்தது.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்-மணீஷா ஜோடி 13-21, 21-16, 11-21 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் லூ சிங் யாவ்-சியாங் கை ஷின் ஜோடியிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானு அத்ரி-சுமீத் ரெட்டி ஜோடி 8-21, 16-21 என்ற நேர் செட்களில் ஜப்பானின் டகேஷி குமுரா-கெய்கோ சொனோடா ஜோடியிடம் தோல்வி கண்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.