
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-ஆவது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸ் அணியைத் தோற்கடித்தது மும்பை இண்டியன்ஸ்.
இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை அணி 4-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் குஜராத் அணி 4 ஆட்டங்களில் விளையாடி 3-ஆவது தோல்வியைப் பதிவு செய்துள்ளது.
மும்பை அணியில் நிதிஷ் ராணா 36 பந்துகளில் 53, போலார்ட் 23 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ரோஹித் சர்மா 29 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் எடுத்தார்.
மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த குஜராத் அணியில் முதல் ஓவரிலேயே டுவைன் ஸ்மித் டக் அவுட்டாக, பிரென்டன் மெக்கல்லத்துடன் இணைந்தார் கேப்டன் சுரேஷ் ரெய்னா. அவர், வந்த வேகத்தில் மலிங்கா பந்துவீச்சில் இரு பவுண்டரிகளை விரட்டினார்.
மெக்கல்லம் 64: ஆரம்பத்தில் நிதானம் காட்டிய மெக்கல்லம், மலிங்கா வீசிய 6-ஆவது ஓவரில் இரு சிக்ஸர்களை விரட்ட, அதிரடி ஆரம்பமானது. இதனால் 10 ஓவர்களில் 75 ரன்களை எட்டியது குஜராத். மெக்கல்லம் 36 பந்துகளில் அரை சதமடிக்க, ஹர்பஜன் சிங் வீசிய 12-ஆவது ஓவரின் முதல் பந்தில் ரெய்னா ஆட்டமிழந்தார். அவர் 29 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து இஷன் கிஷான் களமிறங்க, மெக்கல்லம் 44 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் சேர்த்த நிலையில் மலிங்கா பந்துவீச்சில் போல்டு ஆனார்.
தினேஷ் கார்த்திக் அதிரடி: இதன்பிறகு களம்புகுந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் சிக்ஸரையும், பவுண்டரியையும் பறக்கவிட, இஷன் கிஷான் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களம் கண்ட ஜேசன் ராய் தன் பங்குக்கு ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விளாச, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது குஜராத். தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 48, ஜேசன் ராய் 7 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மும்பைத் தரப்பில் மெக்லீனாகான் 4 ஓவர்களில் 24 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். அதேநேரத்தில் மலிங்கா 4 ஓவர்களில் 51 ரன்களை வழங்கி ஒரு விக்கெட் வீழ்த்தினார். ஐபிஎல் போட்டியில் மலிங்கா 50 ரன்களுக்கு மேல் கொடுப்பது இதுவே முதல்முறையாகும்.
ராணா அதிரடி: பின்னர் ஆடிய மும்பை அணி ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே பார்த்திவ் படேலின் விக்கெட்டை இழந்தது. இதையடுத்து ஜோஸ் பட்லருடன் இணைந்தார் நிதிஷ் ராணா. வந்த வேகத்தில் இரு பவுண்டரிகளை விரட்டிய ராணா, பாசில் தம்பி பந்துவீச்சில் கொடுத்த கேட்ச்சை ஜேசன் ராய் கோட்டைவிட்டார்.
இதனால் வாழ்வு பெற்ற ராணா, பாசில் தம்பி வீசிய 5-ஆவது ஓவரில் இரு சிக்ஸர்களை விளாசினார். தொடர்ந்து வேகம் காட்டிய ராணா, ஆண்ட்ரூ டை வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸரை பறக்கவிட, மும்பை அணி 50 ரன்களைக் கடந்தது.
தொடர்ந்து வேகமாக ரன் சேர்த்த ராணா, ஜடேஜா பந்துவீச்சில் பவுண்டரியை விரட்டி 32 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். மும்பை அணி 9.2 ஓவர்களில் 85 ரன்கள் எடுத்திருந்தபோது ராணாவின் விக்கெட்டை இழந்தது. அவர் 36 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்தார்.
போலார்ட் அதிரடி: இதையடுத்து கேப்டன் ரோஹித் சர்மா களமிறங்க, ஜோஸ் பட்லர் 26 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ரோஹித் சர்மாவுடன் இணைந்தார் கிரண் போலார்ட். இந்த ஜோடி, குஜராத் பெüலர்களை பந்தாடியது.
முனாஃப் படேல் வீசிய 14-ஆவது ஓவரில் ரோஹித் ஒரு பவுண்டரியை விரட்ட, போலார்ட் தன் பங்குக்கு ஒரு சிக்ஸரை விளாசினார்.
மும்பையின் வெற்றிக்கு கடைசி 6 ஓவர்களில் 58 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஸ்மித் வீசிய 15-ஆவது ஓவரில் போலார்ட் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விரட்ட, ஜடேஜா வீசிய அடுத்த ஓவரில் ரோஹித் சர்மா ஒரு சிக்ஸரை விளாசினார்.
ஆண்ட்ரூ டை வீசிய 17-ஆவது ஓவரில் போலார்ட் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விரட்ட, கடைசி 3 ஓவர்களில் 23 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. ஆண்ட்ரூ டை வீசிய 19-ஆவது ஓவரில் போலார்ட் சிக்ஸர் அடிக்க முயன்றார். ஆனால் பந்து எல்லைக் கோட்டில் நின்ற ஜடேஜாவின் கையில் தஞ்சம்புக, போலார்ட் 23 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். போலார்ட்-ரோஹித் ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து வந்த ஹார்திக் பாண்டியா பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்க, மும்பை அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. ரோஹித் சர்மா 29 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 40, பாண்டியா 3 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் தரப்பில் ஆண்ட்ரூ டை 2 விக்கெட் எடுத்தார். நிதிஷ் ராணா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இன்றைய ஆட்டங்கள்
டெல்லி-கொல்கத்தா
இடம்: டெல்லி, நேரம்: மாலை 4
ஹைதராபாத்-பஞ்சாப்
இடம்: ஹைதராபாத், நேரம்: இரவு 8
நேரடி ஒளிபரப்பு:
சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.