புதிய வருமானப் பகிர்வு முறை: பிசிசிஐக்கு ரூ.1,879 கோடி

புதிய வருமானப் பகிர்வு முறையின்படி, பிசிசிஐக்கு அடுத்த 8 ஆண்டுகளுக்கு ரூ.1,879 கோடியை ஐசிசி ஒதுக்கீடு செய்ய உள்ளது.

புதிய வருமானப் பகிர்வு முறையின்படி, பிசிசிஐக்கு அடுத்த 8 ஆண்டுகளுக்கு ரூ.1,879 கோடியை ஐசிசி ஒதுக்கீடு செய்ய உள்ளது.
முந்தைய வருமானப் பகிர்வின் படி பிசிசிஐக்கு கிடைத்த தொகையுடன் (ரூ.3,657 கோடி) ஒப்பிடுகையில், தற்போதைய தொகையானது அதில் ஏறக்குறைய பாதியாகும். எனினும், இதர நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கான ஒதுக்கீட்டுடன் ஒப்பிடுகையில் பிசிசிஐயின் பங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பு வருமானம் மற்றும் செலவுகள் கணக்கீட்டின்படி, பிசிசிஐக்கான வருமானப் பகிர்வாக அடுத்த 8 ஆண்டுகளுக்கு ரூ.1,879 கோடி வழங்கப்படும். அதேபோல், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.917 கோடியும், ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்கு ரூ.603 கோடியும் வழங்கப்பட உள்ளது. முழு உறுப்பினர்களாக இருக்கும் எஞ்சிய 7 நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கு ரூ.846 கோடி வழங்கப்படும்.
துணை உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கு ரூ.1,796 கோடி வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், ஐசிசியில் புதிதாக முன்மொழியப்பட்டு, உறுப்பு நாடுகளின் ஒப்புதலையும் பெற்ற நிர்வாக அமைப்பின் மாற்றம் குறித்தும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, முழு உறுப்பினர்கள், துணை உறுப்பினர்கள் என்ற இரு பிரிவுகள் மட்டுமே நடப்பில் இருக்கும். இணைப்பு அளவிலான உறுப்பினர்கள் முறை அகற்றப்பட்டுள்ளது.
அத்துடன் ஐசிசிக்கென சுதந்திரமான பெண் இயக்குநர் மற்றும் துணை சேர்மன் பதவிகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும், புதிய நிர்வாக அமைப்பின் படி, அனைத்துவிதமான உறுப்பினர்களுக்கும் ஒரே மாதிரியான மதிப்புடைய வாக்குரிமை அளிக்கப்படுகிறது.
இதனிடையே, பிசிசிஐக்கான வருமானப் பகிர்வை மேலும் அதிகரித்து ரூ.2,502 கோடியாக வழங்க ஐசிசி தயாராக இருப்பதாகவும், எனினும் அந்தத் தொகையை ரூ.2,887 கோடியாக அதிகரித்துப் பெற பிசிசிஐ முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com