இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர் குக் ராஜிநாமா

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் அலாஸ்டர் குக் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதேநேரத்தில் ஒரு வீரராக தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் விளையாட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர் குக் ராஜிநாமா
Published on
Updated on
2 min read

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் அலாஸ்டர் குக் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதேநேரத்தில் ஒரு வீரராக தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் விளையாட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
2012-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற குக், இதுவரை 59 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை வகித்துள்ளார்.
32 வயதான குக், தனது ராஜிநாமா கடிதத்தை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் காலின் கிரேவ்ஸிடம் ஞாயிற்றுக்கிழமை அளித்தார்.
இது தொடர்பாக குக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்ததும், கடந்த 5 ஆண்டுகளாக அணியை தலைமையேற்று வழிநடத்தியதும் எனக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம் ஆகும்.
கேப்டன் பதவியிலிருந்து விலகுவது என்பது நம்பமுடியாத மிகக் கடினமான முடிவுதான். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இது சரியான முடிவு. இது இங்கிலாந்து அணியின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட சரியான முடிவாகும்.
தனிப்பட்ட முறையில் பல வழிகளில் இது எனக்கு சோகமான நாள்தான். இந்த நேரத்தில் நான் கேப்டனாக இருந்தபோது எனக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்கள், அலுவலர்கள், இங்கிலாந்து ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கிலாந்து அணிக்காக விளையாடிக் கொண்டிருப்பது மிகப்பெரிய சிறப்பாகும். கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும், ஒரு வீரராக தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் விளையாடுவேன் என நம்புகிறேன். இங்கிலாந்து அணிக்கும், புதிய கேப்டனுக்கும் என்னால் முடிந்த அளவுக்கு உதவுவேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை 140 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அலாஸ்டர் குக், 11,057 ரன்கள் குவித்துள்ளார். அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து வீரர், டெஸ்ட் போட்டியில் அதிக ரன் குவித்த இங்கிலாந்து வீரர் ஆகிய சாதனைகள் குக் வசமே உள்ளது.
இதுதவிர 69 ஒரு நாள் போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்துள்ளார். இவர் 2012-இல் விஸ்டன் விருதைப் பெற்றார். 2013-இல் ஐசிசி கனவு டெஸ்ட் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் இழந்தபோதே கேப்டன் பதவியிலிருந்து குக் விலகுவார் என்ற தகவல் வெளியானது. அப்போது பொறுமை காத்த குக், இப்போது கேப்டன் பதவியை துறந்துள்ளார்.

கேப்டனாகிறார் ஜோ ரூட்

அலாஸ்டர் குக்கின் விலகலைத் தொடர்ந்து இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஜோ ரூட் நியமிக்கப்படவுள்ளார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் ஆண்ட்ரூ ஸ்டிராஸ் கூறியதாவது: இங்கிலாந்து அணிக்காக குக் அற்புதமான பங்களிப்பை செய்துள்ளார். இங்கிலாந்து அணியின் தலைசிறந்த கேப்டன்களில் குக்கும் ஒருவர் என்று சொல்வதற்கு அவர் தகுதியானவர். இங்கிலாந்து அணிக்கு அடுத்த கேப்டனை நியமிப்பதற்கு முறையான நடைமுறைகள் தொடங்கிவிட்டன. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி வரும் 22-ஆம் தேதி மேற்கிந்தியத் தீவுகளுக்கு புறப்படுகிறது. அதற்கு முன்னதாக புதிய கேப்டன் அறிவிக்கப்படுவார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com