

10-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கவுள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா உள்ளிட்ட 7 பேருக்கு அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் ரூ.2 கோடிதான் அதிகபட்ச அடிப்படை விலை என்பது குறிப்பிடத்தக்கது.
இஷாந்த் சர்மா தவிர, இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், இயான் மோர்கன், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன், இலங்கையின் ஏஞ்செலோ மேத்யூஸ், ஆஸ்திரேலியாவின் பட் கம்மின்ஸ் ஆகியோருக்கும் அடிப்படை விலை ரூ.2 கோடியாகும்.
இவர்களுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோவ், நியூஸிலாந்தின் டிரென்ட் போல்ட், ஆஸ்திரேலியாவின் பிராட் ஹேடின், நாதன் லயன், தென் ஆப்பிரிக்காவின் கைல் அபாட், மேற்கிந்தியத் தீவுகளின் ஜேசன் ஹோல்டர் ஆகியோருக்கு அடிப்படை விலையாக ரூ.1.5 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் ஏலம் வரும் 20-ஆம் தேதி பெங்களூரில் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க மொத்தம் 799 வீரர்கள் தங்களின் பெயரைப் பதிவு செய்திருந்தனர். ஆனால் ஏலத்தில் பங்கேற்கும் 8 அணிகளும் ஆர்வம் காட்டாத 160 வீரர்கள் ஏலப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
தற்போதைய நிலையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை நாடுகளில் இருந்து மொத்தம் 639 பேர் ஏலத்தில் பங்கேற்கிறார்கள்.
இந்தியாவின் சார்பில் மட்டும் சர்வதேச போட்டியில் விளையாடிய அனுபவம் உள்ள 24 பேர் பங்கேற்கிறார்கள்.
இவர்களில் இஷாந்த் சர்மாவைத் தவிர எஞ்சிய வீரர்கள் அனைவருக்கும் அடிப்படை விலையாக ரூ.30 லட்சமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.