

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
முன்னதாக ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 122.4 ஓவர்களில் 279 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 72 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 126 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது.
பெங்களூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 71.2 ஓவர்களில் 189 ரன்களுக்கு சுருண்டது. கே.எல்.ராகுல் 90 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியத் தரப்பில் நாதன் லயன் 50 ரன்களை மட்டுமே கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியில் மட் ரென்ஷா 60, ஷான் மார்ஷ் 66 ரன்கள் சேர்த்து வெளியேற, 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 106 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்திருந்தது. மேத்யூ வேட் 25, மிட்செல் ஸ்டார்க் 14 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
276-க்கு ஆல்அவுட்: 3-ஆவது நாளான திங்கள்கிழமை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க் 26 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மேத்யூ வேட் 113 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் வீழ்ந்தார். பின்னர் வந்த நாதன் லயன் ரன் ஏதுமின்றியும், ஹேஸில்வுட் 1 ரன்னிலும் நடையைக் கட்ட, 122.4 ஓவர்களில் 276 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆஸ்திரேலியா.
இந்தியத் தரப்பில் ரவீந்திர ஜடேஜா 6 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுளையும் வீழ்த்தினர்.
கே.எல்.ராகுல் 51: இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் கே.எல்.ராகுல்-அபிநவ் முகுந்த் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 39 ரன்கள் சேர்த்தது. முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான முகுந்த், இந்த முறை 32 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 16 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து புஜாரா களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய ராகுல் 82 பந்துகளில் அரை சதம் கண்டார். தொடர்ந்து ஆடிய அவர் 85 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேப்டன் கோலி 15 ரன்களில் வெளியேற, ஜடேஜா களம்புகுந்தார். வழக்கத்துக்கு மாறாக முன்வரிசையில் களமிறக்கப்பட்ட ஜடேஜா 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஹேஸில்வுட் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.
5-ஆவது விக்கெட்டுக்கு 93: இதையடுத்து புஜாராவுடன் இணைந்தார் ரஹானே. மிகவும் எச்சரிக்கையாக விளையாடிய இந்த ஜோடி மேலும் விக்கெட் எதுவும் விழாமல் பார்த்துக் கொண்டது. மிகப் பொறுமையாக ஆடிய புஜாரா, ’டிரிங்க்ஸ்' இடைவேளைக்குப் பிறகு 125 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 72 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 173 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 79, அஜிங்க்ய ரஹானே 105 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர். இந்த ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 93 ரன்கள் குவித்துள்ளது.
ஆஸ்திரேலியத் தரப்பில் ஹேஸில்வுட் 3 விக்கெட் வீழ்த்தினார். தற்போதைய நிலையில் இந்திய அணி 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 125 ரன்கள் சேர்க்கும்பட்சத்தில் அது ஆஸ்திரேலியாவுக்கு கடினமான இலக்காக அமையும். இந்திய அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளது.
துளிகள்...
* இந்தப் போட்டியில் புஜாரா-ரஹானே ஜோடி ஆட்டமிழக்காமல் எடுத்துள்ள 93 ரன்கள்தான், இந்தத் தொடரில் ஒரு ஜோடியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள். இந்தத் தொடரில் இந்திய ஜோடி 50 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 3-ஆவது முறையாகும்.
* மூன்றாவது நாள் ஆட்டத்தின் கடைசி செஷனில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் எடுத்தது. இதுதான் இந்தத் தொடரில் விக்கெட் விழாத முதல் செஷன். தேநீர் இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, அதன்பிறகு நடைபெற்ற கடைசி செஷனின் முடிவில் அதே 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது.
* முதல் இன்னிங்ஸில் 50 ரன்களைக் கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன், 2-ஆவது இன்னிங்ஸில் 27 ஓவர்களை வீசியபோதும், அவரால் ஒரு விக்கெட்கூட எடுக்க முடியவில்லை.
* இந்திய வீரர் சேதேஷ்வர் புஜாரா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9-ஆவது முறையாக 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். இதுதவிர இந்த சீசனில் 1,000 ரன்கள் குவித்த 2-ஆவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் புஜாரா. முதல் வீரர் கேப்டன் கோலி ஆவார்.
இரண்டாவது இன்னிங்ஸில்
* ரன்கள் எடுத்தபோது டெஸ்ட் போட்டியில் 1,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார் இந்திய வீரர் கே.எல்.ராகுல்.
* இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 63 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் முதல் இன்னிங்ஸில் தனது சிறப்பான பந்துவீச்சைப் பதிவு செய்தார். ஒட்டுமொத்தத்தில் இது அவருடைய 2-ஆவது சிறப்பான பந்துவீச்சு ஆகும். சென்னையில் கடந்த டிசம்பரில் நடைபெற்ற டெஸ்டில் 48 ரன்களைக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதே ஜடேஜாவின் சிறப்பான பந்துவீச்சாக இன்றளவும் உள்ளது.
* இந்தத் தொடரில் இதுவரை 4 இன்னிங்ஸ்களை ஆடியிருக்கும் கேப்டன் விராட் கோலியின் சராசரி 10 ஆகும். இதுதான் சமீபத்திய காலங்களில் அவருடைய மோசமான சராசரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.