

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி ஓர் இடத்தை இழந்து 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
அதேநேரத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் கோலி பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. முறையே 0, 13, 12, 15 ரன்களையே எடுத்தார். இதனால் அவர் தரவரிசையில் சரிவைச் சந்தித்துள்ளார். தற்போதைய நிலையில் 847 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தில் இருக்கிறார் கோலி.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்த நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இரு இடங்கள் முன்னேறி 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இதனால் 2-ஆவது இடத்தில் இருந்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். முதல் இடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் உள்ளார். இந்திய வீரர் சேதேஷ்வர் புஜாராவின் தரவரிசையில் எந்த மாற்றமும் இல்லை. அவர் 6-ஆவது இடத்திலேயே இருக்கிறார்.
ஐசிசி பந்துவீச்சாளர்கள் தரவரிசையைப் பொறுத்தவரையில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டனர். அதேநேரத்தில் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் அஸ்வின் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதனால் வங்கதேத்தின் ஷகிப் அல்ஹசன் மீண்டும் 2-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.