
இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் குவித்துள்ளது.
அந்த அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 244 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 117, கிளென் மேக்ஸ்வெல் 147 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் குவித்து களத்தில் உள்ளனர். இந்த ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 159 ரன்கள் குவித்துள்ளது.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வியாழக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் இந்திய அணியில் ஒரேயொரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டிருந்தது. காயத்திலிருந்து மீண்ட முரளி விஜய் அணிக்குத் திரும்பினார். அபிநவ் முகுந்த் நீக்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணியில் காயமடைந்த மிட்செல் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்குப் பதிலாக கிளென் மேக்ஸ்வெல், பட் கம்மின்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
இதில் டாஸ் வென்று முதலில் பேட் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர்-மட் ரென்ஷா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.4 ஓவர்களில் 50 ரன்கள் சேர்த்தது. வார்னர் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் ஆனார்.
இதையடுத்து கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் களம்புகுந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ரென்ஷா 69 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் சேர்த்து உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஸ்மித் சதம்: இதன்பிறகு களம்புகுந்த ஷான் மார்ஷ் 2 ரன்களில் நடையைக் கட்ட, பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் களம்புகுந்தார். ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும், மறுமுனையில் நிதானமாக ஆடிய ஸ்மித் 104 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். ஆனால் அடுத்த பந்தில் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 19 ரன்களில் வெளியேற, கிளென் மேக்ஸ்வெல் களம்புகுந்தார்.
நீண்ட நாள்களுக்குப் பிறகு டெஸ்ட் அணிக்குத் திரும்பியுள்ள மேக்ஸ்வெல், தனது இடத்தை தக்கவைப்பதற்காக ஆரம்பம் முதலே மிகுந்த எச்சரிக்கையோடு ஆடினார். வழக்கத்துக்கு மாறாக நிதானமாக ஆடிய மேக்ஸ்வெல், ஜடேஜா வீசிய 74-ஆவது ஓவரில் சிக்ஸரை விளாசி 95 பந்துகளில் அரை சதத்தை எட்டினார்.
இதன்பிறகு முரளி விஜய் பந்துவீச்சில் பவுண்டரியை விரட்டி 227 பந்துகளில் சதத்தை எட்டினார் ஸ்மித். இந்தத் தொடரில் அவர் அடித்த 2-ஆவது சதம் இது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் குவித்துள்ளது. ஸ்மித் 117, மேக்ஸ்வெல் 82 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இந்தியத் தரப்பில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
ஸ்டீவன் ஸ்மித் 5,000
இந்தப் போட்டியில் 76 ரன்கள் எடுத்தபோது டெஸ்ட் போட்டியில் 5,000 ரன்கள் குவித்தவர் என்ற பெருமையைப் பெற்றார் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித். அவர் தனது 53-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
இதன்மூலம் அதிவேகமாக 5,000 ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் ஸ்மித். டான் பிராட்மேன் (36 டெஸ்ட்), சுநீல் கவாஸ்கர் (52) ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர். சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டியில் 5,000 ரன்கள் குவித்த 89-ஆவது வீரர் ஸ்மித். அதேநேரத்தில் ஆஸ்திரேலியர்களில் 20-ஆவது வீரர் ஆவார்.
கோலிக்கு தோள்பட்டையில் காயம்
ஜடேஜா வீசிய 40-ஆவது ஓவரின் முதல் பந்தை ஆஸ்திரேலியாவின் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் டீப் மிட்விக்கெட் திசையில் அடித்தார். அது பவுண்டரிக்கு செல்வதைத் தடுப்பதற்காக பாய்ந்து பீல்டிங் செய்தார் இந்திய கேப்டன் கோலி. அப்போது அவருடைய வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
அதனால் எழுவதற்கே சிரமப்பட்ட அவரை அணியின் முடநீக்கியல் நிபுணர் அழைத்துச் சென்றார். அதன்பிறகு சிறிது நேரம் அவருடைய தோள்பட்டையில் ஐஸ் கட்டி வைக்கப்பட்டது.
தேநீர் இடைவேளைக்குப் பிறகும்கூட கோலி பீல்டிங் செய்ய வரவில்லை. துணை கேப்டன் ரஹானேவே கேப்டன் பொறுப்பை கவனித்துக் கொண்டார். இது குறித்து அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் கூறுகையில், ’தற்போதைய நிலையில் கோலிக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது என்பது மட்டுமே தெரியும். வெள்ளிக்கிழமை காலையில் ஸ்கேன் சோதனை அறிக்கை வந்த பிறகே காயத்தின் முழு விவரமும் தெரியவரும்' என்றார். இந்தத் தொடரில் ஏற்கெனவே இந்திய அணி கடுமையாகப் போராடி வரும் நிலையில், அணியின் முதுகெலும்பான கோலிக்கு காயம் ஏற்பட்டிருப்பது மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.