காமன்வெல்த் போட்டிக்கான ஏலத்தில் இந்தியா பங்கேற்பதில் பலனில்லை: ஐஓஏ தலைவர் ராமச்சந்திரன்

2022-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் ஏற்கெனவே அதிகபடியான நாடுகள் களம்
காமன்வெல்த் போட்டிக்கான ஏலத்தில் இந்தியா பங்கேற்பதில் பலனில்லை: ஐஓஏ தலைவர் ராமச்சந்திரன்
Updated on
1 min read

2022-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் ஏற்கெனவே அதிகபடியான நாடுகள் களம் கண்டுள்ளதால், அதில் இந்தியா பங்கேற்பதில் பலனில்லை என்று இந்திய ஒலிம்பிக் சங்கத் (ஐஓஏ) தலைவர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
முன்னதாக, விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயலை செவ்வாய்க்கிழமை சந்தித்த ராமச்சந்திரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்கான ஏலத்தில் பல்வேறு நாடுகள் பங்கேற்றுள்ளன. அந்த ஏலத்தில் இந்தியா தற்போது பங்கேற்பது தாமதமான நடவடிக்கை. அரசு உரிய நிதி வழங்க உறுதியளிக்கவில்லை எனக் கூறியுள்ள தென் ஆப்பிரிக்கா, உண்மையில் அந்த ஏலத்தில் இருந்து முழுமையாக பின்வாங்கவில்லை. காமன்வெல்த் போட்டிக்கான கமிட்டி தென் ஆப்பிரிக்க நகரமான டர்பனை இன்னும் கருத்தில் கொண்டுள்ளது.
இதனிடையே, லண்டன், மான்செஸ்டர், பிர்மிங்கம் ஆகிய நகரங்களில் காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது. எனவே, இத்தகைய சூழ்நிலையில் இந்தியா இந்த ஏலத்தில் பங்கேற்பதில் பலனில்லை.
காமன்வெல்த் போட்டியைத் தவிர இதர சில போட்டிகளை நடத்துவது தொடர்பாகவும் ஐஓஏ மற்றும் விளையாட்டு அமைச்சகம் எதிர்நோக்கி வருகிறது. ஆனால், அதுதொடர்பான தகவல்களை இப்போது வெளியிடுவது முதிர்ச்சியற்றதாக இருக்கும்.
பல்வேறு விளையாட்டுகள் அடங்கிய போட்டிகளை நடத்துவதையே நாங்கள் எதிர்நோக்கி வருகிறோம். சீனா, கடந்த 15-20 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் அதைத் தான் செய்துகொண்டிருந்தது. அதே முறையை நாமும் பின்பற்றலாம்.
பல்வேறு விளையாட்டுகள் அடங்கிய போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படாத வரையில், நமது வீரர்/வீராங்கனைகளுக்கு சிறப்பான முன்னேற்றம் கிடைக்காது. அவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கான உந்துதலும் கிடைக்காது.
90 நாள்களுக்கு உள்ளாக தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவில் வெற்றிகரமாக நடத்திக் காட்டினோம். எனவே, பல்வேறு விளையாட்டுகள் அடங்கிய போட்டிகளை நடத்தவே எப்போதும் எதிர்நோக்குகிறோம் என்று ராமச்சந்திரன் கூறினார்.
இதனிடையே, தில்லியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஊரக விளையாட்டுப் போட்டிகள் குறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் கூறியதாவது:
அந்த விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்தப் போட்டிகளுக்காக 2 மாதங்களுக்கு முன்புதான் திட்டமிட்டோம். இந்நிலையில், அதை அரசியலுடன் தொடர்புப்படுத்தி, உரிய மைதானங்களை வழங்க தில்லி அரசு மறுக்கிறது.
எனவே, மாநகராட்சித் தேர்தலுக்குப் பிறகு அதுதொடர்பாக முடிவெடுக்க எண்ணியுள்ளோம் என்று விஜய் கோயல் கூறினார்.
தில்லி கிராமின் கேல் மஹோத்சவ்-2017 என்ற பெயரிலான ஊரக விளையாட்டுப் போட்டிகள், வரும் 25-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரையில் தில்லியில் நடைபெறுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com