தவறான தகவல்களை நீங்களாக யாருக்கும் சொல்ல வேண்டாம், எச்சரிக்கிறோம் என்று கூறி அச்சுறுத்த வேண்டாம்.
கஜா புயல்: தேசிய பேரிடர் குழு விழிப்புணர்வுப் பிரசாரம்
கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் தாழ்வான பகுதிகளில் தேசிய பேரிடர் குழுவினர் புதன்கிழமை விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொண்டனர்.
கஜா புயல் கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே வியாழக்கிழமை பிற்பகல் கரையை கடக்கவுள்ள நிலையில் அதன் தாக்கம் கடற்கரை மாவட்டமான புதுச்சேரிக்கு இருக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் புதுவை அரசு சார்பில் கஜா புயலை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இதனிடையே புயலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களை மீட்பதற்காக அரக்கோணத்தில் இருந்து 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் செவ்வாய்க்கிழமை புதுச்சேரி வந்தனர். மேலும், புயலின்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் கடந்த மழையின்போது பொதுமக்கள் பாதிக்கப்பட்ட ஜெயராம் நகர், கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர், ஜவஹர் நகர் உள்ளிட்ட பகுதிகளை தேசிய பேரிடர் மீட்புக் குழு கமாண்டர் அமர் மற்றும் உழவர்கரை நகராட்சி வட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பேரிடர் காலத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தினர்.