கஜா புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது: பாலச்சந்திரன் 

தமிழகத்தைத் தாக்கிய கஜா புயல் இன்று காலை 11.30 மணியளவில் வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கஜா புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது: பாலச்சந்திரன் 


சென்னை: தமிழகத்தைத் தாக்கிய கஜா புயல் இன்று காலை 11.30 மணியளவில் வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது, நாகப்பட்டினத்தில் கரையைக் கடந்த கஜா புயல் இன்று காலை 11.30 மணியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, கரூர், நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் இப்பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும். இது கேரளாவை அடைந்து பிறகு அரபிக் கடலில் சென்றடையும்.

தற்பொழுதைய நிலவரப்படி தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் வரும் 18ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி தென் மேற்கு வங்கக் கடலை  நோக்கி நகரும்.

இதன் காரணமாக மீனவர்கள் 18ம் தெற்கு வங்கக் கடல் பகுதியிலும்,  19ம் தேதி தென் மேற்கு வங்கக் கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வடகிழக்குப் பருவ மழை காலமாக அக்டோபர் 1ம்  தேதி முதல் இன்று வரை தமிழகத்தில் பதிவான மழையின் அளவு 22 செ.மீ. இது இயல்பு அளவைக் காட்டிலும் 23 சதவீதம் குறைவு.

அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 17 செ.மீ. மழையும், அதிராம்பட்டினத்தில் 16 செ.மீ. மழையும், பேராவூரணி, தஞ்சையின் பட்டுக்கோட்டை, நெய்வேலி பகுதிகளில் 14 செ.மீ. மழையும், விருதாச்சலத்தில் 12 செ.மீ.மழையும் பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com