இலங்கைத் தேர்தல் - இனி என்ன?

இலங்கையில் இந்த ஆண்டு இரண்டு தேர்தல்கள் முடிவடைந்து மைத்ரிபால சிறீசேனா அதிபராகவும், ரணில் விக்ரமசிங்க நான்காவது முறையாகப்
Updated on
3 min read

இலங்கையில் இந்த ஆண்டு இரண்டு தேர்தல்கள் முடிவடைந்து மைத்ரிபால சிறீசேனா அதிபராகவும், ரணில் விக்ரமசிங்க நான்காவது முறையாகப் பிரதமராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி 93 இடங்களில் வெற்றி பெற்றது. அவர் போட்டியிட்ட கொழும்பு மாவட்டத்தில் இதுவரை யாரும் பெறாத அளவுக்கு 5,00,566 (preference vote) விருப்ப வாக்குகளைப் பெற்றிருந்தார்.
 இதற்கு முன்பு, சந்திரிகா குமாரதுங்க 1994-இல் அதிக வாக்குகள் பெற்று சாதனை படைத்திருந்தார். ரணில் பிரதமராவதற்கு உரிய பலம் இல்லாததால் தற்போது எதிரும் புதிருமாக இருந்த சிங்களர்கள் ஒன்றுசேர்ந்து தேசிய அரசை அமைக்க உள்ளனர். சிறீசேனா வேண்டுகோளின்படி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து இந்த தேசிய அரசு அமையும்.
 இந்த தேசிய அரசு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்னாள் அதிபர் சந்திரிகாவின் தலைமையில் சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் முன்னாள் அமைச்சர்களான நிமல் சிறிபால டிசில்வா, சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க, எஸ்.பி. திசநாயக, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 இந்த அரசில் இரு அணிகளைச் சேர்ந்த 70 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்க இருக்கின்றனர். இந்த தேசிய அமைச்சரவை 2017 ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை இயங்கும் என்று இரு கூட்டணியினரும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.
 இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 225 உறுப்பினர்களில் 196 பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மீதம் 29 பேர் தேசியப் பட்டியல் வரிசையில் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேசியப் பட்டியல் உறுப்பினருக்கான இடங்கள் விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் பிரித்து வழங்கப்படும்.
 தமிழர்களை வஞ்சிக்க, வைரிகளாக இருந்த ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், இலங்கை சுதந்திரக் கட்சியும் ஒன்றுகூடி அரசு அமைத்தால் என்னவாகும் என்பதுதான் நமது கேள்வி.
 சிறீசேனா, ரணில், சந்திரிகா, ராஜபட்ச ஆதரவாளர்கள் இலங்கை அரசியல் சதுரங்கத்தில் வெவ்வேறு திசையில் பயணித்தவர்கள். இன்றைக்கு அனைவரும் ஒன்றுகூடிவிட்டனர். திரும்பவும் சிங்களப் பேரினவாதம் நர்த்தனமாட இருக்கிறது.
 தமிழர்கள், முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று பதவிக்கு வந்தபின்பு தமிழர்களுக்கு அளித்த உறுதியின்படி சிறீசேனா எதையும் செய்யவில்லை. அதேபோலத்தான், கடந்த காலங்களில் ரணில் விக்ரமசிங்கவும் தமிழர் வாக்குகளைப் பெற்றுவிட்டு தமிழர்களுக்கு நன்றி பாராட்டவில்லை.
 சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக நிலம், ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களின் உரிமைகளையும், தனித்தன்மையையும் காக்கப் பாடுபடுவோம் என்ற வாக்குறுதியோடு தேர்தல் களத்தில் இறங்கியது.
 நடந்துமுடிந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2010 தேர்தலில் பெற்றதைப் போன்று 14 இடங்களில் வென்று, தேசியப் பட்டியல் வரிசையிலும் 2 இடங்களை நாடாளுமன்றத்தில் பெற்றுள்ளது.
 ஒருநாடு இரு தேசம், சுயநிர்ணய உரிமை என்ற கொள்கை முழக்கத்தோடு போட்டியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஓர் இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. உதயன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் வித்யாதரன் தலைமையில் போட்டியிட்ட முன்னாள் போராளிகளும் தோல்வியுற்றனர்.
 இவர்களில் ஒருசிலர் வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்குச் சென்றிருக்க வேண்டும். டக்ளஸ் தேவானந்தா திரும்பவும் வெற்றி பெற்றுள்ளார். இது ஒருபுறமிருக்க, மலையகத்தில் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக ஆறுமுகதொண்டைமான், முத்துசிவலிங்கம் போன்றோர் வெற்றி பெற்றுள்ளனர்.
 கடந்த அதிபர் தேர்தலில் படுதோல்வியடைந்த ராஜபட்சவுக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தல் அரசியல் மீள்பிரவேசத்துக்கான பொது வாக்கெடுப்பாகவே உலக நாடுகளால் கருதப்பட்டது.
 ஆனால், ராஜபட்ச திரும்பவும் தோல்வியைத் தழுவியது ஓர் ஆறுதலான விஷயம். அவரோடு இருந்தவர்கள் இன்றைக்கு அமைச்சரவையில் சேர்ந்து திரும்பவும் சிங்கள இனவாத அரசாக தேசிய அரசு அமைந்தால் தமிழர்களுடைய அபிலாஷைகளும், கோரிக்கைகளும் கானல்நீராகின்ற கதைதான்.
 ராஜபட்ச எதிர்கட்சித் தலைவராக அமர முயற்சிக்கிறார். பழைய குருடி கதவைத் திறடி என்ற நிலையில் சிங்களர்கள் திரும்பவும் தமிழர்களை அழிக்கக் கூடிய நிலைக்குத்தான் இந்த தேசிய அரசு செயலில் இறங்கும்.
 கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, தமிழர்கள் மீது ஏவப்பட்ட இன அழிப்பு, குறிப்பாக 2009 போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச சுதந்திரமான, நம்பகமான விசாரணை வேண்டும் என 2010-லிருந்து குரல்கள் எழுப்பப்பட்டும் அவையாவும் செவிடன் காதில் சங்கு ஊதிய கதையாகவே உள்ளது.
 மிருக பலத்தோடு சிங்களர்கள் அமைக்கும் தேசிய அரசு தேர்தல் சீர்திருத்தம் குறித்தான 20-ஆவது சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தால், தமிழர்களுக்கு தற்போது கிடைத்த 16 இடங்கள்கூட எதிர்காலத்தில் கிடைக்க இயலாத நிலைமை ஏற்படும்.
 1977 ஜூலை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மை பலத்துடன் இலங்கையில் ஆட்சியைப் பிடித்தது. 1972 அரசமைப்புச் சட்டத்தில் இரண்டாவது திருத்தம், 1977 அக்டோபர் 4-இல் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றி அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே (அதிபர் ஆட்சி) ஜெயவர்தனே எடுத்துக் கொண்டார். இதனால், 1978 பிப்ரவரி 4-இல் ஜெயவர்தனே சர்வ வல்லமை படைத்த அதிபரானார்.
 அதன்பின்பு, நாடாளுமன்றத்துக்கான காலம் ஆறு ஆண்டுகளாக மாற்றப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல்களில் பல உறுப்பினர்கள் கொண்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையும் செயல்பாட்டுக்கு வந்தது.
 பிரான்ஸ் நாட்டு மன்னன் லூயி XIV போல, நான்தான் நாடு, நான்தான் அரசு என்று முழுமையான சர்வாதிகாரியாகி தமிழர்களை ஜெயவர்தனே வேட்டையாடினார்.
 இந்த நிலைமையை மாற்றக் கூடிய வகையில் சிறீசேனா பதவியேற்றபின் 19-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி, பிரதமருக்கான பழைய அதிகாரங்கள் திரும்பவும் பிரதமருக்கே வழங்கப்பட்டதால், இதுவரை பொம்மையாக இருந்த பிரதமர் பதவி தற்போது ரணிலுக்கு அதிகாரத்தோடு கிடைத்துள்ளது.
 2009 போருக்குப் பின்பு, வாழ்வில் ஓரளவு நிம்மதி கிடைக்குமா என்று நம்பிக்கையோடிருந்த தமிழர்களுக்கு இலங்கையில் நிகழ்கின்ற அரசியல் சூழ்நிலைகள் பேரிடியாக அமையுமோ என்று அச்சம் நமக்கு ஏற்படுகிறது.
 இந்நிலையில், இந்தியாவினுடைய தலையீடு மட்டுமே தமிழர்களைத் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள சிங்கள தேசிய அரசிடம் இருந்து காக்க முடியும். இலங்கை தொடர்பாக இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் வருமாறு:
 இந்தியாவின் பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு, இந்து மகா சமுத்திரத்தை அமைதி மண்டலமாக காக்க, சீனாவின் வணிகப் பாதையான சில்க்வே, சீன நீர்மூழ்கிப் போர்க் கப்பல்கள் நடமாட்டம், அம்பாந்தோட்டை, கொழும்பு, திருகோணமலை துறைமுகங்களில் சீனாவின் ஆதிக்கம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.
 இலங்கையில் யார் வெற்றி பெற்றாலும் எங்களைப் புறக்கணிக்கவோ, எங்கள் ஒப்பந்தங்களைப் புறந்தள்ளவோ முடியாது என்ற கருத்தை சீனா வெளியிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
 இந்தியப் பெருங்கடலில் கடலுக்கடியில் உள்ள கனிம வளங்களைப் பற்றி ஆராய இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுவரும் இந்தத் தருணத்தில், சீனாவும் எரிபொருள்களின் மூலக்கூறு படிமங்கள் அங்கு கிடைப்பதை அறிந்து அவற்றைக் கைப்பற்ற விரும்புகிறது.
 இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் விஷயத்திலும் இந்தியா அக்கறை செலுத்த வேண்டும். எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை சுடுவோம் என ரணில் ஏற்கெனவே மமதையில் பேசினார்.
 எதிர்வரும் செப்டம்பர் 14-ஆம் தேதி ஜெனீவாவில் நடைபெறும் 30-ஆவது ஐ.நா. மனித உரிமை கூட்டத் தொடரில், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்த அறிக்கைக்கு இலங்கை அரசு என்ன பதிலளிக்கப் போகிறது என்பதை கவனிக்க வேண்டிய கடமை இந்தியாவுக்கு உள்ளது.
 அந்த ஐ.நா. அறிக்கை வெளியிடப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பே திடீரென இலங்கை அரசிடம் எப்படி அளிக்கப்பட்டது என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. ஐ.நா.வின் இந்த அறிக்கை இலங்கை அரசுக்குச் சாதகமாகத்தான் இருக்குமோ என்ற அச்சம் இதனால் ஏற்படுகிறது.
 ஈழத் தமிழர்கள் விரும்பும் எதிர்கால அரசியல் தீர்வுக்கு சர்வதேச மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
 தமிழர்களின் வீடுகள், விவசாய நிலங்களை திரும்பவும் ஒப்படைப்பது குறித்து நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தும் இதுவரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. 22-8-2015 அன்று சம்பூரில் நடந்த நிகழ்வில் சிறீசேனா இனிமேல் யுத்தமும், பிரச்னைகளும் இல்லை என்று சொன்னதை நடைமுறையில் சிங்கள அரசு பின்பற்ற வேண்டும்.
 மாகாண கவுன்சிலுக்கு நில நிர்வாகம், உள்துறை, சட்டம் - ஒழுங்கு, மீன் பிடித் தொழில் போன்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டு, மாகாண கவுன்சிலுக்கான சுயாட்சியை மலரச் செய்வதோடு ஒற்றையாட்சி முறையைக் கைவிட வேண்டும்.
 2009 முள்ளிவாய்க்கால் போரின்போது காணாமல் போனவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், ஆயிரக்கணக்கானோர் என்ன ஆனார்கள்? பேபி சுப்பிரமணியம், பாலகுமாரன் போன்ற போராளிகள் எங்கோ அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்? அவர்களுக்கு எப்போது சுதந்திரக் காற்று கிடைக்கும் என்பதே தெரியாத புதிராக இருக்கிறது.
 இந்தப் பிரச்னைகள்தான் பிரதானமானவை. தமிழர்களின் அடிப்படையான இந்தக் கோரிக்கைகள் ஈடேறுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. இலங்கைத் தேர்தல் முடிந்தது. இனி என்ன என்ற வினாவுக்கு பதில் கிடைக்கும் விதமாக இந்தியா என்ன செய்யப் போகிறது?
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com