நெறியற்ற நடவடிக்கைகள்...

நெல் சாகுபடி ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. 2014-இல் ஹெக்டேருக்கு 8,400 கிலோ நெல் கிடைத்தது. 2015-இல் சம்பா, தாளடியில் சராசரியாக
Updated on
3 min read

நெல் சாகுபடி ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. 2014-இல் ஹெக்டேருக்கு 8,400 கிலோ நெல் கிடைத்தது. 2015-இல் சம்பா, தாளடியில் சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு நெல் 5,980 கிலோ என்று குறைந்துவிட்டது. 2015-16க்கான சம்பா சாகுபடியில் 5,537 கிலோ என்று மீண்டும் குறைந்தது.
 காவிரி டெல்டா பகுதியில் சாகுபடி பணிகள் தொடங்கும்போது மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கவேண்டும். ஆனால், கடந்த பல ஆண்டுகளாக இந்த நாள்கள் தள்ளிப் போகின்றன. சில நேரங்களில் மேட்டூர் அணை திறப்பதில் சுணக்கமும் காட்டப்படுகிறது.
 2012-இல் செப்டம்பர் 17-இல் தான் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. 2013-இல் ஆகஸ்ட் 2-இல் தான் திறக்கப்பட்டது. 2014-இல் ஆகஸ்ட் 10-இல் தான் திறக்கப்பட்டது. 2015-இல் ஆகஸ்ட் 9-ஆம் தேதிதான் திறக்கப்பட்டது. குறிப்பிட்டபடி ஜூன் 12-இல் திறக்காமல் தாமதமாக திறந்தால் நெற்பயிர்கள் வாடி விடுகின்றன.
 கடந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்காமல் பயிர்கள் கருகின. இந்த ஆண்டு அதிக மழையால் பயிர்கள் அழுகிவிட்டன. ஆனால், காவிரி டெல்டாவில் சென்னை, கடலூர் போன்று பெரு மழைகள் இல்லாமலேயே வெள்ளத்தில் பயிர்கள் நாசமாகிவிட்டன. மழையில் பெய்த தண்ணீர் நீர்நிலைகளில் சேமிக்க முடியாமல் வேகமாக ஓடி கடலுக்குள் சென்றுவிட்டது. ஏனெனில், நீர்நிலைகளை தூர்வாரப்படவில்லை. காவிரிக் கரைகளும் சரியாக பராமரிப்பு செய்யப்படவில்லை.
 காட்டாமணக்கு, ஆகாயத் தாமரை, நாணல், புல், கருவேல மரங்கள் நீர் நிலைகளை ஆக்கிரமித்துக்கொண்டு நீர் இங்கு நிற்பதுமில்லை.
 சோழர் ஆட்சிக் காலத்தில் டெல்டா பகுதியில் ஆயக்கட்டை நிர்வகிக்க ஏரி வாரியம் இருந்தது. மூவேந்தர் காலத்தில் குறிப்பாக பாண்டியர் காலத்தில் கி.பி. 1785-இல் பங்குனி, சித்திரை மாதங்களில் கிராமத்து மக்கள் ஒன்று கூடி நீர் நிலைகளை தூர்வாரினர்; மதகுகளும், கதவுகளும் சரி செய்யப்பட்டன. சோழர் ஆட்சிக் காலத்தில் நடந்த மராமத்துப் பணிகளை உத்தரமேரூர் கல்வெட்டே சொல்கின்றது.
 அக்காலத்தில் ஊரில் பொதுவாக கணக்கில் இருந்த பொன், நெல், நிலம் போன்ற சொத்துகளை வைப்பீடாகக் கொண்டு, அதிலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டு குடி மராமத்துப் பணிகள் சிறப்பாக, செம்மையாக நடைபெற்றன.
 திருச்சி-தஞ்சை மாவட்டத்தை வளப்படுத்துகின்ற உய்யக்கொண்டான் கால்வாய் இன்றைக்கும் விவசாயிகளின் கொடையாக அப்பகுதியில் உள்ளது. தொழில்நுட்பத்தோடு வெள்ளக் காலத்தையும் மனதில் கொண்டு வெட்டப்பட்ட கால்வாயாகும்.
 அன்றைக்குக் கட்டிய கால்வாய் இன்றைக்கு தஞ்சை மாவட்ட டெல்டா பகுதிக்கு மூன்று நீண்ட வாய்க்கால்களாக அமைந்து பாசனத்திற்குப் பயன்படுகிறது. இந்த உய்யக்கொண்டான் முதல் நீட்டிப்பிற்கு 12 ஏரிகளும், இரண்டு, மூன்று நீட்டிப்புகளில் தலா 3 ஏரிகளும் ஆக மொத்தம் 18 ஏரிகள் உள்ளன.
 இந்த 18 ஏரிகளில் இதுவரை சரியாக தூர்வாரி மராமத்து செய்யவும் இல்லை. இதேபோன்று, புதியகட்டளை மேட்டு வாய்க்காலில் 105 ஏரிகள் இதுவரை தூர்வாரப்படவில்லை. பல ஏரிகள் தற்போது காணாமல் போய்விட்டன என்றும் செய்திகள் வருகின்றன. இம்மாதிரி பாசன நீர் மேலாண்மை நடவடிக்கைகளை செய்யாததால் காவிரி டெல்டா விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
 தமிழகத்தில் மொத்தம் 39,202 ஏரிகள் உள்ளன. இதில் 13,699 ஏரிகள் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. ஆனால், நடைமுறையில் 3,267 ஏரிகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. இந்த நீர்நிலைகளை பாதுகாக்கவும் இல்லை. இதை, குடி மராமத்து செய்யவும் ஆட்சியாளர்களுக்கு மனமில்லை. இதைவிட வேறு என்ன பணிகள் அரசுக்கு இருக்கின்றனவோ தெரியவில்லை?
 வரப்புயர நீர் உயரும்
 நீர் உயர நெல் உயரும்
 நெல் உயரக் குடி உயரும்
 குடி உயரக் கோல் உயரும்
 கோல் உயரக் கோன் உயர்வான்
 -என்று மன்னனை வாழ்த்திய ஒளவையார் காலத்தில், நீர்நிலைகளை அரசர்கள் எவ்வளவு கவனமாக கவனித்தார்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன சொல்ல முடியும்?
 நீர் நிலைகளை எல்லாம் ஆக்கிரமித்து கபளீகரம் செய்து அதை வீட்டு மனைகளாக்கி தங்களை வளப்படுத்திக்கொண்டார்கள் சமூக விரோதிகள். விவசாயிகள் பாதித்தால் நாடு பாதிக்கும் என்ற உணர்வே இல்லாமல் நீர் நிலைகள் பிரச்னையில் பாராமுகமாக இருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. விவசாயி என்ன செய்வார்? பெய்தும் கெடுக்கிறது. காய்ந்தும் கெடுக்கிறது.
 இயற்கையைக் குறை சொல்ல முடியாது. நீரைப் பயன்படுத்துவதில் சரியான அணுகுமுறை அரசிடம் இல்லை; நீர் மேலாண்மையும் சரியில்லை. காவிரியில் சுமார் 50}க்கும் மேல் தடுப்பணைகள் கட்டவேண்டும் என்ற திட்டங்கள் இருந்தும் பல ஆண்டுகளாக அரசு கவனிக்காமல் இருக்கிறது. மழைக்காலத்தில் பெய்கின்ற நீரை இந்த தடுப்பணைகளில் தேக்கி வைக்கலாம்.
 கேரளா, குமரி மாவட்டத்தில் நெய்யாறு அணையை மூடிவிட்டது. அடவி-நயினார், உள்ளாறு, செண்பகத் தோப்பு, அழகரணைத் திட்டம், முல்லைப் பெரியாறு, பாண்டியாறு புன்னம்புழா, சிறுவாணி, என கேரளாவோடு இந்த நீர்நிலைகளுக்கு எல்லாம் மோத வேண்டி உள்ளது.
 பி.ஏ.பி. என்று அழைக்கப்படுகின்ற பரம்பிக்குளம் - ஆழியாறு அணைத் திட்டம், கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்குப் பாசன மற்றும் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் அணை திட்டங்கள் ஆகும். 1958 நவம்பர் 9-ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டம் தமிழகம்-கேரளம் மாநிலங்களிடையே நதிநீர்ப் பங்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இதன் துணை நதிகளான தூணக்கனவு, பெருவாரிப்பள்ளம் ஆகியவை கேரள வனப்பகுதியில் அமைந்துள்ளன.
 பிரதானமான பரம்பிக்குளம் அணை தமிழகப் பொதுப்பணித் துறையால் கட்டப்பட்டு, கேரள மாநிலத்தின் பகுதியில் இருந்தாலும் தமிழக அரசுதான் பராமரிப்பு செய்கின்றது. இந்த திட்டத்தின் நீர்ப் பங்கீடு குறித்து கேரளமும், தமிழகமும் 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை அமர்ந்து பேசி மறு ஆய்வு செய்து ஒப்பந்தத்தை குறித்து ஆலோசனை செய்ய வேண்டும். ஆனால் தமிழகமும், கேரளமும் இதைச் சரியாக முறைப்படுத்தவில்லை.
 கடந்த 1992-ஆம் ஆண்டு இரு மாநில அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, கேரளப் பகுதியில் அமைந்துள்ள பரம்பிக்குளம் அணையை தங்கள் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும்; தமிழ்நாட்டுக்குத் தேவையான தண்ணீரை தாங்கள் வழங்குவதாக கேரளம் கோரிக்கை வைத்தது. ஆனால், அணை பராமரிப்பு செலவை தமிழகம்தான் ஏற்கவேண்டும் என்ற நிர்பந்தத்தையும் ஏற்படுத்தியது.
 படிப்படியாக, பரம்பிக்குளம் அணை யை கேரளம் தன்னுடைய கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர திட்டங்களைத் தீட்டி வருகிறது. இந்த அணையின் அருகே தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் 2013-ஆம் ஆண்டு கேரள அரசு தனது வனக் காவல் நிலையத்தை திறந்து அணைப் பகுதிகளைக் கண்காணிக்கத் தொடங்கியது. கடந்த ஜனவரி 16-ஆம் தேதி பரம்பிக்குளம் அணை மற்றும் துணை அணைகளின் பராமரிப்புப் பணிக்காகச் சென்ற தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளை அங்கு அனுமதிக்காமல் கேரள வனத்துறை திருப்பி அனுப்பியது.
 மற்ற பிரச்னைகளான முல்லைப் பெரியாறு, குமரி மாவட்டத்தில் நெய்யாறு, நெல்லை மாவட்டத்தில் அடவி நயினார், உள்ளாறு, விருதுநகர் மாவட்டத்தில் செண்பகவல்லி-அழகர் அணை திட்டம், கோவை மாவட்டத்தில் பம்பாறு, சிறுவாணி போன்ற நீராதார பிரச்னைகளில் கேரளம் வம்பு செய்வதைப் போல பரம்பிக்குளம்-ஆழியாறிலும் பிரச்னை செய்யத் துவங்கிவிட்டது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் பரம்பிக்குளம் அணை இருப்பதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டும், கேரளம் வம்படி வேலை செய்யத் தொடங்கிவிட்டது.
 இந்த பரம்பிக்குளம் திட்டத்தை கேரளம் முடக்கப் பார்க்கிறது. எப்படி காவிரி பிரச்னையில் ஒப்பந்தத்தை திரும்ப அமர்ந்து பேச முடியாமல் தள்ளப்பட்டதோ, அம்மாதிரியே திரும்ப 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமர்ந்து பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தை ஆய்வு செய்யாமல் இருப்பது முறையற்ற நடவடிக்கையாகும். கேரள அரசை மத்திய அரசு கண்டிக்காமல் பாராமுகமாகவே இருக்கின்றது.
 கவனத்தோடு கவனிக்க வேண்டிய தமிழக அரசும் கண்மூடித்தனமாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பது வேதனையைத் தருகின்றது. தமிழகத்தின் நீர் ஆதார உரிமைகள் அண்டை மாநிலங்களால் பறிக்கப்படுவது நெறியற்ற வாடிக்கைதனங்களாகிவிட்டன.
 கர்நாடகத்தோடு காவிரி, தென்பெண்ணை, ஒகேனக்கல் போன்ற நீர் ஆதாரப் பிரச்னைகள்; ஆந்திரத்தோடு பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு ஏரி பிரச்னைகள் என்று தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்வுகளை சரியான முறையோடு அணுகவில்லை என்பதுதான் வேதனையான விஷயம். எதிர்கால தமிழகம் இதனால் எப்படியெல்லாம் பாதிக்கப்படப் போகின்றதோ?
 
 கட்டுரையாளர்:
 வழக்குரைஞர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com