விவசாயிகளுக்கு அடுத்த மாதம் முதல் ரூபே அட்டை: அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

ஏ.டி.எம். இயந்திரங்களில் பயன்படுத்திக் கொள்ள விவசாயிகளுக்கு மே மாதம் முதல் ரூபே அட்டை வழங்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அறிவித்தார்.
விவசாயிகளுக்கு அடுத்த மாதம் முதல் ரூபே அட்டை: அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

ஏ.டி.எம். இயந்திரங்களில் பயன்படுத்திக் கொள்ள விவசாயிகளுக்கு மே மாதம் முதல் ரூபே அட்டை வழங்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அறிவித்தார்.
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசியது: கூட்டுறவு நிறுவனங்களில் சிறு குறு விவசாயிகள் பயிர்க் கடன் பெற்று கடந்த ஆண்டு மார்ச் வரையில் நிலுவையில் இருந்த பயிர்க் கடனை தள்ளுபடி செய்ததன் மூலம் 12,02,075 விவசாயிகள் ரூ.5,318.78 கோடியை தள்ளுபடியாகப் பெற்றுப் பயனடைந்துள்ளார்கள்.
நடப்பாண்டில் (2017-18) கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக ரூ.7000 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் முதல் ரூபே: கூட்டுறவுத் துறையை கணினிமயமாக்குவதற்கு துரித நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் கணினிமயமாக்கப்பட்டு தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளுக்கு இணையாக வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவையை சிறப்பாக அளித்து வருகின்றன.
பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசு ரூபே விவசாயக் கடன் அட்டை திட்டத்தை செயல்படுத்துமாறு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், பயிர்க்கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூபே விவசாயக் கடன் அட்டை மே மாதம் முதல் வழங்கப்பட உள்ளது. ரூபே விவசாயக் கடன் அட்டையைக் கொண்டு இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளின் ஏடிஎம்களிலும் பரிவர்த்தனை செய்துகொள்ளலாம்.
கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் 32,715 முழு நேர மற்றும் பகுதி நேர நியாயவிலைக் கடைகள் கனிணிமயமாக்கப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு நிர்வாக முறையில் அத்தியாவசியப் பொருள்களை வழங்கி வருகிறது. புதிய குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்க, முகவரி மாற்றம் செய்ய, புதிய பெயர் சேர்க்க, நீக்க, மொபைல் எண் மாற்றம் செய்ய www.tnpds.com என்ற இணையதளத்தின் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
புகார் தெரிவிக்க செல்லிடப்பேசி எண்: மேலும், நியாயவிலைக் கடையில் என்னென்ன பொருள்கள் உள்ளன, கடையில், எவ்வளவு இருப்பு உள்ளது, நுகர்வோர்கள் வாங்கிய பொருள்களின் விவரம், கடை திறந்துள்ளதா இல்லையா என அறிதல், வாங்காத பொருள்களுக்கு எஸ்.எம்.எஸ். வருதல் போன்ற குறைகளைக் களைய 1967 மற்றும் 18004255901 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்கலாம்.
கூட்டுறவு நிறுவனங்களில் அனைத்து நிலைகளிலும் உள்ள காலிப் பணியிடங்கள் இன சுழற்சி முறையில் உரிய வழிமுறைகளைப் முறையாக பின்பற்றி விரைவில் நிரப்பப்படும் என்றார் செல்லூர் கே.ராஜூ.
இந்தக் கூட்டத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அ.ஞானசேகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com