வளமான வருவாய் தரும் வான்கோழி வளர்ப்பு!

தமிழகத்தில் கால்நடை வளர்ப்போருக்கு வளமான வருவாய் தரும் வகையில் வான்கோழி வளர்ப்பு விளங்கி வருகிறது. இதுதொடர்பாக கால்நடை பராமரிப்புத் துறையினர் கூறியது:
வளமான வருவாய் தரும் வான்கோழி வளர்ப்பு!

திருநெல்வேலி: தமிழகத்தில் கால்நடை வளர்ப்போருக்கு வளமான வருவாய் தரும் வகையில் வான்கோழி வளர்ப்பு விளங்கி வருகிறது. இதுதொடர்பாக கால்நடை பராமரிப்புத் துறையினர் கூறியது:
வான்கோழிகளை புறக்கடை வளர்ப்பு, மிதத்தீவிர முறை அல்லது மேய்ச்சலுடன் கொட்டகையில் வளர்ப்பு, ஆழ்கூள முறையில் கொட்டகையில் வளர்ப்பு, கம்பி வலை மேல் வளர்ப்பு ஆகிய முறைகளில் வளர்க்கலாம்.
புறக்கடை வளர்ப்பு: புறக்கடை வளர்ப்பு என்பது கிராமப்புறங்களில் விவசாயிகள் வீட்டுத் தோட்டங்களில் வான்கோழிகளை வளர்ப்பதைக் குறிக்கும். வீடுகளில் இருக்கும் நெல், அரிசி, குறுணை, கம்பு, சோளம், தவிடு, எஞ்சிய சமைத்த உணவு, சமையல் அறைக் கழிவுகள் ஆகியவை வான்கோழிகளுக்கு உணவாக அமைகின்றன. புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகளுக்குத் தானியங்கள், கீரைகள், களைகள் போதுமான அளவு கிடைத்து விடும். ஆனால், புரதச்சத்து தேவை நிறைவு பெறாது. இதை ஈடுகட்ட கடலைப் பிண்ணாக்கு, எள்ளுப் பிண்ணாக்கு, சூரியகாந்திப் பிண்ணாக்கு இவற்றில் ஏதாவது ஒன்றினைத் தண்ணீரில் ஊறவைத்து இத்துடன் சிறிதளவு தவிடு வகையினைச் சேர்த்து கொடுக்க வேண்டும். ஒரே சமயத்தில் அதிகமாக வைக்காமல் சிறிது சிறிதாகத் தீவனம் வைக்க வேண்டும்.
மேய்ச்சலுடன் கொட்டகையில் வளர்ப்பு: வியாபார முறையில் வான்கோழிப் பண்ணை அமைத்திட, மேய்ச்சலுடன் கொட்டகை கட்டி வளர்க்கும் முறை, புறக்கடை முறையைவிடச் சிறந்ததாகும். ஒரு ஆண் வான்கோழிக்கு கொட்டகையில் 5-க்கு 6 சதுர அடியும், ஒரு பெட்டை வான்கோழிக்கு சுமார் 4-க்கு 4 சதுர அடியும் இடவசதி தேவைப்படும். இந்தக் கொட்டகையில் நெல் உமி அல்லது கடலைத் தோல் போட்டு, ஆழ்கூளம் அமைத்து விட வேண்டும். சுமார் 100 வான்கோழிகள் கொண்ட பண்ணை அமைத்திட 20 ஆண் வான்கோழிகள் தேவை. இதற்காகச் சுமார் 20 அடி அகலம், சுமார் 25 அடி நீளம் கொண்ட ஒரு கொட்டகை அமைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கொட்டகையைச் சுற்றி சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பிற்கு கம்பி வலை கட்டப்பட்ட பகுதியில் மேய்ச்சலுக்கு விடலாம். புல் பூண்டுகள், களைகளை ஓரிரு நாள்களில் தின்று விடும். இந்த இடத்தில் அருகம்புல் கொண்டு வந்து போடலாம். கலப்புத் தீவனம் இரண்டு அல்லது மூன்று முறை தினமும் அளிக்கலாம்.
ஆழ்கூள முறை வளர்ப்பு: ஆழ்கூளம் அமைப்பதற்கு நெல் உமி அல்லது கடலைத் தோலை சிமெண்ட் தரையின் மீது ஆறு அங்குலத்திற்கு பரப்பவேண்டும். இம்முறையில் வான்கோழிகளை வியாபார நோக்கில் வளர்க்க வேண்டுமானால் குறைந்தது 200 வான்கோழிகள் கொண்ட பண்ணையை அமைக்க வேண்டும். இம் முறையில் 40 ஆண் வான்கோழிகளுக்கு, 160 பெட்டை வான்கோழிகள் என்ற விகிதத்தில் வளர்க்கலாம்.
கம்பி வலைச் சட்டங்களில் வளர்ப்பு: அதிகமாக மழைபெய்யும் இடங்களிலும், ஆழ்கூளம் காய்ந்த நிலையில் வைக்க முடியாத இடங்களிலும் கம்பிவலைச் சட்டங்களைப் பொருத்தி அதன் மேல் வான்கோழிகளை வளர்க்கலாம். இதற்கான கொட்டகையினை அமைப்பதை ஆழ்கூள முறையில் போன்றே கட்டிக் கொள்ள வேண்டும். ஆனால், சிமெண்ட் கான்கிரீட் கொண்ட தரை அமைக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் கோழிகளை கம்பி வலைச் சட்டங்களின் மேல் விட்டுத்தான் வளர்க்கப்போகின்றோம். பக்கவாட்டுச் சுவர், கம்பிவலைச் சட்டத்திற்கு மேல் 11/2 அடி உயரத்திற்கு அமைத்துக் கொள்ள வேண்டும். சட்டமானது ஒரு அங்குலத்திற்கு 2 அங்குலம் இடைவெளி கொண்ட கம்பி வலையினை 2 அடிக்கு 2 அடி மரச்சட்டங்களை அமைத்துக் கொண்டு அதன்மேல் பொருத்திவிட வேண்டும். அவற்றின் மீது வளர்ந்த வான்கோழிகளை வளர்த்திடலாம்.
கண்காணிப்பு வழிமுறைகள்: வான்கோழிகள் 7 முதல் 8 மாதங்களில் முட்டை இட ஆரம்பிக்கும். வான்கோழிக்கு எதிரிகள் நாய், நரி, கீரி, காட்டுப்பூனை, வீட்டுப்பூனை, காக்கை, கழுகு ஆகியவையாகும். வான்கோழிகள் பெரும்பாலும் சுயமாக முட்டைகளை அடைகாப்பது இல்லை. அடைகாக்கும் இயந்திரத்தின் மூலம் அல்லது நாட்டுக் கோழிகளைக் கொண்டு அடைகாக்கப்படுகிறது. முட்டைகளை மழை, பனிக்காலத்தில் 7 நாள் வரையிலும், காற்று இளவேனிற் காலத்தில் 6 நாள் வரையிலும், வெயில் காலத்தில் 4 நாள் வரையிலும் சேமித்துவைத்துப் பின் அடை வைக்க பயன்படுத்த வேண்டும். நாட்டுக் கோழிகளில் 7 முட்டை வரையிலும் அடை வைக்கலாம். அடைகாக்கும் நாள் 28 ஆகும்.
குஞ்சு பருவம் வளர்ப்பு முறை: வான்கோழி வளர்ப்பில் மிக முக்கியமான காலகட்டம் ஒரு மாதம் வரை வளர்ப்பதாகும். பொரித்த குஞ்சுகளை முடி உலர்ந்த பின் செயற்கை வெப்பமாக புரூடர் அமைத்து புரதம் நிறைந்த தீவன உணவு கொடுக்க வேண்டும். குளுகோஸ் கலந்த குடிநீரை வைக்க வேண்டும். வறுகடலை தூள் செய்து உணவாகக் கொடுக்கலாம். அவித்த முட்டையின் வெண்கரு மட்டும் எல்லா வகை தானியங்களுடன் கலந்து கொடுக்கலாம். தோப்புகள், விவசாய நிலங்கள், தரிசு நிலங்கள், மலர்த்தோட்டம், பழத்தோட்டம், தென்னந் தோப்புகள் இவற்றில் வான்கோழி வளர்க்கலாம். விவசாயத்தில் தீமை செய்யும் புழு, பூச்சி, கொசுக்களை உணவாக உட்கொண்டு பாதுகாக்கிறது. தென்னையில் உள்ள காண்டாமிருக வண்டு குப்பை கூளங்களில் முட்டை இட்டு புழுக்களை பெருக்கும் அந்த இளம்புழுக்களை வான்கோழி உணவாக உட்கொள்வதால் காண்டாமிருக வண்டு கட்டுப்படும்.
அரிசி, நெல்மணிகளை பெருமளவு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். குடிநீரை நிழலான இடங்களில் வைக்க வேண்டும். வெயில் பட்டு குடிநீர் சூடாவதைத் தவிர்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com