மஞ்சள் சாகுபடியில் மேம்பட்ட தொழில்நுட்பங்கள்

மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சள் தென்னிந்திய சமையலில் இன்றியமையாத இடத்தைப் பிடித்துள்ளது.
மஞ்சள் சாகுபடியில் மேம்பட்ட தொழில்நுட்பங்கள்

பெரம்பலூர்: மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சள் தென்னிந்திய சமையலில் இன்றியமையாத இடத்தைப் பிடித்துள்ளது. பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் பலவகையான நோய்களுக்கு எதிர்பொருளாக மஞ்சள் செயலாற்றுகிறது. இதன் காரணமாக, பலவகையான அழகுசாதன பொருள்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், துணிகளுக்கு சாயமேற்றுவதிலும் மஞ்சள் பயன்படுத்தப்படுவதால் சந்தையில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
ரகங்கள்: கோ- 1, கோ- 2, பி.எஸ்.ஆர் 1, பி.எஸ்.ஆர் 2, ஈரோடு உள்ளூர் ரகம், சேலம் உள்ளூர் ரகம் ஆகியவை தமிழகத்தில் சாகுபடி செய்ய உகந்த ரகங்கள்.
பருவம்: கடல் மட்டத்திலிருந்து 1,500 மீட்டர் உயரம் வரையிலும், 20- 30 செல்சியஸ் வெப்ப நிலையும், ஆண்டு மழையளவு 1,500 மி.மீ வரையுள்ள வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் மஞ்சள் சாகுபடி செய்யலாம். ஏப்ரல் மாத இறுதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை மஞ்சள் நடவு செய்யலாம். எனினும், ஜூன் மாதத்தில் நடவு மேற்கொண்டால் அதிக மகசூல் பெறமுடியும்.
மண்: நல்ல வடிகால் வசதிகொண்ட அங்ககச் சத்து நிறைந்த இரும்பொறை மண் மிகவும் ஏற்றது. பொல பொலப்புத் தன்மை வாய்ந்த செம்மண், வண்டல் மண் மற்றும் களிமண் நிலங்களிலும் வளரும் தன்மைகொண்டது. அமில காரநிலை 6- 7 இருக்கும் நிலங்களில் பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூல் நன்றாக இருக்கும். அதிகமாக நீர் தேங்கும் நிலங்களிலும், காரத்தன்மை வாய்ந்த நிலங்களிலும் பயிர் வெகுவான பாதிப்பிற்குள்ளாகும். கரடு முரடான மற்றும் கற்கள் நிறைந்த நிலங்களில் கிழங்கின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
மஞ்சள் கிழங்கு நேர்த்தி: தரமான மஞ்சள் கிழங்கைத் தேர்வுசெய்து, அவற்றை 1 லிட்டர் நீருக்கு கார்பெண்டாசிம் பூஞ்சாணக்கொல்லி 2 கிராம் மற்றும் மோனோகுரோட்டோபாஸ் பூச்சிக்கொல்லி 1.5 மில்லி என்ற அளவில் கலந்த கரைசலில் 20 நிமிடங்கள் நனைத்து வைக்கவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கிழங்கு அழுகல் நோய் ஏற்படுத்தக் கூடிய பூஞ்சை மற்றும் செதில் பூச்சி தாக்குதலிலிருந்து பயிரை பாதுகாக்க முடியும்.
குழித்தட்டு நாற்று உற்பத்தி: காய்கறி மற்றும் கரும்பு பயிர்களைப் போல மஞ்சள் கிழங்கையும் குழித்தட்டுகளைப் பயன்படுத்தி நாற்று உற்பத்தி செய்து நடவு செய்யலாம். இதற்கு நேர்த்தி செய்யப்பட்ட கிழங்குகளை சிறு, சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். ஒவ்வொரு துண்டும் 2 வளையங்கள் ஒரு கணுவைக் கொண்டிருக்குமாறு நறுக்க வேண்டும். இவ்வாறு நறுக்கப்படும் மஞ்சள் துண்டுகளின் எடை தோராயமாக 5 கிராம் என்ற அளவில் இருக்கும். 50 குழிகள் கொண்ட குழித்தட்டுகளை மஞ்சள் நாற்று உற்பத்திசெய்ய பயன்படுத்தலாம். 1 ஏக்கருக்கு தேவையான மஞ்சள் நாற்றுகள் உற்பத்தி செய்ய சுமார் 600 குழித்தட்டுகள் தேவைப்படும். மட்கிய தென்னை நாருடன் டிரைக்கோடெர்மாவிரிடி மற்றும் சூடோமோனாஸ் புரசன்ஸ் உயிரிகட்டுப்பாட்டு பொருள்களை ஏக்கருக்கு 1 கிலோ என்ற அளவில் கலந்து குழித்தட்டுகளில் உள்ள குழிகளில் பாதி அளவு நிரப்பி நறுக்கபபட்ட மஞ்சள் துண்டுகளை கணுப்பகுதி மேல் நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும். பிறகு, இதன்மீது தென்னை நார் கலவையை இட்டு நிரப்பி நிழலான இடத்தில் அடுக்கி வைக்க வேண்டும். பூவாளி கொண்டோ அல்லது கைத்தெளிப்பான் பயன்படுத்தியோ ஒரு நாளைக்கு ஒருமுறை நீர் தெளிக்க வேண்டும். அனைத்து குழிகளிலும் ஒரு இலை வெளிவந்த பிறகு ஹியூமிக் அமிலத்தை 1 லிட்டர் நீருக்கு 5 மி.லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். 4-வது நாளில் நாற்றைப் பிடுங்கி நடவு செய்யலாம். குழித்தட்டுகளை நீரில் கழுவி நிழலில் பாதுகாப்பாக வைத்திருந்தால் 3 ஆண்டுகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
குழித்தட்டு நாற்று முறையின் நன்மைகள்: விதைக் கிழங்கு தேவை குறைவு (150 கிலோ, ஏக்கர்) நடவு வயலில் இருக்கும் காலம் குறைவதால், கணிசமான அளவு நீர் மற்றும் மின்சாரம் சேமிக்கப்படுகிறது. ஒருமுறை களை எடுப்பதற்கான செலவு குறைகிறது. சரியான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும்.
நிலம் தயாரிப்பு மற்றும் நடவு: உழவிற்கு முன்பாக நிலத்தில் ஏக்கருக்கு 4 டன் என்ற அளவில் தொழு உரம் இட்டு அல்லது ஆடு மாடுகள் கொண்டு கிடைகட்டி உழவு செய்யவேண்டும். மண் நன்கு பொடியாகும் வரை 3 முதல் 4 முறை ஒரு அடி ஆழம் வரை உழவுசெய்ய வேண்டும். 45 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைத்து நீர் பாய்ச்சி ஈரம் இருக்கும்போது, 30 செ.மீ இடைவெளியில் மஞ்சள் நாற்றுகளை நடவுசெய்ய வேண்டும். டிரைக்கொடெர்மா ஹார்சியானம் எனும் எதிர் உயிர் பூஞ்சாணத்தை, ஏக்கருக்கு 1 கிலோ என்றஅளவில் எருவுடன் கலந்து நிலத்தில் ஈரம் இருக்கும்போது தூவி விடலாம்.
ஊடுபயிர்: வெங்காயம், கத்திரி, மிளகாய் உள்ளிட்ட பயிர்களை மஞ்சளில் ஊடு பயிராகப் பயிரிடலாம். மஞ்சள் ஒரு நிழல் விரும்பும் பயிர். ஆனால், அதிக நிழல் கிழங்கின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதால், வரப்பு ஓரங்களில் ஆமணக்கு, அகத்தி, துவரை ஆகிய பயிர்களைப் பயிரிடலாம்.
நீர் நிர்வாகம்: மண்ணின் நீர்பிடிப்புத் தன்மை மற்றும் காலநிலையைப் பொருத்து 5 முதல் 9 நாள்களுக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்சலாம். களிமண் பாங்கான நிலங்களுக்கு 15- 20 முறையும், மணற்பாங்கான நிலங்களுக்கு 30- 35 முறையும் நீர் பாய்ச்ச வேண்டும். கிழங்குகள் உருவாகும் சமயத்தில் நீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.
உர மேலாண்மை: அடியுரமாக ஏக்கருக்கு 80 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 22 கிலோ யூரியா, 150 கிலோ சூப்பர் பாஸ்பேட், 12 கிலோ பொட்டாஷ் உரங்களை பார் அமைப்பதற்கு முன்பாக இட வேண்டும். பார் அமைத்த பிறகு 12 கிலோ பெரஸ்சல்பேட், 6 கிலோ துத்தநாக சல்பேட் உரங்களை பார்களின் மீது தூவி விட வேண்டும். அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை, ஏக்கருக்கு 4 கிலோ அளவில் நிலத்தில் ஈரம் இருக்கையில் தூவி விட வேண்டும். நடவு செய்த 30, 60, 90 மற்றும் 120-வது நாள்களில் ஏக்கருக்கு 22 கிலோ யூரியா மற்றும் 12 கிலோ பொட்டாஷ் உரங்களை இட வேண்டும்.
நுண்ணூட்ட மேலாண்மை: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் மஞ்சள் பயிருக்கென்று பிரத்யேமாக நுண்ணூட்டக் கலவையைத் தயார் செய்து வழங்கி வருகிறது. ஐ.ஐ.எஸ்.ஆர் பவர் மிக்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நுண்ணூட்டக் கலவையை, ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் அளவில் நடவு செய்த 60 மற்றும் 90-வது நாள்களில் இலைவழியாகத் தெளிப்பதன் மூலம் நுண்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்து, 10 முதல் 15 சதவீத கூடுதல் மகசூல் பெறலாம். மேலும், கிழங்குகளின் தரமும் நன்றாக இருக்கும்.
கிழங்கு அழுகல் நோய்: நன்கு வளர்ந்த நிலையில், இலைகள் முழுவதும் காய்ந்துவிடுவதோடு, கிழங்குகள் அழுகி மட்கிவிடும். பாதிப்புக்குள்ளான செடிகளை கிழங்குடன் நிலத்திலிருந்து அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடத்திலும், அதைச் சுற்றியுள்ள செடிகளுக்கும் காப்பர் ஆக்சிகுளோரைடு மருந்தை 1 லிட்டர் நீருக்கு 2.5 கிராம் கலந்து ஊற்றலாம். டிரைக்கோடெர்மா ஹார்சியானம் எதிர் உயிர் பூஞ்சாணத்தை எருவுடன் கலந்து நிலத்தில் தூவலாம்.
இலைப்புள்ளி நோய்: இளம் இலைகளின் மேற்பரப்பில் பழுப்புநிற புள்ளிகள் தோன்றும். ஒழுங்கற்ற வடிவிலிருக்கும் இப்புள்ளிகளின் மையப்பகுதி வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் காணப்படும். நாளடைவில் இப்புள்ளிகள் ஒன்றிணைந்து பெரிய புள்ளிகளாக இலை முழுதும் பரவி இலை மடிந்துவிடும். இந்நோயைக் கட்டுப்படுத்த புரோபிகோனசோல் பூஞ்சாணக் கொல்லியை 1 லிட்டர் நீருக்கு 1 மில்லி அளவில் கலந்து தெளிக்கலாம்.
இலைத் தீயல் நோய்: நீள் உருளை வடிவ அல்லது செவ்வக வடிவ பழுப்புநிற புள்ளிகள் இலைகளின் இருபுறமும் காணப்படும். தாக்குதல் தீவிரமடையும் நிலையில் புள்ளிகள் அடர் பழுப்பு நிறத்திற்கு மாறி இலைகள் மஞ்சள் அல்லது பழுப்பு நிறமாகிவிடும். முறையான தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், செடியில் உள்ள அனைத்த கிளைகளுக்கும் பரவி செடியே மடிந்துவிடும். கிழங்கு உருவாவது வெகுவாக பாதிக்கப்படும். இதைக் கட்டுப்படுத்த பாதிப்பிற்குள்ளான இலைகளை செடியிலிருந்து அகற்றி தீயிட்டுக் கொளுத்த வேண்டும். பின்னர், அசாஸிஸ்ட்ரோபின் மற்றும் டைபென்கோனசோல் கலவை பூஞ்சாணக் கொல்லியை 1 லிட்டர் நீருக்கு 1 மி.லி அளவில் கலந்துதெளிக்கலாம்.
அறுவடை மற்றும் மகசூல்: ரகத்தைப் பொறுத்து நடவு செய்த 7- 9 மாதங்களில் மஞ்சள் அறுவடைக்குத் தயாராகும். இச்சமயத்தில் தரைக்கு மேலுள்ள அனைத்து பாகமும் காய்ந்து மடிந்துவிடும். இவற்றை அரிவாள் கொண்டு அறுத்து அப்புறப்படுத்தி விட்டு தேவை எற்பட்டால் நீர்பாய்ச்சி உலரவிட்டு, பின்னர் மஞ்சள் கொத்தும் கருவி கொண்டு கிழங்கைத் தோண்டி எடுக்கலாம். டிராக்டரில் பொருத்தி இயங்கக்கூடிய மஞ்சள் அறுவடைக் கருவியைப் பயன்படுத்தியும் கிழங்குகளைத் தோண்டி எடுக்கலாம். தோண்டி எடுக்கப்பட்ட மஞ்சளிலிருந்து மண்ணை அப்புறப்படுத்தி விட்டு, பின்னர் பதப்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு 8- 10 டன் பச்சை கிழங்கு மகசூலாகக் கிடைக்கும் என தெரிவித்தார் பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ஜே. கதிரவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com