தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறை!

தென்னையில் இளங்கன்றுகளிலிருந்து முதிர்ந்த மரங்கள் வரைக்கும் பல வகையான பூச்சிகள் தாக்கும். இவற்றில் காண்டாமிருக வண்டு
தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறை!

பெரம்பலூர்: தென்னையில் இளங்கன்றுகளிலிருந்து முதிர்ந்த மரங்கள் வரைக்கும் பல வகையான பூச்சிகள் தாக்கும். இவற்றில் காண்டாமிருக வண்டு, சிவப்புக் கூண் வண்டு, எரியோபைட் சிலந்தி, கருந்தலைப் புழு, ஒத்தைப் புழு, செதில் பூச்சி ஆகியவை அதிக சேதாரத்தை ஏற்படுத்துபவை.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள வேளாண் அறிவியல் மையத் தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ஜே. கதிரவன் கூறியது: 
காண்டாமிருக வண்டு

தென்னை பயிரிடக்கூடிய பெரும்பாலான இடங்களில் காண்டாமிருக வண்டுகளின் பாதிப்பு உள்ளது. இந்த வண்டுகளின் தாக்குதல் ஆண்டு முழுவதும் இருந்தாலும், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை அதிகமாக இருக்கும். தென்னை மரத்தின் நடுக்குருத்து மட்டையிடுக்கில் இந்தக் காண்டாமிருக வண்டு உட்கார்ந்துகொண்டு, மடிப்புடன் வெளிவரும் குருத்து மட்டையை கடித்துண்ணும். இந்த மட்டை குருத்திலிருந்து வெளிவந்த பின் விசிறிபோல முக்கோண வடிவத்தில் கத்தரித்துவிட்டதுபோல காணப்படும்.
இளம் தென்னங்கன்றுகள் தொடர்ந்து காண்டாமிருக வண்டின் தாக்குதலுக்குள்ளானால், அந்தக் கன்று பட்டுவிடுவதோடு, வளர்ந்த மரங்களின் வளர்ச்சியும் குன்றிவிடும். பாதிக்கப்பட்ட மட்டையின் அடிப்பாகத்தில் முட்டை வடிவத் துவாரம் காணப்படும். காற்று பலமாக வீசினால் இந்த மட்டை ஒடிந்து விழுந்துவிடும். 
நடுக்குருத்தில் வெளிவரும் பூங்கொத்தையும் இந்த வண்டுகள் தாக்கும். பாளை வெடிப்பதற்கு முன் காண்டாமிருக வண்டு தாக்கினால் மகசூல் குறையும். வளரும் தென்னையின் குருத்துப் பாகத்தில் காண்டாமிருக வண்டு கடிப்பதனால் ஏற்படும் காயத்தில், சிவப்புக் கூண் வண்டு உற்பத்தியாகி குருத்துப் பாகத்தைத் தாக்குவதால் அந்த மரத்தின் குருத்து முதலில் சாய்ந்து மரம் பட்டுப்போகும். 
தென்னந்தோப்பில் எருக்குழி இருந்தாலோ, தோப்போரத்தில் வீரிய ஒட்டு தென்னை மரங்களை நடவு செய்திருந்தாலோ, தோப்பைச் சரியாகப் பராமரிக்கவில்லையென்றாலோ காண்டாமிருக வண்டின் தாக்குதல் அதிகமாக இருக்கும். எனவே, தோப்பைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தோப்பில் பட்டுப்போன மரம் இருந்தால் அதை அடியோடு வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.
கட்டுப்படுத்தும் முறை: காம்போஸ்ட், தொழுவுரம் இவற்றை தோப்புக்கு பயன்படுத்தும்போது, அதில் இருக்கும் காண்டாமிருக வண்டின் புழுக்களையும், கூட்டுப் புழுக்களையும் பொறுக்கி அழித்துவிட வேண்டும். எருக்குழியில் மெட்டாரைசியம் என்னும் பூஞ்சாணத்தை இடுவதால் காண்டாமிருக வண்டின் புழுக்களை இந்தப் பூஞ்சை அழித்துவிடும்.
இனக்கவர்ச்சிப் பொறிகளைப் பயன்படுத்தியும் வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம். இதற்கு ஆமணக்கு புண்ணாக்கை தண்ணீரில் கலந்து, வாய் அகலமாக உள்ள மண் சட்டிகளில் எடுத்து தோப்பில் வைத்துவிட்டால் அதன் வாசனைக்கு வண்டு வந்து விழும். ஒவ்வொரு நாள் காலையிலும் விழுந்துகிடக்கும் வண்டுகளைப் பொறுக்கி அழித்துவிட வேண்டும். தேங்காய் அறுவடை செய்யும் ஒவ்வொரு முறையும் குருத்துப் பகுதியில் வண்டு உள்ளதா எனப் பார்த்து, வண்டு இருந்தால் கூர்மையான கம்பியைப் பயன்படுத்தி குத்தியெடுத்து அழிக்க வேண்டும்.
சிவப்புக் கூண் வண்டு

இந்த கூண் வண்டு மரத்தின் அடித்தண்டுப் பகுதிகளிலும், உச்சியிலும் உள்ள தண்டுப்பகுதிகளில் சின்ன சின்ன துவாரங்களை ஏற்படுத்தி முட்டை வைக்கும். முட்டையிலிருந்து வெளிவரும் புழுவானது தண்டுப் பகுதியில் உள்ள மிருதுவான திசுக்களை சாப்பிட்டு மரநார்களை துவாரம் வழியாக வெளியே தள்ளும். மரத்தில் காது வைத்துக் கேட்டால் புழுக்கள் இரையும் சப்தம் கேட்கும். தாக்கப்பட்ட மரத்தின் துவாரம் வழியாக பழுப்பு நிறத்தில் ஒருவகை திரவம் வெளிவரும்.
கட்டுப்பாடு: இதைக் கட்டுப்படுத்த மரத்தில் காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது மிக அவசியம். வண்டு தாக்கிய மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். மரத்தில் உள்ள துளைகளில் 5 மில்லி மோனோகுரோட்டோபாஸ் பூச்சிக்கொல்லியை 5 மில்லி தண்ணீருடன் கலந்து ஊசி வழியாகச் செலுத்த வேண்டும். 10 மில்லி மோனோகுரோட்டோபாஸ் பூச்சிக்கொல்லியை 10 மில்லி தண்ணீருடன் கலந்து வேரில் கட்டிவிடலாம். கூண் வண்டுகளை கவர கரும்புச்சாறு 3 லிட்டர், ஈஸ்ட் 5 கிராம், அசிட்டிக் அமிலம் 5 மில்லி, நீளவாக்கில் வெட்டப்பட்ட இலைமட்டைத் துண்டுகளை ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு ஏக்கருக்கு 30 என்னும் எண்ணிக்கையில் தென்னந்தோப்பில் உள்ள மரங்களில் கட்டி அழிக்கலாம். கூண் வண்டு தாக்கிய வாரத்தில் 3 கிராம் எடையுள்ள அலுமினியம் பாஸ்பைடு மாத்திரைகளை போட்டு களிமண்ணால் மூடியும் அழிக்கலாம். 
ஈரியோபைட் சிலந்தி 

ஈரியோபைட் சிலந்தி தென்னங் குரும்பைகளிலும், இளம் காய்களின் தொட்டுக்கு அடியிலும் இருந்துகொண்டு மிருதுவான திசுக்களை தாக்கி சாறை உறிஞ்சும். அவ்வாறு உறிஞ்சப்பட்ட பகுதி பழுப்பு நிறமாக மாறும். தாக்குதலுக்குள்ளான குரும்பைகள் வளர்ச்சியடைந்து, இளங்காயாக மாறும்போது பழுப்பு நிறப் பகுதியின் அளவு அதிகமாகி, நீளவாக்கில் பல சின்னச் சின்ன வெடிப்புகளும் தோன்றும். இதனால் தேங்காயின் அளவு குறைவதோடு மட்டுமன்றி, உள்ளே இருக்கும் பருப்பின் அளவும் குறைந்துவிடும். 1- 9 மாதக் குரும்பைகள் இச்சிலந்தியின் தாக்குதலுக்குள்ளாகும். இந்தச் சிலந்தி குறுகிய காலத்தில் அதிக இனப்பெருக்கம் அடைந்து, காற்று மூலமாக வேகமாகப் பரவும். 
கட்டுப்பாடு: இதைக் கட்டுபடுத்த அதிகம் பாதிப்புள்ளாகி உதிர்கின்ற குரும்பைகளை மண்ணில் புதைத்து அல்லது எரித்து அழித்துவிட வேண்டும். இயற்கை பூச்சி விரட்டிக் கரைசல் பயன்படுத்தியும் ஈரியோபைட் சிலந்தியைக் கட்டுப்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில் 500 மில்லி தண்ணீரை எடுத்துக்கொண்டு, 5 கிராம் துணி சோப்பைக் கரைக்க வேண்டும். வேப்ப எண்ணெய் 20 மில்லியை இந்த சோப்புக் கரைசலில் ஊற்றி நன்றாக நுரை வரும் வரை கலக்க வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் 500 மில்லி தண்ணீரை எடுத்து 20 கிராம் வெள்ளைப் பூண்டை நசுக்கிப் போட்டு நன்றாகக் கலக்கி துணியால் வடிகட்டி வேப்ப எண்ணெய், சோப்புக் கரைசல் உள்ள பாத்திரத்தில் ஊற்றி நன்றாகக் கலக்க வேண்டும். இந்தக் கரைசலை இளம் குரும்பைகளின் மீது தெளிப்பதன் மூலமாக ஈரியோபைட் சிலந்தியைக் கட்டுப்படுத்தலாம். 
டிரையசோபாஸ் பூச்சிக்கொல்லியை ஒரு லிட்டர் நீருக்கு 5 மில்லி அளவு கலந்து தெளிக்கலாம். சிலந்தி பூச்சியின் தாக்குதல் பெரும்பாலும் ஏப்ரல், மே மாதங்களில் அதிகமாகக் காணப்படும். இந்நேரத்தில் மருந்து தெளித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கருந்தலைப் புழு

இந்தப்புழு இலைகளின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு பச்சையத்தை சுரண்டிச் சாப்பிடும். கருந்தலைப் புழுக்களின் தாக்குதல் அதிகமாக காணப்படும் தென்னை மரங்களின் முதிர்ந்த ஓலைகள் முழுவதுமாக காய்ந்து கரும்பழுப்பு நிறத்திற்கு மாறிவிடும். நடுப்பகுதியில் உள்ள 3- 4 இளம் ஓலைகள் மட்டும் பச்சை நிறத்தில் இருக்கும். கருந்தலைப் புழுக்கள் ஓலைகளிலிருந்து சுரண்டிய திசுக்களையும், கழிவுப்பொருளையும் சேர்த்து, அதன் வாயில் சுரக்கும் திரவத்தைக் கொண்டு, மெல்லிய நூலாம் படை போன்ற கூடுகளைக் கட்டும். 
வெப்பநிலை 32 முதல் 35 செல்சியசும், காற்றின் ஈரப்பதம் 75 லிருந்து 85 சதவீதம் வரையிலும் உள்ள காலநிலையில், கருந்தலைப் புழுக்களின் தாக்குதல் அதிகமிருக்கும். தாய் அந்துப்பூச்சிகள் பறந்துசென்று மற்ற தென்னை மரங்களில் முட்டையிடுவதன் மூலமாக இந்தப் பூச்சி பரவும். 
கட்டுப்பாடு: இதைக் கட்டுப்படுத்த அதிகம் பாதிப்புக்குள்ளான ஓலைகளை வெட்டித் தீயிட்டுக் கொளுத்த வேண்டும். 1 லிட்டர் நீருக்கு மாலத்தியான் பூச்சிக்கொல்லி மருந்து 5 மிலி, ஒட்டும் திரவம் 1 மில்லி கலந்து ஓலைகளின் கீழ்பாகத்தில் நன்றாக படும்படி தெளிக்க வேண்டும். உயரமான மரங்களுக்கு மரத்தின் வேரில் மோனோகுரோட்டோபாஸ் 10 மி.லி.யுடன் தண்ணீர் 10 மி.லி. கலந்து பாலீத்தின் பையில் கட்டிவிடலாம். 
நத்தைப் புழு 

இந்த நத்தைப் புழுக்கள் தென்னை ஓலையின் அடிப்பாகத்தில் இருந்துகொண்டு பச்சையத்தை சுரண்டிச் சாப்பிடும். தாக்கப்பட்ட ஓலைகள் நாளடைவில் காய்ந்துவிடும். தென்னை மரத்தின் அடியில் இப்புழுக்களின் எச்சம் மரத்தூள்போல இறைந்து கிடக்கும். தாக்கப்பட்ட மட்டைகளை வெட்டித் தீ வைத்து எரிக்க வேண்டும். டைகுளோர்வாஸ் மருந்தை 1 லிட்டர் நீருக்கு 2 மி.லி வீதம் கலந்து ராக்பர் ஸ்பிரேயர் மூலமாக தெளிக்கலாம்.
மோனோகுரோட்டோபாஸ் பூச்சிக்கொல்லி 10 மி.லி.யை 10 மி.லி. நீருடன் கலந்து வேர் மூலமாக செலுத்தலாம். விளக்குப் பொறிவைத்து அந்து பூச்சிகளை அழிக்கலாம்.
செதில் பூச்சி 

இந்தப் பூச்சி தென்னை ஓலைகளிலும், பாளையிலும் சாற்றை உறிஞ்சுகிறது. இதனால், இலைகளின் மேல்புறம் மஞ்சள் நிறமாக மாறி நாளடைவில் காய்ந்துவிடும். இதைக் கட்டுப்படுத்த தாக்கப்பட்ட மட்டைகளை வெட்டி தீ வைத்துக் கொளுத்த வேண்டும். மீதைல் டெமடான் பூச்சிக்கொல்லியை 1 லிட்டர் நீருக்கு 2 மி.லி அளவில் கலந்து தெளித்து செதில் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம். வேப்ப எண்ணெய்யை 1 லிட்டர் நீருக்கு 30 மி.லி. என்ற அளவில் கலந்து தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com