மல்லிகை சாகுபடியில் உயரிய தொழில் நுட்பம்

குண்டுமல்லிகைச் சாகுபடியில் உயரிய தொழில் நுட்பம்:மலர்களின் அரசி என்றழைக்கப்படும் மல்லிகை தமிழகத்தில் 15 ஆயிரம் எக்டர் பரப்பளவில் பயிரடப்பட்டு சுமார் 7 லட்சத்து 22 ஆயிரம் டன் விளைச்சல்
மல்லிகை சாகுபடியில் உயரிய தொழில் நுட்பம்

விழுப்புரம்:

குண்டுமல்லிகைச் சாகுபடியில் உயரிய தொழில் நுட்பம்:
மலர்களின் அரசி என்றழைக்கப்படும் மல்லிகை தமிழகத்தில் 15 ஆயிரம் எக்டர் பரப்பளவில் பயிரடப்பட்டு சுமார் 7 லட்சத்து 22 ஆயிரம் டன் விளைச்சல் வழங்கி வருகிறது. ராமநாதபுரம் குண்டுமல்லி, ராமாபாணம், மதன்பான், ஒற்றை மொகரா, இரட்டை மொகரா, இருவாச்சி, கஸ்தூரி மல்லி, ஊசிமல்லி, சூஜிமல்லி, அர்க்கா, ஆராதனா உள்ளிட்ட ரகங்கள் இந்தியாவில் பரவலாக பயிரப்பட்டு வருகிறது.
இதில், ராமநாதபுரம் குண்டுமல்லி ரகமே வணிக ரீதியாக தமிழகத்தில் சாகுபடி செய்ய ஏற்ற ரகமாகும். மலர் பயிர்களில் அறிவு சார்ந்த சொத்துரிமை நமது குண்டு மல்லிகைப் பூவிற்கே கிடைத்துள்ளது. மதுரை மல்லிக்கே முதன் முதலில் புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
வணிகரீதியாக பயிரிடப்படும் குண்டு மல்லிகையில் உயர் விளைச்சல் பெற நீர்ச்சிக்கனத்தையும், பயிருக்குத் தேவையான நீர்வழி உரப்பாசனத்தை மேற்கொள்ளவும், நவீன துல்லியப்பண்ணை சாகுபடி முறைகளைக் கடைபிடிப்பது இன்றைய சூழ்நிலையில் அவசியமாகிறது.
துல்லியப் பண்ணைத் திட்டத்தின் கீழ் உழிக்கலப்பை, சட்டிக்கலப்பை, ரொட்டவேட்டர் உழவினைப் பயன்படுத்த வேண்டும். இழுவை இயந்திரத்தில் இணைக்கப்பட்ட மட்ட பலகை கொண்டு நிலத்தை சமன்படுத்த வேண்டும். சொட்டுநீர் பாசன முறை அவசியமாகும்.
மணிக்கு 4 லிட்டர் தண்ணீர் சொட்டக்கூடிய டிரிப்பர்களை ஒரு மீட்டர் இடைவெளியில் அமைக்க வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள மான்யத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் சொட்டு நீர் பாசனத்தை அமைத்துக்கொள்ளலாம்.
துல்லியப்பண்ணை திட்டத்தில் 1.2-1.0 என்ற பயிர் இடைவெளி கடைபிடிக்கப்படுவதால், ஏக்கருக்கு 3,320 செடிகள் நடவு செய்யலாம். இதன் மூலம் ஏக்கருக்கு 760 செடிகள் அதிகமாக நடவு செய்யப்படுகிறது. பாரம்பரிய முறையில் நடவு செய்யும்போது குழி ஒன்றுக்கு 5 கிலோ வீதம் தொழு உரம் மட்டுமே அளிக்கப்படுகிறது.
ஆனால், உயரிய தொழில் நுட்ப முறையான துல்லியப்ண்ணை முறையில், ஒரு குழிக்கு நன்கு மக்கிய தொழு உரத்துடன், 250 கிராம் வேப்பம் பின்னாக்கு 100 கிராம், மண்புழு உரம் மற்றும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டீரியா, பொட்டாஷ் பேக்டீரியா ஆகியவை ஏக்கருக்கு முறையே 1 கிலோ வீகிதத்திலும், நுண் உயிர் இயற்கை பூச்சி, பூஞ்சான் உயிரி கொல்லிகளான சூடோமோனஸ் புளுரேஜன்ஸ், டிரைக்கோ டெர்மோ, டெர்மா, விரிடி, பேஜில்லஸ் சப்லிடிஸ் ஆகியவை முறையே ஏக்கருக்கு 1 கிலோ விகிதத்திலும் கடைசி உழவில் அளிக்கப்படும்.
நீர்வழி உரமிடுதல் அவசியம்: நீர்வழி உரமிடுதலில் துல்லியப்பண்ணையில் மிகமிக முக்கியமானதாகும். பரிந்துரைக்கப்பட்ட 100 சதவிகித உர அளவினையும் நீர்வழி உரமாக சொட்டு நீர்பாசனத்தில் அமைக்கப்படும் உரத்தொட்டி அல்லது உரங்கள் உறிஞ்சும் வென்சுரி மூலம் வாரம் ஒரு முறை, பயிரின் வளர்ச்சியைப் பொருத்து, விடாமல் செலுத்த வேண்டும்.
நீர்வழி உரமிடுதல் நீரில் கரையக்கூடிய உரங்களான பாலிபீடு, பொட்டாசியம் நைட்ரேட், யூரியா ஆகியவற்றை செடி ஒன்றுக்கு 160 கிராம், 200 கிராம், 20 கிராம் முறையே செடிகள் வளர்ச்சிப் பருவத்திற்கேற்ப பிரித்து வாரம் ஒரு முறை, சொட்டு நீர் பாசனத்தின் மூலம் செலுத்த வேண்டும். மூன்று நாளுக்கு ஒரு முறை சொட்டு நீர் பாசனம் செய்ய வேண்டும்.
உயிர் ஊக்கிகள்: துல்லியபண்ணைச் சாகுபடியில் உயிர் ஊக்கிகளான பஞ்சகவ்யா 3 சதவீதம், ஹியுமிக் அமிலம் 0.4 சதவீதம் கரைசலை செடிகளுக்கு மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். இதனால், பூக்களின் தரம் மேம்படுவதோடு, உற்பத்தியும் அதிகரிக்கும். பருவமில்லா காலங்களிலும், அதாவது மார்க்கெட்டுக்கு பூக்கள் வராதபோதிலும், 60 சதவீதம் பூக்களைப் பெறவும் இவ்வுயூர் ஊக்கிகள் பயன்படும். இந்த உயிர் ஊக்கி கரைசலை வடிகட்டி வேர்களிலும் செலுத்தலாம்.
பூச்சிக்கொல்லிகள்: மல்லிகை சாகுபடியில் பூச்சி, நோய் மேலாண்மை மிகவும் முக்கியம். மொட்டிகளை துளைத்து சாப்பிடும் மொட்டுப்புழுக்கள் ஏராளமான முட்டைகளிட்டு மொட்டுகளின் வடிவத்தையே மாற்றிவிடும்.
மலர் ஈக்கள் இலைகளையும் கிளைகளையும் ஒன்றினைத்து இலைகளின் பச்சையத்தை உறிஞ்சி அதிகப் பொருளாதார சேதத்தை ஏற்படுத்தும்.
இலைப் பிணைக்கும் புழுக்களை கட்டுப்படுத்த 1 லிட்டர் தண்ணீருக்கு புரபினோபாஸ் 0.5 மில்லி அல்லது ஸ்பினோசாட் மருந்துகளை தெளித்து கட்டுப்படுத்தலாம்.
இப்போது அதிக வெப்பநிலை என்பதால் இலையின் அடிப்பகுதியில் நூல்படையினை ஏற்படுத்தி பச்சையத்தை உறிஞ்சுவிடும். செம்பொன்சிலந்திகள் இதழ்களில் பழுப்பை ஏற்படுத்தி பூக்களை பாதிக்கும். வெண்பட்டு சிலந்தி பூச்சிகளை கட்டுப்படுத்த 0.03 சதவீதம் அசாடிராக்டின் என்ற தாவர பூச்சிக்கொல்லியுடன் 15 நாள்கள் இடைவெளியில் டைக்கோபால் மருந்தினை 1.5 மில்லி மற்றும் ப்ரெப்ர்கைட் மருந்து 2 மில்லி வீதம் கலந்து தெளிப்பதால் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். பூஞ்சான் நோயினை கட்டுப்படுத்த சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத உயிரியல் கலைவைகளான பேசில்லஸ் சப்லிடிஸ் அல்லது சூடோமோனஸ் புளுரோசன்ஸ் 0.5 சதவீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
இவ்வாறு துல்லிய பண்ணை சாகுபடியில் மல்லிகைப் பயிரிட்டால் நிச்சயம் ஒரு ஏக்கருக்கு 4 முதல் 5 டன்கள் ஏற்றுமதி தரம் வாய்ந்த பூக்களைப் பெற முடியும். செடிகளின் வளர்ச்சி, பூக்களின் மணம், நிறம் தரத்தின உயர்த்த 15 நாள்களுக்கு ஒரு முறை பயிர் வளர்ச்சி ஊக்கிகளான நைட்ரோ பென்சன் 24 சதம் வி.வி 2000 பிபிஎம் அல்லது 0.0001 சதம் ஜிப்ராலிக் அமிலம் 1000 பிபிஎம் அல்லது விட்டமின்களுடன் கலந்து தெளித்து பயன்பெறலாம்.
பொதுவாக குண்டு மல்லைகை நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் கவாத்து செய்யப்பட்டு உரமிடப்படும். தற்போது நவீன ஆராய்ச்சியால் புதிய முறைகளையும் வேளாண் துறை கண்டறிந்துள்ளது. அதனை கேட்டறிந்து பயன்பெறலாம்.
இந்த முறைகளை கடைபிடித்தால், வெளிநாட்டு ஏற்றுமதிக்கும், உள்நாட்டு தேவைகளுக்குமான தரமான மல்லிகை மரர்களை உற்பத்தி செய்து அதிக வருவாய் பெற முடியும்.
மேலும், விவரங்களுக்கு தங்கள் பகுதி தோட்டக்கலைத்துறை, வேளாண்துறையினரை தொடர்புகொள்ளலாம் என்று, சென்னை தோட்டக்கலை துணை இயக்குநர் (ஓய்வு) எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். (செல்.72009 95619)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com