தேசிய பாரம்பரிய நெல் திருவிழா: பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்பு

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் தேசிய அளவிலான 11-ஆவது பாரம்பரிய நெல் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.
பாரம்பரிய நெல் திருவிழாவில் விவசாயிகளுக்கு விதை நெல் வழங்குகிறார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ்.
பாரம்பரிய நெல் திருவிழாவில் விவசாயிகளுக்கு விதை நெல் வழங்குகிறார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் தேசிய அளவிலான 11-ஆவது பாரம்பரிய நெல் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.
நாகை சாலை அண்ணாசிலை அருகிலிருந்து இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் உருவப் படத்துடன் பேரணி புறப்பட்டது. காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஏ.வி. துரைராஜன் தலைமையில் நடைபெற்ற பேரணியை, மாநில நெல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் சி. பாலகிருஷ்ணராஜா தொடங்கி வைத்தார்.
பாரம்பரிய நெல், அரிசி வகைகள், வேளாண்மைக் கருவிகள், மூலிகை மற்றும் பழமரக் கன்றுகள் அடங்கிய கண்காட்சியை தொழிலதிபர் ஏ.ஆர்.வி. விவேக் தொடங்கி வைத்தார். கிரியேட் நிர்வாக அறங்காவலர் பொன்னம்பலம் தலைமை வகித்தார். தமிழக இயற்கை உழவர் இயக்க மாநிலத் தலைவர் சிக்கல் அ. அம்பலவாணன், திருச்சி அகில இந்திய வானொலி நிலைய இயக்குநர் கே. நடராஜன், நமது நெல்லைக் காப்போம் தேசிய ஒருங்கிணைப்பாளர் எஸ். உஷாகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் எஸ். நாகூர்அலி ஜின்னா விழாவை தொடங்கி வைத்துப் பேசியது:
தமிழகத்தில் வேளாண்மை மேம்பாட்டிற்காக நபார்டு வங்கி சார்பில் ரூ. 22,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் நீர் நிலைகள் மேம்பாட்டிற்கு மட்டும் ரூ. 5,000 கோடி பயன்படுத்தப்படவுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் நீர்நிலைகள் மேம்பாட்டிற்காக ரூ. 3,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன்மூலம் 41,000 ஏரிகள் தூர் வார முடிவு செய்து, அதில் 19,000 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. இதன்மூலம், நீர் சேமிக்கப்பட்டு, கடுமையான வறட்சியிலும் 120 சதவீதம் நெல் மகசூல் பெறப்பட்டுள்ளன.
அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த தேசிய விளைபொருள் விற்பனை ஆணையம் அமைக்கப்பட்டு, அதன்மூலம் விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருள்களுக்கான தொகை 30 நிமிடங்களில் அவர்களின் வங்கிக் கணக்கில வரவு வைக்கப்படும் என்றார்.
இதையடுத்து நடைபெற்ற கருத்தரங்கில் நமது நெல்லைக் காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல்.ஜெயராமன் பேசியது:
நிகழாண்டு 6,000 விவசாயிகளுக்கு தலா 2 கிலோ பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்பட உள்ளன. விதை நெல் பெறும் விவசாயிகள் அடுத்த ஆண்டில் 4 கிலோ நெல் விதைகளாக திருப்பித் தரவேண்டும். பாரம்பரிய விதைகள் மற்றும் இயற்கை விவசாயத்தைக் காக்க இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கனவை நனவாக்கும் வகையில் நெல் திருவிழாவை அரசே ஏற்று நடத்தவேண்டும் என்றார்.
பின்னர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ், விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகள் வழங்கிப் பேசினார். நபார்டு வங்கியின் திட்டங்கள், விளை நிலங்கள், நீராதாரங்கள் பாதுகாப்பு, ஒரு ஏக்கர் நிலத்தில் கால் கிலோ விதை தொழில் நுட்பம், விற்பனைச் சந்தை வாய்ப்புகள், பருவநிலை மாற்றமும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களும் ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இயற்கை விவசாயத்தில் விளைவிக்கக் கூடிய பொருள்களை சந்தைப்படுத்த முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இதைப்போக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட வேண்டும். இதற்கு வட்டார அளவில் சந்தைகளை உருவாக்க வேண்டும். விவசாயிகள் விளைவித்த தானியங்களுக்கான விலையை விவசாயிகளே நிர்ணயிக்கும் நிலை ஏற்படவேண்டும் என கருத்தரங்கில் பேசியவர்கள் வலியுறுத்தினர்.
இக்கருத்தரங்க வளாகத்தில் கிச்சலி சம்பா, கைவர சம்பா, இழுப்பப்பூ சம்பா, மாப்பிள்ளை சம்பா, குழியடிச்சான், காட்டுயானம் உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இவ்விழாவில் புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் விவசாயிகள் பங்கேற்றனர்.
திருவாரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மயில்வாகனன், பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் என்.வி. சுப்பாராவ், மாவட்ட நபார்டு வளர்ச்சி மேலாளர் பேட்ரிக்ஜாஸ்பர், விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் வலிவலம் மு. சேரன், வேலுடையார் கல்வி அறக்கட்டளை நிர்வாகி தியாகபாரி, நகர மேம்பாட்டுக் குழுத் தலைவர் டாக்டர் டி.ராஜா, வர்த்தகர் சங்கத் தலைவர் கே.எஸ். செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com