வறட்சியின் வரப்பிரசாதம்: குறைந்த செலவில் தீவன உற்பத்தி!

வறட்சியால் ஏற்பட்டுள்ள பசுந்தீவனத் தட்டுப்பாட்டைப் போக்கக் கால்நடைத் துறை சார்பில் மண்ணில்லாமல்
வறட்சியின் வரப்பிரசாதம்: குறைந்த செலவில் தீவன உற்பத்தி!

வறட்சியால் ஏற்பட்டுள்ள பசுந்தீவனத் தட்டுப்பாட்டைப் போக்கக் கால்நடைத் துறை சார்பில் மண்ணில்லாமல் பசுந் தீவனம் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதோடு, கோடை வெப்பமும் உக்கிரமாக உள்ள நிலையில் விவசாயப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், விவசாயத்தின் சார்புத் தொழிலான கால்நடைத் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு பசுந்தீவனத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

மண்ணில்லா பசுந்தீவனம் வளர்ப்பு: இதற்கிடையே, மண்ணில்லா பசுந்தீவனம் வளர்ப்பு (ஹைட்ரோபோனிக்ஸ்) எனும் முறையைக் கால்நடைத் துறை அறிமுகம் செய்துள்ளது.

இந்த நிலையில், புதிய தொழில்நுட்பம் குறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

இந்த முறைக்கு செங்குத்தான விவசாயம் என்று பெயர். ஆகவே, தட்டுகளை வைக்க ஸ்டேன்டு செய்ய வேண்டும். இதில், ஓர் அடுக்குக்கும், இன்னொரு அடுக்குக்கும் 1 அடி இடைவெளி வைக்க வேண்டும். மொத்த ஸ்டேன்டின் உயரம் 6 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஸ்டேன்டின் நீளம், அறையின் அளவு மற்றும் அமைப்பு மாறுபடும். இதுதவிர, 1 அடி அகலம், ஒன்றரை அடி நீளம், 3 அங்குலம் உயரம் உள்ள பிளாஸ்டிக் தட்டுகள் தேவைப்படும். தண்ணீர் தெளிக்க ஸ்பிரேயர், விதைகளை ஊறவைக்க பிளாஸ்டிக் வாளி, முளைப்புக் கட்ட கோணி சாக்கு, ஈரப்பதம் மற்றும் குளிர் நிலையை அறிய ஒரு தெர்மா மீட்டர் ஆகியவையும் தேவைப்படும்.

மக்காச்சோளம், கோதுமை, பார்லி, ஓட்ஸ், சணப்பை, கொள்ளு மற்றும் தட்டைப்பயறு போன்ற பயிர் வகைகளை இந்த மண்ணில்லாத தீவன முறையில் வளர்க்கலாம். இதில்,விவசாயிகளுக்கு எளிதாக கிடைப்பது மக்காச் சோளம். புதிய நன்கு காய்ந்த பூசனம் பிடிக்காத நன்கு விளைந்த முளை உடையாத மக்காச் சோளத்தை தேர்வு செய்ய வேண்டும். சோளம் பயிரிட்டால், இளம் சோளப் பயிரில் நச்சுத்தன்மை இருக்கும். அதனால் அதை தவிர்ப்பது நல்லது.

வளர்ப்பு அறை: "கிரீன் ஹவுஸ்' எனப்படும் பசுமைக் கூடாரம் அமைத்துக் கொள்ளலாம். சூரிய ஒளி நன்கு கிடைக்கக் கூடிய இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். பயிர் வளர்ச்சிக்கு சூரிய ஒளி மிக அவசியமாகும். சூரிய ஒளியைக் கடத்தக் கூடிய புறஊதாக் கதிரால் பாதிப்பு ஏற்படுத்தாத கெட்டியான பாலித்தீன் பையினால் சுற்றி மூட வேண்டும். வளர்ப்பு அறைக்குள் இருக்கும் குளிர் நிலையும், காற்றின் ஈரப்பதமும் வெளியேறக் கூடாது. வசதிக்கேற்ப நீள அகலத்தில் ஸ்டேன்டுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டேன்டுகளை இரும்பு அல்லது பி.வி.சி. குழாய் அல்லது மரத்தால் செய்து கொள்ளலாம். தினமும் பலமுறை தண்ணீர் தெளிக்கப்படுவதால், தண்ணீரால் பாதிப்பு ஏற்படாத பொருள்களால் ஸ்டேன்டு அமைத்துக்கொள்ள வேண்டும். பயிர் வளர்ப்பு அறையின் தரையில் குறைந்தது அரை அடி உயரத்துக்கு ஆற்று மணல் போட வேண்டும்.

ஓர் அடி அகலம், ஒன்றரை அடி நீளம், 3 அங்குலம் உயரம் உள்ள பிளாஸ்டிக் தட்டுகளின் அடியில் 3.5 மில்லி மீட்டர் அளவுள்ள 12 துளைகள் இட வேண்டும். அதிகப்படியான தண்ணீர் இந்த துளைகள் வழியாக வெளியேற்றப்படுகிறது.
பயிர் வளர்ப்பு முறை: ஒன்றரை சதுர அடி பரப்பளவுள்ள தட்டு ஒன்றுக்கு 300 கிராம் அளவுக்கு மக்காச்சோள விதை போதுமானது. மக்காச் சோளத்தின் திரட்சி, அளவின்படி இந்த அளவை கூட்டியோ அல்லது குறைத்தோ பயன்படுத்தலாம். நாள் ஒன்றுக்கு எத்தனை தட்டுகள் தீவனம் தேவையோ, அதேபோல் 8 மடங்கு வாங்க வேண்டும்.

 உதாரணமாக, ஒரு நாளைக்கு தேவை 10 தட்டுகள் தீவனம் என்றால், 80 தட்டுகள் வாங்க வேண்டும். 10 தட்டுகளுக்குத் தேவையான 3 கிலோ மக்காச் சோளத்தை நீரில் நன்கு மூழ்கும்படி பிளாஸ்டிக் வாளியில் 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

ஊறிய விதையை சணல் சாக்கில் கட்டி 24 மணி நேரத்துக்கு இருட்டில் வைக்க வேண்டும். மீண்டும் 24 மணி நேரம் கழித்துப் பார்த்தால் விதைகளில் சிறுமுளை விட்டிருக்கும்.

முளைவிட்ட விதைகளை பிளாஸ்டிக் தட்டுகளில் தட்டு ஒன்றுக்கு சுமார் 300 கிராம் வீதம் இடைவெளியின்றி ஒரு விதையின்மேல் இன்னொரு விதை விழாத வகையில் பரப்பி, சில நிமிடங்கள் காற்றோற்றமாக வைக்க வேண்டும். பிறகு தட்டுகளை வளர்ப்பு அறைக்கு எடுத்துச் சென்று ஸ்டேன்டில் அடுக்கி வைத்து, நீர் தெளிப்பான் மூலம் தண்ணீரை புகைபோல் தெளிக்க வேண்டும். விதைகளில் எப்போதும் ஈரப்பதம் குறையாமல் வைத்திருக்க வேண்டும்.

மண்ணில்லா தீவனப் பயிருக்கு தண்ணீர் மிக குறைவாகத்தான் தேவைப்படுகிறது. அடிக்கடி தண்ணீர் தெளிப்பது மிக அவசியம். அறையின் வெப்ப நிலை 24-25 டிகிரி வரையிலும் காற்றின் ஈரப்பதம் 80-85 விழுக்காடாகப் பராமரித்தால், விளைச்சல் நன்றாக இருக்கும். அளவுகளில் கொஞ்சம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் பெரிய பாதிப்பு இல்லை. அறையின் வெப்பநிலையைக் குறைக்க அறையின் தரையில் மணல் பரப்ப வேண்டும். மண்ணில்லா தீவன வளர்ப்பு முறையில் 7 நாட்களில் 25 முதல் 30 செ.மீ. உயரப் பயிராக வளர்ந்து விடுகிறது.

மண்ணில்லா பசுந்தீவனத்தில் உள்ள சத்துகள்: மண்ணில்லாமல் வளர்க்கப்பட்ட தீவனத்தில் அதிக புரதச் சத்து (13.6), குறைந்த நார்ச்சத்து இருப்பதால், கால்நடைகளுக்கு நாள் ஒன்றுக்கு 10 -25 கிலோ வரை கொடுக்கலாம்.

இந்தத் தீவனத்தை அளித்து கறவை மாடுகளில் பரிசோதனை செய்ததில் 7-8 கிலோ பசுந்தீவனம் கொடுப்பதால், ஒரு கிலோ அடர் தீவன அளவைக் குறைப்பதோடு 15 சதவீதம் பால் உற்பத்தி அதிகரிக்கும்.

மேலும், கால்நடைகளில் பரிசோதனை செய்ததில் 10 கிலோ பசுந்தீவனம் கொடுப்பதால், 1.70 கிலோ எடை அதிகரித்ததும் கண்டறியப்பட்டுள்ளது. பாலின் கொழுப்பு 0.3 சதவீதம், கொழுப்பில்லாத திடப் பொருட்கள் அளவு 0.5 சதவீதம் அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. மண்ணில்லாத தீவனப் பயிரில் இலை, வேர், விதைப் பகுதி என மூன்றையும் கால்நடைகளுக்குத் தீவனமாக அளிக்கலாம்.

மண்ணில் பயிர் நடவு செய்து 25-30 செ.மீட்டர் உயரம் வளர்ப்பதற்கு எவ்வளவு தண்ணீர் செலவு செய்கிறோமோ, அதில் 5 சதவீதத்துக்கும் குறைவான அளவு தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி, அதே அளவு தீவன மகசூல் எடுக்க முடியும். இந்த பசுந் தீவனத்தை பசுக்களுக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தால், பாலின் அளவு அதிகரிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com