நெற்பயிரில் இயற்கை முறையில் பூச்சிக்கட்டுப்பாடு: வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம் வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

நெற்பயிரில் இயற்கை முறையில் பூச்சிக்கட்டுப்பாடு: வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம் வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

நெல்லில் இயற்கை முறையில் பூச்சிக் கட்டுப்பாடு குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் பரிந்துரை அளித்துள்ளனர்.

நீடாமங்கலம்: நெல்லில் இயற்கை முறையில் பூச்சிக் கட்டுப்பாடு குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் பரிந்துரை அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் முனைவர் ராஜா.ரமேஷ், ஆ. பாஸ்கரன் ஆகியோர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நெல் சாகுபடியில் உழவியல் முறைகளை சரியாக பின்பற்றினாலே பெரும்பான்மையான பூச்சிகளின் தாக்குதலிலிருந்து நெற்பயிரை பாதுகாக்க முடியும். பட்டம் விட்டு நடுதல் மற்றும் பயிர் இடைவெளி குறைந்த அளவு இருக்கும் போது புகையான், ஆனைக்கொம்பன் ஈ மற்றும் இலை மடக்குப் புழுவின் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். ஒற்றை நாட்டு முறையில் அதிக இடைவெளியில் நடப்படுவதால் பூச்சிகளின் தாக்குதல் குறைவாகக் காணப்படும். 
நீர் நிர்வாகம்: வெள்ள நீர்ப் பாய்ச்சுவதால் ஆனைக்கொம்பன் ஈ, மாவுப்பூச்சி மற்றும் படைப் புழுவின் தாக்குதல் குறைவாக இருக்கும். தண்ணீரை 3 அல்லது 4 நாள்களுக்கு வடித்து விடுவதால் புகையான் மற்றும் குருத்து ஈ ஆகியவற்றின் தாக்குதலைக் குறைக்க இயலும். காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர் கட்டுவதால் புகையான் மற்றும் நாவாய்ப் பூச்சிகளின் தாக்குதல் குறையும்.
களைக் கட்டுப்பாடு: களைகளானது பெரும்பாலான தீமை செய்யும் பூச்சிகளுக்கும் மற்றும் நோய் காரணிகளுக்கும் மாற்று உறைவிடமாய் இருந்து அவற்றின் பெருக்கத்துக்கு உதவி புரிகின்றன. எனவே, களைகள் இல்லாமல் இருப்பது அவசியமான ஒன்றாகும்.
உர நிர்வாகம்: மக்கிய தொழு உரம், பசுந்தாள் மற்றும் உயிர் உரங்களை பெருமளவில் பயன்படுத்த வேண்டும். தழைச்சத்து உரங்களை அதிகமாகப் பயன்படுத்தினால் நெற்பயிர் பூச்சிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும். மிதமான மற்றும் அதிகமான சாம்பல் சத்து உரங்கள் பயிர்களை பூச்சிகள் தாக்காத வண்ணம் காக்கும். மண் பரிசோதனை முடிவுகளின்படி பரிந்துரை செய்யப்படும் அளவுகளில் மட்டுமே ரசாயன உரங்களை வயலில் இடவேண்டும். 
தழைச்சத்து நிர்வாகம்: தழைச்சத்து உரங்களை தேவைக்கு அதிகமாக அளிக்கும்போது தண்டுத்துளைப்பான், பச்சை தத்துப்பூச்சி, புகையான் மற்றும் இலைமடக்குப் புழு தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, தழைச்சத்து உரங்களை 3 அல்லது 4 முறைகளாகப் பிரித்து ஜிப்சம் மற்றும் வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றுடன் 5:4:1 என்ற அளவில் கலந்து அளிப்பதன் மூலமாக பெரும்பாலான பூச்சிகளின் தாக்குதலைக் குறைக்கலாம். 
வரப்புகளில் பயறு வகை பயிர்களை வளர்த்தல்: வயல் வரப்புகளில் உளுந்து மற்றும் தட்டைப் பயறு போன்ற பயறுவகைப் பயிர்களை வளர்ப்பதன் மூலம் நன்மை செய்யும் உயிரினங்களான பொறிவண்டு, சிலந்திகள் போன்றவை பல்கி பெருகி, நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகளை அழிக்கும். 
பயிர் சுழற்சி முறை: வருடம் முழுவதும் நெற்பயிரையே தொடர்ந்து பயிர் செய்வதை தவிர்த்து, உளுந்து, பச்சைப்பயறு, பருத்தி, எள், கடலை, காய்கறிப் பயிர்கள் போன்றவற்றைப் பயிர் செய்வதன் வாயிலாக பல்வேறு தீமை செய்யும் பூச்சிகள் தங்களது வாழ்க்கை சுழற்சிக்கு தேவையான பயிர்கள் இல்லாத காரணத்தால், அவற்றினால் தொடர்ந்து பல்கி பெருக இயலாமல் இறந்துவிடும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com