ஏழைகளின் உணவு குதிரைவாலி...!

வறட்சியைத் தாங்கி வளரும் தன்மையுடைய பயிரான குதிரைவாலி, தண்ணீர் தேங்கினாலும் தாக்குப்பிடிக்கக் கூடியது
ஏழைகளின் உணவு குதிரைவாலி...!

அரக்கோணம்: வறட்சியைத் தாங்கி வளரும் தன்மையுடைய பயிரான குதிரைவாலி, தண்ணீர் தேங்கினாலும் தாக்குப்பிடிக்கக் கூடியது. இது மானாவாரியில் அதிகளவு பயிரிடப்படுகிறது. 40 சதவீத புரதசத்து கொண்டது. ஏழை மக்கள் பெரும்பாலானோரின் உணவாக குதிரைவாலி தானியம் விளங்குகிறது. இதுபோக மது தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. 
இந்தியாவில் தமிழ்நாடு, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் பிகார் போன்ற மாநிலங்களில் அதிகளவு பயிரிடப்படுகிறது. 
குதிரைவாலி வெப்பம் மற்றும் வெப்பம் சார்ந்த காலநிலைகளில் நன்கு வளரும். மற்ற பயிர்களைக் காட்டிலும் மாறுபட்ட சீதோஷ்ண நிலைகளையும் தாங்கி வளரக்கூடியது. இது தண்ணீர் தேங்கிய ஆற்றுப் படுகை, களி மண்நிலங்களில் நன்கு வளரும். கற்கள் நிறைந்த மண் மற்றும் குறைந்த சத்துக்கள் உடைய மண் சாகுபடிக்கு குதிரைவாலி ஏற்றதல்ல.
பயிரிடும் முறை: குதிரைவாலியை பயிரிட விரும்புவோர் முதலில் நிலத்தை அதற்கேற்றாற்போல் தயார்படுத்துவது மிக முக்கியம். இரண்டு முறை நிலத்தை கலப்பை கொண்டு உழுது சமன்படுத்தி விதைப்படுக்கையை தயார்படுத்த வேண்டும். 
பருவமழை தொடங்கியவுடன் 15 நாள்களுக்கு விதைக்க வேண்டும், விதைகளை தெளித்தல் அல்லது பார்பிடித்து 3-4 செ.மீ. துளையிட்டு விதைக்கலாம். ஒரு ஹெக்டேருக்கு 8 முதல் 10 கிலோ விதை தேவைப்படும். வரிசைக்கு வரிசை இடைவெளியாக 25 செ.மீ. விடலாம்.
ஒரு ஹெக்டேருக்கு 5 முதல் 10 டன்கள் தொழு உரம் இடலாம். தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை கிலோ ஒரு ஹெக்டேருக்கு 40:30:50 என்ற விகிதத்தில் இடவேண்டும். விதை விதைத்த பிறகு உரம் முழுவதையும் போட வேண்டும். நீர்பாசனப் பகுதிகளில் பாதியளவு தழைச்சத்தை விதைத்த 25 முதல் 30 நாள்களுக்கு பிறகு இடலாம். 
பொதுவாக, குதிரைவாலிக்கு நீர்ப்பாசனம் தேவையில்லை வறண்ட சூழ்நிலை நிலவினால் ஒருமுறை நீர்ப்பாசனம் பூங்கொத்து வரும் தருனத்தில் அளிக்க வேண்டும். அதிகப்படியான மழை பொழியும் காலங்களில் வடிகால் வசதி ஏற்படுத்தி நீரை வெளியேற்ற வேண்டும்.
வயலில் விதைத்த 25 முதல் 30 நாள்கள் வரை களை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் இரு முறை களை எடுத்தல் போதுமானது. கைகொத்து அல்லது சக்கர கொத்தி மூலம் களை எடுக்கலாம். பல்வேறு நோய்கள் குதிரைவாலியைத் தாக்கக்கூடும். அவற்றில் பூஞ்சாண காளாண் நோய், கரிப்பூட்டை நோய், துருநோய் ஆகியன முக்கியமானவை.
பூஞ்சான் காளான் நோயால் பாதிக்கப்பட்ட செடியைப் பிடுங்கி எறிவதன் முலம் கட்டுப்படுத்தலாம். விதைகளை ஆரோக்கியமான செடிகளில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். கரிப்பூட்டை நோயும் ஒரு வகை பூஞ்சான் காளான் நோயாகும். இதை விதை நேர்த்தி மூலம் அக்ரோசன் 2.5 கிராம் ஒரு கிலோ விதைக்கு என்ற விகிதத்தில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். சுடு தண்ணீரில் நனைத்தும் (55 செல்சியஸ் 7 முதல் 12 நிமிடங்களில்) விதைக்கலாம். துரு நோயும் பூஞ்சான் காளான் நோயே ஆகும். டைத்தேன் எம்-45, 2 கிலோவை 1000 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.
குதிரைவாலியை பொருத்தவரை பூச்சி கட்டுப்பாடும் அவசியம். தண்டு துளைப்பான் பூச்சியை திமெட் குருணை 15 கிலோ ஒரு ஹெக்டேருக்கு என்ற விகிதத்தில் இடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். இதில், அறுவடை மற்றும் கதிரடித்தல் பொறுமையாக செய்தல் முக்கியம். கதிர்களை காளைகளின் கால்களில் போட்டு நசுக்கி தானியங்களைப் பிரித்தெடுக்கலாம். 
மகசூல், சராசரியாக ஒரு ஹெக்
டேருக்கு 400 முதல் 600 கிலோ தானியமும், 1,200 கிலோ வைக்கோலும் கிடைக்கும். மேம்படுத்தப்பட்ட சாகுபடி முறைகளால் 10 முதல் 12 குவிண்டால் வரை கூடுதல் தானிய மகசூல் பெறலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com