மருத்துவக் குணம் நிறைந்த மணத்தக்காளி!

தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்வதில் ஆர்வமுடைய விவசாயிகள் மருத்துவக் குணம் நிறைந்த மணத்தக்காளி சாகுபடி செய்து நல்ல வருவாய் ஈட்டலாம் என, தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.
மருத்துவக் குணம் நிறைந்த மணத்தக்காளி!

திருநெல்வேலி: தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்வதில் ஆர்வமுடைய விவசாயிகள் மருத்துவக் குணம் நிறைந்த மணத்தக்காளி சாகுபடி செய்து நல்ல வருவாய் ஈட்டலாம் என, தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.
பயன்கள்: மணத்தக்காளி வாத நோய், வீக்கம், இருமல், ஆஸ்துமா, மார்புச்சளி நோய், காயம், அல்சர், வயிறுப் பொருமல், வயிறு மந்தம், ஈரல் வீக்கம், காதுவலி, கண் மருத்துவம், வாந்தி, இதய நோய், தொழு நோய், தோல் நோய்கள், காய்ச்சல், மண்ணீரல் வீக்கம், நச்சுத் தடை மருந்து, ஒவ்வாமை, செரிமானம், குடலிளக்கி, புத்துணர்ச்சி, மனதை அமைதிப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும், சத்து மருந்தாகவும் முழுத் தாவரமும் பயன்படுகிறது.
மண், காலநிலை: வெப்ப, மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் 2,000 மீ குத்துயரத்தில் மணத்தக்காளி நன்கு வளரும். அங்ககத் தன்மை அதிகமுள்ள மண் ஏற்றது. வறண்ட, கற்கள் நிறைந்த, மணற்பாங்கான அல்லது ஆழமான மண்ணில் நன்கு வளரும். ஈரப்பத மணலில் களையாக வளரும். வெப்ப, மிதவெப்ப மண்டல வேளாண் காலநிலை மண்டலத்தில் சாகுபடி செய்யலாம்.
நாற்றங்கால், நடவு: விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. நாற்றுகள் நாற்றங்காலிலிருந்து 30 முதல் 45 நாளில் பயிர் 8 முதல் 10 செமீ உயரம் அடைந்தவுடன் விளைநிலங்களில் நடவு செய்யப்படுகிறது. மழைக் காலத்தில் வரப்புகளிலும், வெயில் காலத்தில் வாய்க்காலிலும் நடவு செய்யப்படுகிறது. 30-க்கு 90 செமீ இடைவெளியில் பயிரின் படரும் தன்மையைப் பொறுத்து நடவேண்டும். வெயில் காலங்களில் நட்ட பயிருக்கு தாற்காலிக நிழல் 4 நாளுக்கு அளிக்க வேண்டும்.
உர மேலாண்மை: நிலத்தை தயாரிக்கும்போது தொழுவுரம் ஹெக்டேருக்கு 20 முதல் 25 டன் அளிக்க வேண்டும். தழை, மணி, சாம்பல் சத்து ஹெக்டேருக்கு முறையே 75: 40: 40 என்ற விகிதத்தில் அளிக்க வேண்டும். சாம்பல் சத்தை அடியுரமாகவும், தழை, மணிச்சத்தை 2 அல்லது 3 பிரிவுகளாகவும் அளிக்க வேண்டும்.
நீர் மேலாண்மை: நாற்றங்கால், பயிருக்கு வார இடைவெளியில் பாசனம் செய்ய வேண்டும். பயிரில் பூ அரும்பும் வரை பாசனம் செய்ய வேண்டும்.
ஊடுசாகுபடி: களை எடுத்த பின், மேலுரம் அளித்த பின் பயிருக்கு மண் அணைக்க வேண்டும். வெயில் காலங்களில் 3 முதல் 4 நாளுக்கு ஒருமுறையும், காய்ப் பருவத்தில் ஒருநாள் விட்டு ஒருநாளும் பாசனம் செய்ய வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு: இப்பயிரைத் தாக்கும் தண்டுத் துளைப்பான், மாவுப்பூச்சி, இலை பிணைக்கும் புழு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த மிதமான பூச்சிக்கொல்லி தெளித்தால் போதும். வேர் முடிச்சுப் புழு, வாடல் நோய் ஆகியவற்றை நிலத்தை சுத்தப்படுத்துதல், பயிர் சுழற்சி, பயிர் எச்சங்களை எரிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
அறுவடை, மகசூல்: மண், காலநிலையைப் பொறுத்து மணத்தக்காளி 4 முதல் 6 மாதங்களில் அறுவடைக்குத் தயாராகும். மணத்தக்காளி செடியைச் சேகரித்து நிழலில் உலர்த்த வேண்டும்.
மகசூல்: ஹெக்டேருக்கு 12 முதல் 20 டன் மூலிகை கிடைக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com