தரிசு நிலத்தில் உளுந்து சாகுபடி!

நன்செய் தரிசு நிலத்தில் உளுந்து சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என, வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.
தரிசு நிலத்தில் உளுந்து சாகுபடி!

திருநெல்வேலி: நன்செய் தரிசு நிலத்தில் உளுந்து சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என, வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.
மூளை, தசை வளர்ச்சிக்கு மிகவும் தேவையான புரதச் சத்து உளுந்தில் அதிகம் உள்ளது. இதை 65 முதல் 70 நாளில் சாகுபடி செய்து அதிக மகசூல், கூடுதல் லாபம் பெறலாம். எனவே, நன்செய் தரிசு நிலத்தில் விவசாயிகள்உளுந்து சாகுபடி செய்து குறைந்த நாளில் அதிக மகசூல் பெறலாம்.
சாகுபடி நுட்பம்: வி.பி.என் (பிஜி) 5, வி.பி.என் (பிஜி) 6 ஆகிய ரகங்களை விதைக்கலாம். ஏக்கருக்கு 8 கிலோ விதை தேவை. 
பூஞ்சாண விதை நேர்த்தி: விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த, விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பண்டசிம் கலந்து விதைக்க வேண்டும். அல்லது உயிரியல் முறையில் ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி கலந்து விதைக்க வேண்டும். 
உயிர் உர விதை நேர்த்தி: ஒரு பொட்டலம் ரைசோபியம், ஒரு பொட்டலம் பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களை 500 மில்லி சூடு - ஆடை இல்லாத அரிசிக் கஞ்சியில் கரைத்து, பூஞ்சாண விதை நேர்த்தி செய்த விதைகளைக் கலந்து 15 நிமிடம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். 
இலைவழி உரமிடும் முறை: டி. ஏ.பி. 2 சத கரைசல் தெளித்தல் : 4 கிலோ டி. ஏ. பி. உரத்தை முதல் நாள் இரவு 10 லிட்டர் நீரில் ஊற வைத்து, ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை குச்சியால் கலக்கவேண்டும். அடுத்தநாள் தெளிந்த நீரை வடிகட்டி, 190 லிட்டர் நீருடன் கலந்து, செடி முழுவதும் நன்கு நனையும் வகையில் கைத்தெளிப்பானால் மாலை நேரங்களில் ஒரு ஏக்கர் பரப்பில் தெளிக்க வேண்டும். பூக்கும் தருணத்திலும், 15 நாளுக்குப் பிறகும் 2 முறை தெளிக்க வேண்டும்.இதன் மூலம் பூ அதிகம் உற்பத்தியாகும். கூடுதலாக காய் பிடித்து அதிக மகசூல் கிடைக்கும். 
பயறு பூஸ்டர்: பூ உதிர்வைத் தடுக்கவும், மகசூல் அதிகரிக்கவும், வறட்சி தாங்கும் தன்மை பெறவும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தயாரித்து வழங்கும் பயறு பூஸ்டர் 2 கிலோவை 200 லிட்டர் நீரில் கலந்து, ஒட்டும் திரவம் சேர்த்து பூக்கும் தருணத்தில் ஒருமுறை தெளிக்க வேண்டும். பயறு பூஸ்டர் தெளித்தால் டி. ஏ.பி தெளிக்க வேண்டிய தில்லை.தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், உளுந்து விதைகள் ஒரு கிலோ ரூ. 25 மானியத்தில் வேளாண் விரிவாக்க மையங்களில் விநியோகிக்கப்படுகிறது. பிரதம மந்திரி விவசாய நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ், கிணறு, ஆழ்துளைக் கிணறு வைத்துள்ள சிறு - குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும், உளுந்து பயிருக்கு சிக்கன நீர்ப்பாசனத்துக்கு உதவும் தெளிப்பு நீர்ப்பாசனம் அமைக்கலாம்.
விவசாயிகள் அரசு வழங்கும் மானியத் திட்டங்களை வேளாண் துறையை அணுகிப் பெறலாம். எனவே, உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகள் மேற்கண்ட தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி மானியத் திட்டங்களைப் பெற்று, உளுந்து சாகுபடியில் உயர் மகசூலும், அதிக லாபமும் பெற்றுப் பயனடையலாம் என அம்பாசமுத்திரம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com